தொட்டவர் யாவரும்
இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில், அப்பம் பலுகுதல் நிகழ்வு முடிந்தவுடன் இயேசு திருத்தூதர்களை கட்டாயமாக அனுப்பிவிட்டு தனியே இறைவேண்டல் செய்யச் செல்கின்றார். இரண்டாம் பகுதியில், இயேசு கடலின்மேல் நடக்கின்றார். பேதுருவும் இயேசுவைப் போல கடல்மேல் நடக்க முயற்சி செய்கின்றார். மூன்றாவது பகுதியில், மறுகரைக்கு வந்த இயேசுவிடம் உடல்நலமற்றோர் பலர் வருகின்றனர்.
'தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்' என்று நற்செய்திப் பகுதி நிறைவு பெறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் தொடுதல் இரண்டு நிலைகளில் நடக்கின்றது: ஒன்று, இயேசு பேதுருவைத் தொடுகின்றார். அதாவது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' என்று கத்திய பேதுருவை நோக்கிக் கையை நீட்டி அவரைப் பிடிக்கின்றார் இயேசு. இரண்டு, இயேசுவின் மேலுடையைத் தொடுகின்ற உடல்நலமற்றவர்கள் நலம் பெறுகின்றனர்.
ஆக, ஆண்டவரால் தொடப்படுகின்ற பேதுரு அச்சம் என்ற நோய் நீங்கப் பெறுகின்றார். ஆண்டவரைத் தொடுகின்ற மக்கள் தங்களின் உடல்நோய்கள் நீங்கப் பெறுகின்றனர்.
இந்த இரண்டுக்கும் முதன்மையாக இயேசு இறைவேண்டல் வழியாகத் தன் தந்தையைத் தொடுகின்றார்.
தொடுதல் இணைப்பின் அடையாளமாகவும், அச்சம் அகற்றுதலின் அடையாளமாகவும், நலம் தருதலின் அடையாளமாகவும் இருக்கின்றது.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இரு நிலைகளில் இஸ்ரயேல் மக்களைத் தொடுகின்றார். அவருடைய முதல் தொடுதல் அடி போல அவர்கள்மேல் விழுகிறது. அவர்கள் காயம் அடைகின்றனர். இரண்டாம் தொடுதல் அவர்களுக்கு நலம் தருகின்றது. இறைவன் அவர்களை மீண்டும் அள்ளிக்கொள்கின்றார்.
இன்று இறைவன் நம்மைத் தொடுவதற்கு நம் அருகில் நிற்கின்றார். அவரைத் தொடுமாறும் நம்மை அனுமதிக்கின்றார்.
Good reflection, Thank you Father.
ReplyDelete