ஒருநிலை
நேற்று மாலை 'கன்ஸிஸ்டென்ஸி' என்ற காணொளியை யூடியுபில் 'ஸி.ஆர்.பி.' சேனலில் பார்த்தேன். 'கன்ஸிஸ்டென்ஸி' என்ற வார்த்தையை தமிழில் 'ஒருநிலை,' 'நிலைப்புத்தன்மை,' 'தன்முரண்பாடின்மை,' 'இசைவு' என மொழிபெயர்க்கலாம்.
கன்ஸிஸ்டென்ஸி என்பது நான் ஒன்றை விரும்புகிறேனோ அல்லது விரும்பவில்லையோ எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறது. இதுவே கன்ஸிஸ்டென்ஸி.
சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுப்பவர்களை மூன்று வகைகளில் பிரிக்கலாம்.
முதல் வகையினர், மாத்திரை எடுப்பதால் இனிப்பு எதுவும் எடுக்கமாட்டார்கள். அவர்கள் எவ்வளவு சோதிக்கப்பட்டாலும், கட்டாயப்படுத்தப்பட்டாலும் இனிப்பைத் தொட மாட்டார்கள். இவர்கள் கன்ஸிஸ்டென்ஸி வகையினர்.
இரண்டாம் வகையினர், மாத்திரை எடுப்பர். எப்போதாவது இனிப்பு எடுப்பர். கட்டாயத்தின்பேரில் எடுப்பர். அல்லது விருப்பத்தின்பேரில் எடுப்பர். சர்க்கரைச் சத்து கூடியதுபோல நினைத்தால் உடனடியாக கூடுதல் மாத்திரை போட்டுக்கொள்வர். இது குற்றவுணர்வுடன் கூடிய கன்ஸிஸ்டென்ஸி.
மூன்றாம் வகையினர், நிறைய இனிப்பு எடுப்பர். இனிப்பு எடுக்கும் அளவிற்கு மாத்திரை எடுத்துக்கொள்ளலாம் என சமரசம் செய்துகொள்வர். இது முழுமையான இன்கன்ஸிஸ்டென்ஸி.
இந்த உருவகத்தை அப்படியே அறநெறிக்குப் பொருத்திப் பார்ப்போம்:
முதல் வகையினர், எந்த வகையிலும் தவறு செய்ய மாட்டார்கள்.
இரண்டாம் வகையினர், எப்போதாவது ஏதாவது ஒரு தவறு செய்துவிட்டால், உடனடியாகக் கடவுளிடம் மன்னிப்பு வேண்டுவர்.
மூன்றாவது வகையினர், தாங்கள் தவறு செய்தால் அதற்கேற்ற நல்லது செய்தால் பிரச்சினையில்லை என நினைப்பர். அதாவது, நான் ஒருவரைக் கொலை செய்துவிட்டால், அந்தக் கொலைக்கு ஈடாக அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டால் போதும் என நினைப்பவர்கள். அல்லது, நான்தான் நிறைய நல்லது செய்கிறேனே. ஆகையால், தவறுகள் செய்தால் பரவாயில்லை. கடவுள் அவற்றைப் பொருட்படுத்த மாட்டார். நான் கள்ளக்கணக்கு எழுதி ஒரு லட்சம் எடுத்துக்கொள்கிறேன் என்றால், ஐம்பதாயிரத்திற்கு நான் நல்லது செய்துவிட்டேன், அல்லது கோவிலுக்குக் கொடுத்துவிட்டேன் என்றால், கடவுள் என்னைத் தண்டிக்க மாட்டார் என நினைப்பர்.
முதல் ஏற்பாட்டில், இறைவாக்கினர் ஓசேயா காலத்தில் இஸ்ரயேல் மக்கள் முதல் நிலையிலிருந்து, இரண்டாம், மற்றும் மூன்றாம் நிலை எனக் கடந்து வாழ்ந்தனர். இவர்கள் தங்களுடைய உடன்படிக்கை பிரமாணிக்கத்தில் நிலைப்புத்தன்மை கொண்டிருக்கவில்லை. ஆகையால்தான், மணமகன்-மணமகள் உருவகத்தைப் பயன்படுத்தும் ஆண்டவர், இஸ்ரயேல், தன்னுடைய பிரமாணிக்கத்தை மறந்து, வேற்று தெய்வங்களுக்குப் பின் சென்று வேசித்தனம் செய்தது என்று சாடுகின்றார்.
இஸ்ரயேல் எவ்வளவுக்கு மிகுதியாகக் கனி கொடுத்ததோ அந்த அளவுக்கு பாவம் செய்கிறது.
ஆண்டவரும், 'இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள்' என்று அவர்களைச் சாடுகின்றார்.
சர்க்கரையும் வேண்டும், மாத்திரையும் வேண்டும் என நினைப்பது இருமனம்.
தவறும் வேண்டும், நன்மை செய்யவும் வேண்டும் என நினைப்பது இருமனம்.
கனி தரவும் செய்வேன், பாவமும் செய்வேன் என நினைப்பது இருமனம்.
இருமனம் கொண்டிருப்பது இன்கன்ஸிஸ்டென்ஸி.
இன்கன்ஸிஸ்டென்ஸியுடன் வாழ்ந்துகொண்டிருந்த தன் சமகாலத்து மக்களிடம், 'ஆண்டவரைத் தேடும் காலம் நெருங்கி விட்டது' என அழைப்பு விடுக்கின்றார் ஓசேயா.
நற்செய்தி வாசகத்தில் (மத் 10:1-7), தன் திருத்தூதர்களைப் பணிக்கு அனுப்புகின்ற இயேசு, 'வழி தவறிப் போன இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்' எனச் சொல்லுகின்றார். உடனடியாக இவர்களுக்குப் பணி தேவைப்பட்டதாக உணர்கிறார் இயேசு.
ஆண்டவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டால், அவரே நம்மிடம் திருத்தூதர்களை அனுப்புகின்றார்.
நம்மையும்…நம்மைச்சுற்றியிருப்பவர்களையும் சிறிது சோதனைக்குட்பட்டுத்திப்பார்த்தால் நமக்கே புரியும் நாம் ‘இருமனம்’ மட்டுமல்ல…எத்தனையோ மனம் கொண்டவர்களென்று.ஒரு நல்ல செயலைச் செய்ததற்குக் கூலியாகப் பல தவறான செயல்களில் நம்மை சமரசம் செய்து கொள்கிறோம்.முதலில் செய்த நற்செயல்கள் நம் வாழ்நாள் பாவங்களுக்கு மன்னிப்பாகி விடும் என்ற புரிதல் நம்மை அப்பிக்கொள்கிறது. ஒருமனத்துடன் இருக்க விழைகிறது மனம்…ஆனால் நம் ஆதிபெற்றோரிடமிருந்து வாங்கிவந்த வரம் இருமனம்…ஏன் நேரத்திற்கு ஒரு மனமாக நம்மை மாற்றுகிறது. ஓசேயா சொல்லும் “ ஆண்டவரைத் தேடும் காலம் நெருங்கி வந்து விட்டது” ..அவரது சமகாலத்து மக்களுக்கு மட்டுமல்ல; நமக்கும் தான்! நம் வழியை கரடு முரடான முட்களிலிருந்து சமதளமான பாதையாக்க எத்தனையோ பேரை அனுப்புகிறார் ஆண்டவர்! அவர்களின் வழி நடப்போம்…. ஒரே பாதை! ஒரே பயணம்! என்ற வார்த்தைகளை வாழ்வாக்குவோம்! நாளும் கடைபிடிக்கக் கூடிய விஷயங்களைத் தந்த தந்தைக்கு நன்றி!
ReplyDelete