Friday, July 1, 2022

வேரூன்றச் செய்வேன்

இன்றைய (2 ஜூலை 2022) முதல் வாசகம் (ஆமோ 9:11-15)

வேரூன்றச் செய்வேன்

கடந்த சில நாள்களுக்கு முன் நான் சந்தித்த என் அருள்பணியாளர் நண்பர் ஒருவர், 'எந்த வேலையிலும் என் மனம் வேரூன்றுவதில்லை' என்றார். மேலும், இது தனக்கு ஒரு பெரிய வலியாக இருப்பதாகவும் சொன்னார். 

நம் கால்கள் வேரூன்றாமல் இருப்பதும், நம் மனம் வேரூன்றாமல் இருப்பதும் நமக்கு பெரிய வேதனையைத் தருகின்றது. 

இஸ்ரயேல் மக்கள் தொடக்கத்தில் நாடோடிகளாக இருந்தனர் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் குலமுதுவர்கள் காலத்தில்! தொடர்ந்து யோசுவா தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகின்றனர். அசீரியப் படையெடுப்பின்போது (கிமு 722) அவர்கள் சிதறடிக்கப்படுவதையும், பின்னர் மீண்டும் அவர்கள் தங்கள் நாட்டுக்குள் திரும்பி வருவதையும் இன்றைய முதல் வாசகத்தில் முன்னுரைக்கின்றார்.

மூன்று உருவகங்களால் இதை முன்னுரைக்கின்றார் ஆமோஸ்:

(அ) 'அறுவடை செய்வோரை உழுவோரும், கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்.'

வழக்கமாக அறுவடைக்கும் உழுதலுக்கும் கால இடைவெளி உண்டு. ஏனெனில், நிலம் தன் சத்துக்களை மீட்டெடுக்கு அந்த இடைவெளி அவசியம். அது போலவே, திராட்சைக் கனிகள் பறித்த காலத்திற்கும் விதைப்போருக்கும் இடைவெளி அவசியம். ஆமோஸின் இறைவாக்குப் படி, நிலம் தன் வளத்தை இழக்காமல் தக்கவைத்துக்கொள்ளும். எந்த அளவுக்கு என்றால், அறுவடை செய்வோரைத் தொடர்ந்து உழுபவர் செல்வார். கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்.

(ஆ) 'மலைகள் இனிய இரசத்தைப் பொழியும். குன்றுகள்தோறும் அது வழிந்தோடும்.'

மலைகளில் விழுகின்ற மழை குன்றுகளில் வழிந்தோடும். இதுதான் எதார்த்தமான நிலை. ஆனால், மழைக்குப் பதிலாக இனிய திராட்சை இரசம் பொழியும் என்கிறார் ஆமோஸ். திராட்சை இரசம் மகிழ்ச்சி, மற்றும் கொண்டாட்டத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. மேலும், மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டக் காலத்தில் யாரும் வேலைக்குச் செல்லவும் மாட்டார்கள். ஆக, வேலை எதுவும் செய்யாமலேயே மக்கள் அனைவரும் நிறைவாக இருப்பர் என்கிறார் ஆமோஸ். ஏறக்குறைய இது ஏதேன் தோட்டத்து அனுபவம் போல இருக்கும்.

(இ) 'பழத்தோட்டங்கள் அமைத்து உண்பர். நான் வேரூன்றச் செய்வேன்'

பழத்தோட்டம் அமைப்பதற்கு நிறைய நாள்கள் எடுக்கும். மேலும், பழங்களை உண்பதற்கும் நிறைய நாள்கள் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கும். நாடோடிகள் ஒரே இடத்தில் அமர்வதில்லை. அவர்களுக்கு நிலம்கொடுத்து நிரந்தரமாகத் தங்க வைக்கின்றார் ஆண்டவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 9:14-17) நோன்பு பற்றி வாதம் எழுகின்றது. இயேசுவின் சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை என்ற கேள்வி எழும் சூழலில், தன்னைப் புதிய மணமகன் என்றும், தன்னுடைய உடனிருத்தல் மணவிருந்து எனவும் முன்மொழிகின்றார் இயேசு.

மேலும், அந்தந்த நேரத்திலும் அந்தந்த இடத்திலும் வேரூன்றவும், மகிழ்ச்சியோடு இருக்கவும் அழைக்கின்றார் இயேசு.

இன்று நம் உடலும் மனமும் வேரூன்றவும், நம் மகிழ்ச்சியை எந்நேரமும் தக்கவைத்துக்கொள்ளவும் முயற்சி செய்தல் நலம்.


2 comments:

  1. Philomena Arockiasamy7/01/2022

    இறை வார்த்தைகள் இயற்கையோடும் பின்னிக்கிடக்கின்றன என்பதைக் காட்டும் ஒரு பதிவு.இயற்கையின் நிகழ்வுகள் அனைத்தும் அதனதன் காலத்தில் நடக்கையில் மனிதனின் உடலும்,மனமும் வாழ்க்கையில் பிடிப்பைக் காணவும்…..நம் மகிழ்ச்சியைத் நம்மிடத்தே தக்கவைத்துக் கொள்ளவும் அழைப்பு விடுக்கிறது இயற்கை.ஒரு poetic ஆன பதிவு.பல நேரங்களில் இயற்கைக்கு கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்காமல் போவதாலேயே நம் உடலும்,மனமும் வேரூன்றுவதுமில்லை….மகிழ்ச்சியோடிருக்கவும் முடிவதில்லை.செய்ய வேண்டிய விஷயங்களை அதற்குரிய கால நேரத்தில் செய்கையில் மனிதனிடம் மகிழ்ச்சி தானாகப் பொங்கி எழும்….ஒரு மணமகனுக்குரிய மிடுக்கோடு. இயற்கையோடு கைகோர்த்து நடக்க அழைக்கும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றி!!!

    ReplyDelete
  2. கடந்த சில நாள்களுக்கு முன் நான் சந்தித்த என் அருள்பணியாளர் நண்பர் ஒருவர், 'எந்த வேலையிலும் என் மனம் வேரூன்றுவதில்லை' என்றார். மேலும், இது தனக்கு ஒரு பெரிய வலியாக இருப்பதாகவும் சொன்னார். /// Harry Potter also dealing with the same problem fr... forget about long term jobs, பத்து நிமிஷம் சேந்தாப்போல focused ஆக ஒரு சின்ன வேலை கூட செய்ய முடியல ..

    ReplyDelete