Tuesday, July 26, 2022

மகிழ்ச்சியுடன் போய்

இன்றைய (27 ஜூலை 2022) நற்செய்தி (மத் 13:44-46)

மகிழ்ச்சியுடன் போய்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விண்ணரசு பற்றிய இயேசுவின் உவமைகள் தொடர்கின்றன. மறைந்திருந்த புதையல், விலை உயர்ந்த முத்து என்னும் இரு வார்த்தைப் படங்கள் வழியாக விண்ணரசு பற்றிய செய்தியைத் தருகின்றார் இயேசு.

வயலில் புதையலைக் காண்கின்றார் ஒருவர். நல்முத்தைக் கண்டடைகின்றார் இன்னொருவர். முந்தையவருக்கு அது தற்செயலாக நடக்கிறது. பிந்தையவர் தானே விரும்பித் தேடிச் செல்கின்றார். முந்தையவர் தனக்கு உள்ள அனைத்தையும் விற்று நிலம் முழுவதையும் உரிமையாக்கிக்கொள்கின்றார். பிந்தையவர் மதிப்பு குறைந்த முத்துகளை விடுத்து மதிப்பு நிறைந்த முத்தைத் தனதாக்கிக்கொள்கின்றார். 

'புதையலைக் கண்டவர் மகிழ்ச்சியுடன் போகின்றார்' - புதையல் கண்டவரின் மகிழ்ச்சியைப் பற்றி இன்றைய நாளில் சிந்திப்போம்.

இந்த நபரின் மகிழ்ச்சிக் காரணம் என்ன?

புதையல் கிடைத்தது. அதாவது, அவருடைய அதிர்ஷ்டம் அல்லது நல்ல நேரம் அல்லது கடவுளின் செயல் என ஏதோ ஒன்றால் புதையல் கிடைக்கிறது. அந்தப் புதையலுக்காக அவர் உழைக்கவில்லை. அவரின் உழைப்பால் சேர்ந்த பொருள் அல்ல அந்தப் புதையல். திடீரென புதையல் கண்டதால் அவரை மகிழ்ச்சி பற்றிக் கொள்கின்றது.

புதையல் என்னவோ தற்செயலாகக் கிடைத்தாலும் அவர் அதை உரிமையாக்கிக் கொள்வதற்காகத் தனக்குள்ள யாவற்றையும் விற்கின்றார்.

முதல் வாசகத்தில் (எரே 15:10,16-21) குழப்பமும் சோர்வும் அடைந்த இறைவாக்கினர் எரேமியாவைச் சந்திக்கின்றோம். தன் பிறப்பையே சபிக்கின்ற எரேமியா, தொடர்ந்து, 'நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன். அவற்றை உட்கொண்டேன். உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன. என் உள்ளத்திற்கு உவகை அளித்தன' என்கிறார். மேலும், ஆண்டவராகிய கடவுள் இந்த நிகழ்வில் எரேமியாவுக்குத் தன் உடனிருப்பை முன்மொழிகின்றார்.

மனதில் குழப்பம் கொண்டிருந்த எரேமியா மகிழ்ச்சி அடைகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் அந்த நபருக்குப் புதையல் மகிழ்ச்சி தருகின்றது.

முதல் வாசகத்தில் இறைவார்த்தை எரேமியாவுக்கு மகிழ்ச்சி தருகின்றது.

முன்னும் பின்னும் நடக்கின்ற பயணத்தில் இவர்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கண்டடைகின்றார்கள்.

விண்ணரசும் இறைவன் சார்ந்த ஒன்றும் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி தர வேண்டும்.

இறைவனை நான் புதையல்போலக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேனா? 

நாம் இழந்து போன மகிழ்ச்சியை இன்று மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

சில நேரங்களில் திடீரென வந்த புதையல்போல மகிழ்ச்சி நமக்கு வருகின்றது. சில நேரங்களில் நல்முத்தைத் தேடுவது போல அதைத் தேடிக் கண்டடைய வேண்டியதாக இருக்கிறது.

No comments:

Post a Comment