Friday, July 8, 2022

அதுவே போதும்

இன்றைய (9 ஜூலை 2022) நற்செய்தி (மத் 10:24-33)

அதுவே போதும்

இராபர்ட் க்ரீன் அவர்கள் எழுதிய '48 லாஸ் ஆஃப் பவர்' (தமிழில், 'அதிகாரத்தை அடைய 48 வழிகள்') என்னும் நூலில், ஒருவர் அதிகாரத்தைப் பெறுவதற்கான முதல் விதியாக அவர் முன்வைப்பது: 'உன் தலைவரை விட நீ அதிகம் மின்னாதே!'

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் போதனையும் அதுவாகவே இருக்கிறது:

'சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல.

பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர் அல்ல.

சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும். 

பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும்.

அதுவே போதும்!'

தன் சீடர்களைப் பணிக்கு அனுப்பிய இயேசு, மறைத்தூது உரையின் தொடர்ச்சியாக, அவர்கள் கொண்டிருக்க வேண்டிய மனப்பாங்கு பற்றி அறிவுறுத்துகின்றார்.

ஆனால், இயேசுவின் சமகாலத்துப் புரிதல் அதற்கு மாறானதாக இருந்தது.

எடுத்துக்காட்டாக, மெய்யியல் உலகில், சாக்ரடீஸின் மாணவர் பிளேட்டா. ஆனால், பிளேட்டோவின் கருத்துக்கள் சாக்ரடீஸின் கருத்துக்களைவிட செறிவு மேம்பட்டதாக இருக்கின்றன. பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டில். ஆனால், அரிஸ்டாட்டில் தன்னுடைய ஆசிரியரை விட மேன்மையான மெய்யியல் கருத்துக்களை முன்வைத்தார். 

இப்படியாக, மாணவர் ஆசிரியரை மிஞ்சுவது வெளி உலகில் அன்றுமுதல் இன்று வரை சாத்தியமாகிக்கொண்டே வருகிறது. உளவியல் படிப்பில் அதுபோலத்தான். சிக்மண்ட் ஃப்ராய்டின் மாணவர் கார்ல் யுங். ஆனால், யுங்கின் கண்டுபிடிப்புக்கள் தன்னுடைய ஆசிரியரையும் மிஞ்சுவதாக இருந்தன.

வெளி உலகில் இப்படி இருக்க, தன் சீடர்குழாமில் இயேசு ஒரு மாற்றுக் கருத்தை வைப்பது ஏன்?

இரண்டு விடயங்களுக்காக என நினைக்கிறேன்:

ஒன்று, வெளி உலகில் ஒருவர் மற்றவர் தங்களைவிட அதிமாகப் பெருக்கிக்கொள்கின்றனர். அதாவது, என்னிடம் 1 இலட்சம் இருந்தால், என் மாணவர் 2 இலட்சம் ஈட்டினால் அவர் என்னைவிட பணத்தில் பெரியவர் ஆகிறார். ஆனால், சீடத்துவம் என்பது பெருக்குவது அல்ல. இழப்பது. உச்சகட்ட இழப்பை, தற்கையளிப்பைச் செய்தவர் இயேசு. ஆக, இழத்தலில் இயேசுவை மாதிரியாகக் கொண்டு தற்கையளிப்பு செய்தால் போதும்.

இரண்டு, வரையறை அறிதல். சீடத்துவக் குழுமம் ஒரு தோழமை அல்லது சகோதரக் குழுமமாக இருக்கும் வரை பிரச்சினைகள் இல்லை. ஆனால், அது நிறுவனமாக மாற ஆரம்பித்தால் இருக்கைகள் உருவாகும். இருக்கைகள் உருவானால் எண்வரிசை உருவாகும். எண்வரிசை உருவானால் போட்டி உருவாகும். ஒருவர் மற்றவரைவிட எப்படி உயர்ந்தவர் என்று காட்டிக் கொண்டிருப்பதிலேயே, ஒருவர் எந்த இருக்கையில், எத்தனையாவது ஆளாக அமர்ந்திருக்கிறார் எனக் கணக்கிடுவதிலேயே காலம் போய்விடும். இறையாட்சியைப் பற்றிச் சிந்திக்கவோ, அதைப் பரப்பவோ நேரம் கிடைக்காது. ஆக, நீ இருக்கும் வரையறை போதும் என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

நம் வாழ்வில், அதிகாரம் அல்லது ஆற்றல் மிக முக்கியமானது.

நாம் ஏதோ ஒரு வகையில் அதிகாரம் செலுத்தவே விரும்புகிறோம். எடுத்துக்காட்டாக, காவல் நிலைய ஆய்வாளர் தன் அதிகாரத்தை தனக்குக் கீழ் இருக்கும் காவலரிடம் காட்டுகின்றார். காவலர் தன் அதிகாரத்தை சாலையில் பழம் விற்பவரிடம் காட்டுகின்றார். பழம் விற்பவர் தன் அதிகாரத்தை தன் மனைவியின்மேல் காட்டுகின்றார். மனைவி குழந்தை மேல் காட்டுகின்றார். குழந்தை தன் அதிகாரத்தை பொம்மை மேல் காட்டுகிறது. 

ஆனால், பொம்மையுடன் அதிகாரம் முடிகிறது.

'நீயும் பொம்மை, நானும் பொம்மை, 

நெனச்சு பார்த்த எல்லாம் பொம்மை

... ...

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை

வீசும் புயலில் உலகமே பொம்மை

நதியின் முன்னே தர்மமும் பொம்மை

வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை' என்னும் வி. லக்ஷ்மண் அவர்கள் வரிகளை நினைத்துக்கொண்டால், 

'அதுவே போதும்' என்று நம்மாலும் இயேசுவைப் போல சொல்ல முடியும்.


No comments:

Post a Comment