இரண்டையும் வளர விடுங்கள்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விண்ணரசு பற்றிய உவமை ஒன்றைத் தருகின்றார். அந்த உவமையின்படி, ஒருவர் தன் வயலில் நல்ல விதைகளை விதைக்கின்றார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது பகைவன் கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிடுகின்றார். வளர்ந்த களைகளைப் பிடுங்குவது பற்றி பணியாளர்கள் எச்சரித்தபோது, அவற்றை அப்படியே வளர விடுமாறு சொல்கின்றார் தலைவர்.
இறைப் பராமரிப்பு, இறை அறிவு, இறைப் பொறுமை என்னும் மூன்று கூறுகளை இன்றைய உவமை விண்ணரசின் மதிப்பீடுகளாக முன்வைக்கின்றது.
(அ) இறைப் பராமரிப்பு
இறைவன் தன் நிலத்தை, அதாவது உலகத்தை, வெறுமையாக வைத்திருப்பதில்லை. மாறாக, அதை நன்மையால் நிறைத்துப் பராமரிக்கின்றார். அவருடைய பிள்ளைகளாக இருக்கின்ற நம் அனைவருடைய வாழ்வின் ஊற்றாக இருப்பவர் அவரே.
(ஆ) இறை அறிவு
இந்த உலகில் உள்ள தீமை பற்றியும், தீமையின் ஊற்று பற்றியும் இறைவன் அறிந்தவராக இருக்கின்றார். விண்ணரசு என்பது தீமையிலிருந்து ஒதுங்கி நிற்கின்ற, அந்நியப்படுத்தப்பட்ட நிலை அல்ல, மாறாக, தீமையோடு கலந்து நிற்கின்ற நிகழ்வு என்பதை நாம் அறியவும் சொல்கின்றார்.
(இ) இறைப் பொறுமை
களைகளை உடனடியாக நீக்கிவிடாமல், இறுதி நாள் வரை பொறுமை காக்கின்றார் கடவுள். களைகள் நாள்கள் கூடக் கூட மிகவும் வன்மையாக மாறிவிடுகின்றன. களைகள் நீடித்து விடப்பட்டாலும் அவற்றின் இயல்பு மாறி, அவை கோதுமைப் பயிர்களாக மாறிவிடுவதில்லை. கோதுமைப் பயிர்களுக்கு உரிய தண்ணீரையும், மற்ற சத்துகளையும் களைகள் உறிஞ்சுகின்றன. கோதுமைப் பயிர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றன. இருந்தாலும், தலைவர் பொறுமை காக்கின்றார். நம்மைச் சுற்றி தீமைகள் மலிந்திருந்தாலும் கடவுள் உடனடியாகச் செயலாற்றுவதில்லை. தீமையை அப்படியே வளர விடுகின்றார். மனிதர்கள் தங்கள் தீய இயல்பை மாற்றிக்கொள்ளுமாறு அவர் அவர்களுக்குக் கால இடைவெளி தருகின்றார். இறைப் பொறுமை என்பது கடவுளின் கண்டுகொள்ளாத்தன்மை அல்ல, மாறாக, அவருடைய கருணையின் வெளிப்பாடு.
இன்றைய முதல் வாசகத்தில் (எரே 7:1-11), இறைவாக்கினர் எரேமியா, எருசலேம் ஆலயத்தின் முன்பாக நின்று யூதா மக்களுக்கு இறைவாக்குரைக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் நடுவே மலிந்து கிடந்த அநீதச் செயல்களைக் களையுமாறு அழைப்பு விடுக்கின்ற அவர், தொடர்ந்து, எருசலேம் ஆலயத்தில் நடைபெற்ற வேற்றுத் தெய்வ - பாகால் - வழிபாட்டையும் சுட்டிக் காட்டுகின்றார்.
'நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்!' என்று சொல்லி, அவர்கள் ஒதுங்கும் இடம் பாதுகாப்பற்றது என எச்சரிக்கின்றார்.
இறுதியாக, 'என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வர் குகையாகிவிட்டதோ? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!' என்கிறார் ஆண்டவர்.
இறைவனுடைய பராமரிப்புச் செயலால் இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கென்று நாட்டை உரிமையாக்கி உள்ளனர். அவர் தன் மக்களின் தீச்செயல்களை அறிந்தவராக இருக்கின்றார். அதே வேளையில், 'நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்' என்று தன் பொறுமையை வெளிப்படுத்துகின்றார்.
இவ்விரண்டு வாசகங்களும் நமக்குத் தரும் செய்தி என்ன?
(அ) நம் இயல்பு கோதுமையின் இயல்பு என்றால் அதை அப்படியே இறுதி வரை தக்கவைத்துக்கொள்வது. 'நானும் களையப் போல இருக்கக் கூடாதா!' என்ற எண்ணத்தில் தீமையோடு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. அதே வேளையில் தீமையின் நடுவேதான் நாம் வாழ வேண்டிய கட்டாயம் என்னும் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
(ஆ) இறைவன் போல நம் வாழ்விலும் பொறுமையுடன் செயலாற்ற வேண்டும். பணியாளர்களின் பேச்சைக் கேட்டு உடனடியாகச் செயலாற்றியிருந்தால் தலைவர் களைகளோடு சேர்த்து கோதுமைகளையும் அறுக்க நேர்ந்திருக்கும். பதறிய காரியம் சிதறிப் போகும் என்பது நாம் அறிந்த ஒன்று. பொறுமை மிக அழகிய அணிகலன்.
(இ) பணியாளர் மனநிலை விட வேண்டும். தலைவனே தூங்கிவிட ஊழியக்காரர்கள் இங்கே ஆரவாரம் செய்கிறார்கள். நம் தலைவரை விட நாம் பெரியவர்கள் அல்லர். அவர் அனைத்தையும் அறிவார். எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை அறிந்தவர் அவர். அப்படி இருக்க, பணியாளர்களைப் போல நாம் ஏன் பரபரப்புடன் இருக்க வேண்டும்?
Very good Reflection Father .
ReplyDelete