Monday, July 11, 2022

பாதுகாப்பின்மை

இன்றைய (12 ஜூலை 2022) முதல் வாசகம் (எசாயா 7:1-9)

பாதுகாப்பின்மை

நீங்கள் பைக் அல்லது கார் ஓட்டுவீர்களா? முதன்முதலாக அதை ஓட்டத் தொடங்கிய நாளில், அந்த பைக் அல்லது கார் நம் கன்ட்ரோலில் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை! கொஞ்சம் கொஞ்சமாக அது நம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் பைக் அல்லது கார் ஓட்டுவது நம் இயல்பாகவே மாறிவிடுகிறது.

இசைக்கருவி மீட்டுவது, பொதுவில் பேசுவது, மொழி கற்பது என எல்லாச் செயல்பாடுகளிலும், முதலில் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத ஒன்று கட்டுப்பாட்டுக்கள் வருகிறது.

அப்படி வரும்போது என்ன நடக்கிறது?

நம் பயம் மறைந்து நம்பிக்கை பிறக்கிறது. 

ஆக, நாமே உருவாக்கும் ஒரு சிறிய பாதுகாப்பின்iயால் உருவாகும் பயம், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நம்பிக்கை பிறக்கிறது. 

இதை அப்படியே தலைகீழாக்கினால், நம்பிக்கை குறைந்தால், பயம் அதிகமாகி, நாம் பாதுகாப்பின்மையை உணர்கிறோம்.

நான்கு வழிச் சாலையில் காரை ஓட்டிச் செல்லும்போது, திடீரென்று கார் ஓட்டுவது மறக்கத் தொடங்கினால் என்ன ஆகும்? பயம் பற்றிக்கொள்ளும்.

இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் தங்களோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு, யூதாவின் தலைநகரான எருசலேமிலிருந்து ஆட்சி செய்துகொண்டிருக்கின்றார் ஆகாசு. இந்த நேரத்தில், சுற்றிலும் படையெடுப்பு நடக்கிறது. யூதா நாடு எகிப்திற்கும் பாபிலோனியாவுக்கும் இடையில் இருந்ததால், எந்நேரமும் போர் மேகங்கள் சூழ்ந்த வண்ணம் இருந்தன. வடக்கிலிருந்த அசீரியாவும், அதன் சார்பு நாடான இஸ்ரயேலும் எருசலேமின் மேல் படையெடுக்கின்றனர். இதைக் கண்டவுடன், ஆகாசும், மக்களும் அச்சத்தால் நடுங்குகின்றனர். 

'பெருங்காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வு கொள்வது போல, ஆகாசின் உள்ளமும் அவர் நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன' எனப் பதிவு செய்கிறார் எசாயா.

விழுவோமோ? நிற்போமோ? சாய்ந்து நிற்போமோ? தரையிலிருந்து பெயர்ந்து விழுவோமோ? என்ற அச்சத்தில் இருக்கின்றனர் யூதா நாட்டினர். 

மேலும், அந்த நேரத்தில் ஆகாசு என்ன செய்கின்றார்?

'வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய்' என இறைவாக்கினர் எசாயாவுக்குச் சொல்கின்றார் ஆண்டவர்.

வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில் அரசனுக்கு என்ன வேலை?

தன்னுடைய பயத்தில், தான் செய்வதறியாது, ஒளிந்துகொள்வதற்கும், அல்லது இறைவாக்கினரைத் தேடியோ, அல்லது மாறுவேடம் தரிக்கவோ ஆகாசு அங்கே சென்றிருக்கலாம்.

ஆண்டவர் மிகவும் மேலான செய்தியைத் தருகிறார்: 'உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்கள் நிலைத்து நிற்க மாட்டீர்கள்!' அல்லது நேர்முகமாக, 'உங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்தால் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்!'

நீங்கள் நிலைக்க, நீங்கள் உங்கள் நம்பிக்கையில் நிலைத்திருங்கள்.

பயம் விலக வேண்டும் எனக் கற்பிக்கின்றார் கடவுள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 11:20-24), இதற்கு மாறாக, கொராசின் மற்றும் பெத்சாய்தா நகரங்கள் தவறான பாதுகாப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இதுவும் ஆபத்து.

அதாவது, கார் ஓட்டத் தெரியாமலேயே, 'எனக்குக் கார் ஓட்டத் தெரியும்' என்று சொல்வது பெரிய ஆபத்து. தாங்கள் இயேசுவை நம்பாமலேயே, தங்கள் நம்பிக்கையால் தாங்கள் மீட்படைவோம் என்ற பொய்யான நம்பிக்கையில் இருக்கின்றனர் அந்நகரத்தினர். அவர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

சோதோம், மற்றும் கொமோரா நகரங்கள் பரவாயில்லை. ஏனெனில், அவை தவறான பாதுகாப்புக்களைத் தேடிச் செல்லவோ, பொய்யுரைக்கவோ இல்லை.

என் பயம் மற்றும் பாதுகாப்பின்மை மறைய நம்பிக்கை அவசியம். நம்பிக்கை வந்துவிட்டால் என் வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த நம்பிக்கைக்குப் பதிலாக, பொய்யான நம்பிக்கையை நான் பற்றிக்கொண்டால் ஆபத்து இன்னும் அதிகமாகும்.

மேலும், ஒரு பக்கம் பயம் வரும்போது, நாம் வண்ணான் கால்வாயை நோக்கி ஓடும்போது, கால்வாயின் அக்கரையில் நமக்காக நிற்கின்றார் கடவுள்.


No comments:

Post a Comment