பற்றுறுதியின்மை
நாம் கடந்த ஒரு வாரமாக முதல் வாசகமாக வாசித்துக்கொண்டிருந்த ஓசேயா நூல் இன்றுடன் நிறைவுபெறுகிறது. மிகவும் நேர்முகமாகவும், நிறைந்த எதிர்நோக்குடனும் நூல் நிறைவு பெறுகிறது.
இந்த நூலின் (வாசகத்தின்) இறுதி வார்த்தைகளில் ஒரு வார்த்தையை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:
'அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்.
அவர்கள்மேல் உளமார அன்பு கூர்வேன்.
அவர்கள்மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது' (ஓசே 14:4)
தான் முதன்முதலாக காதல் அல்லது அன்புவயப்பட்டபோது தன்னில் எழுந்த உணர்வை அகுஸ்தினார் இப்படிப் பதிவு செய்கின்றார்:
'நான் காதலில் (அன்பில்) விழுந்தேன். என் அன்பு என்னிடம் திரும்பியது. என்னைத் கட்டித் தழுவிக்கொண்டது. அந்தத் தழுவலே என்மேல் துன்பத்தின் கயிறுகளால் முடிச்சுகள் இட்டது. அந்த நாள் முதல் பொறாமை (jealousy), சந்தேகம் (suspicion), பயம் (fear), கோபம் (anger), மற்றும் சண்டை சச்சரவுகள் (bickering) என்னும் பற்றி எரிகின்ற சாட்டைகளால் (flaming whips) நான் அடிக்கப்பட்டேன்' (காண். ஒப்புகைகள், 3.1.1)
அகுஸ்தினார் எல்லா வகை மனித அன்பையும் இப்படித்தான் சொல்கிறார் என்பது கொஞ்சம் ஆச்சர்யமாகவும், நிறைய அதிர்ச்சியாகவும் இருக்கிறது. முதலில் நான் ஒருவரை அன்பு செய்கிறேன் அல்லது அவர்மேல் காதல் கொள்கிறேன் அல்லது நட்பு பாராட்டுகிறேன். சில நாள்கள் கழித்து அவர் என்மேல் கொண்டிருக்கின்ற அன்பு யாரோ ஒருவருடன் பகிரப்படுவதை உணர்கிறேன். உடனே என்னுள் பொறாமை எழுகிறது. பொறாமையின் குழந்தை சந்தேகம். அவர் எனக்குரிய நேரத்தை இன்னொருவருக்குக் கொடுக்கிறார் அல்லது எனக்குரிய இடத்தை இன்னொருவருக்குக் கொடுக்கிறார் என்ற சந்தேகம் வருகிறது. சந்தேகத்தின் சகோதரி பயம். ஏனெனில், அவர் என்னைவிட்டுப் போய்விடுவாரோ என்ற பயத்தில்தான் நான் அவரைச் சந்தேகிக்கிறேன். பயம் பெற்றெடுக்கும் குழந்தை கோபம். ஒவ்வொரு கோபத்திற்குப் பின்னும் பயம்தான் இருக்கிறது. இறுதியில், அவருக்கும் எனக்கும் சின்ன சின்ன விடயங்களில் சண்டை சச்சரவுகள் தொடங்கித் தொடர்கின்றன. பின் இதே சங்கிலி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
என்ன அழகாக அகுஸ்தினார் மனித வாழ்வின் உறவு பற்றிப் பேசியிருக்கிறார் என்பது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. மேலும், இந்த உணர்வுகள் தரும் வலி, 'பற்றி எரியும் சாட்டை தரும் வலி' போன்றது என்கிறார். சாட்டையடி போலத்தான் இவ்வுணர்வுகள் இருக்கும். அதாவது, சாட்டை அடிகளில், முதல் அடிக்கும் இரண்டாம் அடிக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருக்கும். அந்த இடைவெளி சுகமாகவும் இருக்கும், அதே வேளையில் அடித்த அடி விழுமே என்ற அச்சத்தையும் கொடுக்கும்.
ஆண்டவராகிய கடவுள் தன்னைக் கணவனாகவும், இஸ்ரயேலை மனைவியாகவும் உருவகிப்பதுதான் ஓசேயா நூலின் சிறப்பு.
கணவன் மனைவியை அன்பு செய்யத் தொடங்குகிறார். இஸ்ரயேல் தன் கடவுளுக்கு (கணவனுக்கு) கொடுக்க வேண்டிய நேரத்தை பாகாலுக்குக் கொடுக்கிறது. ஆக, இஸ்ரயேல் மேல் கடவுளுக்குப் பொறாமை வருகிறது. இவள் பாகாலுக்குப் பலி செலுத்துகிறாள், சிலைத் தூண்களை நிறுவிக்கொள்கிறாள் என்று அவள்மேல் சந்தேகம் வருகிறது. அந்த சந்தேகம் உறுதியானவுடன், இவள் தன்னைவிட்டுப் போய்விடுவாளோ என்று பயம் கொண்டு அவள்மேல் கோபம் கொள்கிறார். கோபம், சண்டை-சச்சரவாக வெடிக்கிறது.
இந்தப் பிரச்சினையை அல்லது இந்தச் சங்கிலியை உடைத்துப்போட ஆண்டவரே ஒரு வழியைக் காண்கிறார்:
'அவளுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன். அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன். அவர்கள்மேலிருந்த சினம் தணிந்துவிட்டது.'
ரொம்ப எளிதான லாஜிக்.
நான் அவள்மேல் குறைவாக அன்பு செலுத்துவதால்தானே அவள் பாகாலிடம் போகிறாள். அவளை நான் முழுநேரமும் அன்பு செய்தால் அவள் போகமாட்டாளே! - என்று நினைக்கிறார்.
இங்கே இஸ்ரயேலின் குறையாக ஆண்டவர் குறிப்பிடுவது 'பற்றுறுதியின்மை.' பழைய மொழிபெயர்ப்பில், 'பிரமாணிக்கமின்மை' என்றும், ஆங்கிலத்தில் 'infidelity' என்றும் உள்ளது.
இங்கும் அங்கும் என இருக்கும் இழுபறிநிலைதான் பற்றுறுதியின்மை. இது மனித உறவுகளுக்குள்ளும் இருக்கும், இறை-மனித உறவுக்குள்ளும் இருக்கும்.
இதை எப்படிச் சரி செய்வது?
இரு வழிகள்:
ஒன்று, கோபம் களைதல்.
கோபம் கொண்டிருக்கும் ஒருவர் பற்றுறுதி இல்லாமல்தான் இருப்பார். எடுத்துக்காட்டாக, எனக்கு என் மறைமாவட்டத்தின்மேல் கோபம் இருந்தால் என்னால் எந்த நிலையிலும் அதன்மேல் பற்றுக்கொள்ள முடியாது. கணவன்மேல் கோபம் கொள்ளும் மனைவி அவர்மேல் பற்றுறுதிகொள்ள முடியாது. கடவுள்மேல் உள்ள கோபத்தால்தான் இஸ்ரயேல் பாகால் நோக்கிச் சென்றாள். கோபம் களைதல் முதற்படி.
இரண்டு, நேரம் கொடுத்தல்.
'நான் எதற்கு நேரத்தைக் கொடுக்கிறேனோ அது வளரும், எதற்கு நேரத்தைக் கொடுக்கவில்லையோ அது தேயும்' என்பது ஆயுர்வேதத்தின் தினச்சார்யா என்ற கருத்தியலின் கோட்பாடு. இதையே, 'நேரம் எடுத்தல்தான் திறன்வளர்ச்சி' என்று மேலாண்மையியல் சொல்கிறது. நான் யார்மேல் பற்றுறுதிகொள்ள வேண்டுமோ அவருடன் நேரம் செலவிடல் அவசியம். இஸ்ரயேல் ஆண்டவருக்கான நேரத்தை பாகாலுக்குக் கொடுத்தது. ஆண்டவருடன் நேரம் செலவழித்தல் அதிகமானால் பற்றுறுதியின்மை அதிகரிக்கும்.
பற்றுறுதியின்மை - உறவுநிலைகளுக்கும், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குமான பெரிய முட்டுக்கட்டை.
இதை நாம் களைந்து, பற்றுறுதியில் வளர்ந்தால், நம் உறவுநிலைகளும், வாழ்க்கை இலக்குகளும் வெற்றிகளாகும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 10:16-23), தன் திருத்தூதர்கள் தங்கள் பணித்தளத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதபோது என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசுவின் அறிவுரையில் என்னை மிகுதியாகக் கவர்வது இதுதான்: '... என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில், பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.'
'கவலைப் பட வேண்டாம்' என அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றார் இயேசு.
பல நேரங்களில் நாம் வாழ்வதற்குத் தயராகிக் கொண்டே இருக்கிறோமே தவிர, வாழ்வதில்லை. இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என எதிர்காலம் பற்றிய தயாரிப்பிலேயே நம் வாழ்க்கை நகர்கின்றது. இத்தகைய எதிர்காலக் கவலையை விடச் சொல்கின்றார் இயேசு.
மேலும், அந்நேரத்தில் அருளப்படும் என்று நம்புவதற்கு நிறையத் துணிச்சல் தேவை.
முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் தயாராக இல்லாத நிலையில் ஆண்டவரின் இரக்கம் அவர்கள்மேல் பொழியப்படுகின்றது. நம் வாழ்விலும் அவர் அந்தந்த நேரத்திற்குத் தேவையானவற்றை அள்ளிக் கொடுக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சும்மாயிருப்பதுதான்.
சும்மாயிருக்கவும் நிறையத் துணிச்சல் தேவை.
No comments:
Post a Comment