மகதலா மரியா
இன்று நாம் நினைவுகூர்ந்து கொண்டாடும் இளவல் விவிலியத்தின் பக்கத்தை பல நூறு ஆண்டுகளாக அலங்கரித்துக்கொண்டிருப்பவர். விவிலியத்திற்குள் வராத நூல்களிலும் இவரைப் பற்றிய நிறைய தகவல்கள் உள்ளன. இவர் இப்படி இருந்திருப்பார் என்று சில பதிவுகள், இவர் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று சில பதிவுகள், இப்படித்தான் இவர் இருந்தார் என்று சில பதிவுகள். ஓவியம், நாடகம், புதினம், திரைப்படம் என்னும் பல தளங்களில் பலரின் கற்பனைத் திறனைத் தட்டி எழுப்பியவர் இவர். இவருடைய அறநெறி, பண்புகள், செயல்கள், நம்பிக்கை ஆகியவை பற்றி நிறைய சொல்லப்பட்டாலும் ஒன்றை மட்டும் நாம் உறுதியாக அறிந்துகொள்ள முடிகிறது: 'உயிர்த்த இயேசுவைத் தொடுகின்ற தூரத்தில் மகதலா மரியா இருந்தார்!'
சுதந்திரமான பெண் இவர்.
அது என்ன சுதந்திரம்? ஏனெனில், விவிலியம் இவருடைய பெயரை ஊரின் அடைமொழி கொண்டு அறிமுகம் செய்கிறது. அன்றைய காலத்தில் பெண்கள் தங்களுடைய தந்தை அல்லது மகன் அல்லது கணவருடைய பெயராலே அறிமுகம் செய்யப்படுவர். எ.கா. 'கூசாவின் மனைவி யோவன்னா' (லூக் 8:3), 'இயேசுவின் தாய் மரியா' (காண். யோவா 2:2). எந்தவொரு இரத்த உறவும் திருமண உறவும் இவருடைய பெயராக ஒட்டிக்கொள்ளாததால், இவர் 'ஒரு மாதிரியான' பெண் என்று சொல்கிறது மரபு. இதன் பின்புலத்திலேயே இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்கள் முன்மொழிகின்றன.
இவரைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் அனைத்திலும் இவர் செந்நிற ஆடை அணிந்தவராக இருக்கின்றார். ஏனெனில், அன்றைய காலத்தில் விலைமாதர்கள் செந்நிற ஆடையே அணிந்திருந்தனர். யோசுவா நூலில் வருகின்ற இராகாபு கூட தன் இல்லத்தை அடையாளப்படுத்துவதற்காக செந்நிற நூல் ஒன்றைத் தன் ஜன்னலில் கட்டி வைக்கின்றார். லூக்கா 7:39இல் வருகின்ற பாவியான பெண் இவர் என்று சிலர் சொல்கின்றனர். இன்னும் சிலர் யோவான் 12இல் வரும் மரியாவுடன் இணைத்துப் பார்க்கின்றனர்.
இன்னொரு புறம், 'ஏழு பேய்கள் நீங்கள் பெற்ற மகதலா மரியா' என்று நற்செய்தியாளர்கள் (காண். லூக் 8:2, மாற் 16:9) இவரை வரையறுப்பதும் நமக்கு நெருடலாக இருக்கின்றது. 'ஏழு' என்பது அவர் அனுபவித்த துன்பத்தைக் குறிக்கும் அடையாளமே தவிர, அவரைப் பற்றிய நலக்குறைவான பார்வையை நாம் பெறவேண்டியதில்லை.
இன்றைய நற்செய்தி அவரைப் பற்றிய மிக அழகான பதிவாக இருக்கின்றது.
'வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே கல்லறைக்குச் செல்கின்றார்' இளவல். சிலுவையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட இறந்த தன் போதகரின் உடலுக்கான இறுதி மரியாதையைச் செலுத்தச் செல்கின்றார் மரியா. தன் போதகரின், தன் தலைவரின் உடலின் வெற்றிடங்களில் நறுமணத் தைலம் பூச வேண்டும் என்று நினைத்தவர் வெற்றுக்கல்லறை கண்டு வியந்து நிற்கின்றார்.
விரைந்து வந்த சீடர்கள் வெற்றுக் கல்லறை கண்டவுடன் விரைந்து இல்லம் செல்கின்றனர்.
உள்ளத்தில் வெறுமை, கண்முன் வெற்றுக் கல்லறை.
தனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லாத நிலையில் அங்கே நின்று அழத் தொடங்குகின்றார் இளவல். அவளுடைய கண்ணீர் அவளது வாழ்க்கையைச் சுற்றியிருந்த துணிகளையும் அவள் அணிந்திருந்த துணிகளையும் சேர்த்தே நனைக்கின்றது. 'உன் கண்ணீரின் வழியாக மட்டுமே வானதூதரைக் காணமுடியும்' என்ற அன்றைய சொலவடையை அவள் அறிந்திருந்தாளோ என்னவோ, தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறாள். வானதூதர்கள் வரமாட்டார்கள் என்று அவருடைய மூளை சொல்லத் தொடங்குகிறது.
ஆனால், வானதூதரை அவள் காணவில்லை. உயிர்த்த ஆண்டவரையே காண்கின்றார். அவ்வளவு ஆற்றல் மிக்கது அவளுடைய கண்ணீர்.
கல்லறையிலிருந்து திரும்பிப் பார்க்கிறார். அங்கே இயேசு நிற்கின்றார்.
உரையாடல் தொடர்கிறது.
'மரியா' என இயேசு சொல்ல, 'ரபூனி' எனத் திரும்புகின்றார் மரியா.
ஏற்கெனவே திரும்பித்தானே இருக்கின்றார். அப்புறம் ஏன் திரும்புகிறார்?
இவ்வளவு நேரம் இவளுடைய உடல்தான் திரும்பியிருந்தது. இப்போது இவளுடைய உள்ளம் இயேசுவை நோக்கித் திரும்புகிறது.
அவளுடைய அழுகை மகிழ்ச்சியாக மாறுகிறது.
சுதந்திரமாக இருந்த அவள் சுதந்திரமாகவே மாறுகிறாள்.
கட்டின்மையில் தன் வாழ்க்கையை நகர்த்தியவள் கட்டின்மைக்குள் நுழைகின்றாள்.
'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்னும் அவளுடைய சொற்களே அதற்குச் சான்று.
இந்த இளவலின் திருநாள் நமக்குத் தரும் செய்தி என்ன?
(அ) நாம் இன்று இந்த இளவலைப் போலவே நிறைய பேருடைய எண்ணங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றோம். நம் அறநெறி, மதிப்பீடுகள், இருத்தல், இயக்கம், வேலை பற்றி நிறையப் பேர் எந்நேரமும் எதுவோ சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். பல வாரங்களாக தெருவில் நிற்கப்பட்ட வாகனம் ஒன்றில் அன்றாடம் தூசி அடுக்கடுக்காகப் பதிந்துகொண்டிருப்பதுபோல, நம்மைப் பற்றிய பார்வைகளும் எண்ணங்களும் நம்மேல் படிந்துகொண்டே இருக்கின்றன. இப்படிமங்களால் வாகனம் தன் இயல்பை ஒருபோதும் இழப்பது இல்லை. மறுபடியும் தூசு தட்டினால் வாகனம் ஓடும்.
(ஆ) இன்னொரு பக்கம் நாம் மற்றவர்கள்மேல் தூசிப் படிமங்களை ஏற்றிக்கொண்டிருக்கின்றோம். மற்றவர்களின் மதிப்பீடுகள், வாழ்க்கைத் தரம், பணி, செயல்பாடுகள் ஆகியவை பற்றிய விமர்சனங்களை வைத்துக்கொண்டே இருக்கின்றோம். எப்படி மற்றவர்களுடைய விமர்சனங்கள் நம்மைப் பாதிக்காதோ, அப்படியே நம்முடையவையும் மற்றவர்களைப் பாதிக்காது என்பதே உண்மை. அப்படியிருக்க நாம் ஏன் தூசுப் படிமங்களை அவர்கள்மேல் சுமத்த வேண்டும்? நம் கைகளும் அல்லவா தூசியாகின்றன!
(இ) எல்லாவற்றுக்கும் மேலாக, 'கிறிஸ்து வாழ்கிறார்' என்று திருத்தூதர்களுக்கும் உலகுக்கும் அறிவித்த முதல் நபர், முதல் பெண்ணாகிய இந்தப் புனிதை நமக்குச் சொல்வது இதுதான். இயேசுவின் சீடராக இருப்பது. எந்த நிலையில் தன் வாழ்க்கை புறப்பட்டாலும் கண்களை இயேசுவின்மேல் மட்டுமே பதித்து, அவருடைய சிலுவைப் பாதையில் பின்தொடர்ந்தாள் மகதலா மரியா. இறுதியில், தன் அழுகையும் வெற்றுக் கல்லறையும் அவருடைய இறையனுபவத்தின் தளங்களாக மாறின. தனிமையிலும் வெறுமையிலும் கையறுநிலையிலும் இருளிலும் குளிரிலும் நாம் வடிக்கும் கண்ணீர் வானதூதர்களை அல்ல, கடவுளையே நம்முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று உணர்த்துகிறார் இந்த மாமனிதை. நம் எதிர்பார்ப்புகள் விரக்தியாக மாறுகின்றபோது, நம் முயற்சிகள் தோல்வியாக முடிகின்றபோது நாம் செய்ய வேண்டியதெல்லாம் உட்கார்ந்து அழவேண்டியது மட்டும்தான். அங்குதான் கிறிஸ்து வாழ்கின்றார். அவர் நம்மைச் சந்திக்கின்றார். நம்மைச் சந்திக்கும் அவர் நம் உலகுக்கு நம்மை மீண்டும் அனுப்புகின்றார்.
கட்டுகள் அறுபட்டம் நாமும், இளவலோடு இணைந்து,
'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்று சொல்ல முடியும்.
மகதலா மரியாவைப் பற்றி புதிய கோணத்தில் கருத்துக்களைத் தந்த தந்தைக்கு நன்றிகள்
ReplyDelete