Tuesday, July 19, 2022

எரேமியாவின் அழைப்பு

இன்றைய (20 ஜூலை 2022) முதல் வாசகம் (எரே 1:1,4-10)

எரேமியாவின் அழைப்பு

எரேமியா தன் அழைப்பு நிகழ்வைப் பதிவு செய்வதை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இந்த அழைப்பு நிகழ்வை மூன்று நிலைகளில் சிந்தித்துப் பொருள்கொள்வோம்.

1. இறைவனின் முன்னெடுப்பு

இறைவன்தாமே இறைவாக்கினர் எரேமியாவை அழைக்கின்றார். எரேமியா தான் சிறுபிள்ளை என்று தயக்கம் காட்டுகின்றார். இறைவனின் முன்னெடுப்பு மூன்று சொல்லாடல்கள் வழியாகத் தரப்பட்டுள்ளது.

(அ) நான் உன்னை அறிந்திருந்தேன்

இது இறந்த கால அல்லது கடந்த கால நிகழ்வு. ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியாவை அவருடைய தாயின் வயிற்றில் உருவாக்குமுன்பே அறிந்திருந்ததாக மொழிகின்றார். மாந்தரின் வாழ்வு அனைத்தும் ஆண்டவரின் கையில்தாம் உள்ளது என்பதையும், ஆண்டவர் நமக்கென ஓர் இலக்கை முன்குறித்து வைக்கிறார் என்பதும் இங்கே புலப்படுகிறது.

(ஆ) நான் உன்னைத் திருநிலைப்படுத்தினேன்

இது நிகழ்காலத்தில் நடக்கக் கூடியது. 'திருநிலைப்படுத்துதல்' என்பது 'ஒதுக்கி வைத்தலை' குறிக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட பணிக்கென ஆண்டவராகிய கடவுள் எரேமியாவை ஒதுக்கி வைக்கின்றார். அத்தகைய பணிக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட அவர் தன் கவனம் முழுவதையும் தன் பணியில் செலுத்த வேண்டும். இது ஒரே நேரத்தில் இறைவன் தருகின்ற கொடையாகவும், எரேமியா ஆற்றுகின்ற பணியாகவும் இருக்கின்றது.

(இ) நான் உன்னோடு இருக்கின்றேன்

'நான் உன்னை விடுவிக்க உன்னோடு இருக்கிறேன்' என்னும் ஆண்டவரின் சொற்கள் எரேமியாவுடன் அவர் எதிர்காலத்தில் உடனிருக்கத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது. இறைவாக்கினர் பணியின் சவால்களையும் இது உள்ளடக்கியுள்ளது. 'உனக்கு இடர்கள் வராது' என ஆண்டவர் முன்மொழியவில்லை. மாறாக, இடர்கள் வரும்போது உடனிருக்கிறேன் என்கின்றார்.

2. இறைவனின் கட்டளைகள்

இறைவன் எரேமியாவுக்கு மூன்று கட்டளைகள் தருகின்றார்:

(அ) 'சிறுபிள்ளை நான் எனச் சொல்லாதே!'

அதாவது, இயலாமையை முதன்மைப்படுத்தாதே என்கிறார் ஆண்டவர். மேலும், இலக்கை அடைவதற்கு இத்தகைய சாக்குப் போக்குகள் தடையாக இருக்கும் என்பதாலும், ஒருவருக்குத் தாழ்வு மனப்பான்மையை இது ஏற்படுத்தும் என்பதாலும் இதைக் கடிந்துகொள்கின்றார் ஆண்டவர். ஆண்டவரின் அழைப்பை பெற்ற ஒருவர் அந்த அழைப்பின் வழியாகப் பெறுகின்ற முதல் கொடை தன்மதிப்பு. தன்மதிப்பு கொண்ட நபர் தன்னைத் தாழ்வாக மதிப்பிடல் கூடாது.

(ஆ) 'யாரிடமெல்லாம் அனுப்புகிறேனோ அவர்களிடம் செல்!'

அழைக்கப்பட்ட எரேமியா அனுப்பப்படுகின்றார். எரேமியா மக்களுக்கு இறைவாக்கு உரைத்ததை விட அரசர்களுக்கும் குருக்களுக்கும் அமைச்சர்களுக்குமே இறைவாக்குரைத்தார். இது அவருக்குக் கடினமான பணியாக இருந்தது. அவர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார். கிணற்றில் தூக்கி எறியப்பட்டார். ஆனால், அனைவரையும் அவர் எதிர்கொள்ள வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக இருந்தது.

(இ) 'நான் கட்டளையிடுவதைச் சொல்ல அஞ்சாதே!'

பேசத் தெரியாது எனச் சொன்னவரிடம் பேச அஞ்ச வேண்டாம் எனக் கட்டளையிடுகின்றார் ஆண்டவர். அச்சம் பல நேரங்களில் நம் வாயைக் கட்டி விடுகிறது. நம் மனத்தில் தோன்றுவது மனத்திலேயே மறைந்துவிடுகின்றது. சொல் ஒன்றுதான் நமக்கும் மற்றவர்களுக்கும் முதல் இணைப்பை ஏற்படுத்துகின்றது. நம் சொற்களே நம் எண்ண ஓட்டங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகின்றன. எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்த அஞ்ச வேண்டாம் என்கிறார் கடவுள்.

3. இரு தலைப்புகள் அல்லது பெயர்கள்

ஆண்டவராகிய கடவுள் எரேமியாவுக்கு இரு தலைப்புகள் அல்லது பெயர்களை வழங்குகின்றார்:

(அ) இறைவாக்கினன்

இறைவாக்கினர் என்பவர் மூன்று நிலைகளில் அன்றைய நாளில் புரிந்துகொள்ளப்பட்டார்: (அ) இறைவனின் வார்த்தைகளை மக்களுக்கு அறிவிப்பவர், (ஆ) வரவிருக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு முன்னுரைப்பவர், (இ) மாயவித்தைகள் செய்பவர். எரேமியா முதல் இரு நிலைகளில் இறைவாக்கினராகத் திகழ்கின்றார். மோசேயைப் போன்ற இறைவாக்கினர் என எரேமியா அறியப்படுகின்றார். மேலும், புதிய உடன்படிக்கையை முன்னுரைத்ததன் வழியாக இயேசுவின் முன்னோடியாகவும் திகழ்கின்றார்.

(ஆ) பொறுப்பாளன்

மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகின்றார் எரேமியா. பொறுப்பாளர் என்பவர் கணக்குக் கொடுப்பவர், கணக்குக் கேட்பவர். அவர் இவ்விரு கடமைகளையும் சரியாகச் செய்ய வேண்டும். ஆனால், அவரால் எதன்மேலும் உரிமை கொண்டாட முடியாது. ஏனெனில், ஆண்டவர் அவரை உரிமையாக்கிக் கொண்டார்.

இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

நாம் அனைவருமே இருமுறை வாழ்கின்றோம். முதல் வாழ்க்கை நாம் பிறந்த அன்று தொடங்குகின்றது. இரண்டாவது வாழ்க்கை நம் அழைப்பை உணர்ந்த நாளில் தொடங்குகின்றது. நாம் பிறப்பதற்கு முன்பே கடவுள் நம் வாழ்வின் நோக்கத்தை வரையறுத்துள்ளார். அந்த நோக்கத்தை அறிதலும், அறிதலின்படி வாழ்தலும், வாழ்ந்து அதை நிறைவேற்றுதலும் நலம்!

நற்செய்தி வாசகத்தில் (மத் 13:1-9), இயேசு, விதைப்பவர் எடுத்துக்காட்டை முன்மொழிகின்றார். நல்ல நிலத்தில் விழுந்து நற்பலன் தருபவர்கள் தங்கள் வாழ்வியல் நோக்கத்தை அடைந்தவர்களே!

வாழ்வின் நோக்கத்தைப் பறவைகள் எடுத்து உண்ணா வண்ணம், கதிரவன் சுட்டெரிக்கா வண்ணம், முள்கள் நெரித்துவிடா வண்ணம் காத்துக்கொள்தல் அவசியம்.


No comments:

Post a Comment