Friday, July 29, 2022

தப்பிய தலை

இன்றைய (30 ஜூலை 2022) முதல் வாசகம் (எரே 26:11-16:24)

தப்பிய தலை

இன்றைய முதல் வாசகத்திற்கும் நற்செய்தி வாசகத்திற்கும் சில தொடர்புகள் இருக்கின்றன.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியாவை, குருக்களும் இறைவாக்கினர்களும் சிறைப்பிடித்து மக்கள்முன் நிறுத்துகின்றனர். நற்செய்தி வாசகத்தில், இறைவாக்கினர் எனத் தான் கருதிய திருமுழுக்கு யோவானை, ஏரோது தன் சகோதரனின் மனைவியின் பொருட்டுச் சிறையில் அடைக்கின்றார்.

முதல் வாசகத்தில், தான் கொல்லப்பட்டால் தன் இரத்தப்பழி நகர்மேல் விழும் என்று தன்னுடைய களங்கமின்மையை எடுத்துரைக்கின்றார் எரேமியா. நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவானின் களங்கமின்மையை நினைத்து ஏரோது வருந்துகிறார்.

முதல் வாசகத்தில், மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளின் அடிமைகளாக இருக்கின்றார்கள். நற்செய்தி வாசகத்தில், ஏரோது தன்னுடைய உணர்ச்சிகளின் அடிமையாக இருக்கின்றார்.

முதல் வாசகத்தில், எரேமியா கொல்லப்படாதவாறு காக்க, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருக்கிறார். நற்செய்தி வாசகத்தில், ஆனால், திருமுழுக்கு யோவான் கொல்லப்படாதவாறு காக்க, அவருக்கு யாரும் உறுதியாய் இல்லை.

முதல் வாசகத்தில், தன்னுடைய இறைவாக்கினரைக் காப்பாற்றிய கடவுள், நற்செய்தி வாசகத்தில் அவரைக் காப்பாற்றவில்லை.

கடவுளின் வழிகள் ஆச்சர்யமாகவே இருக்கின்றன.

சாப்பானின் மகனை அனுப்பி ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தின் வாயை அடைத்த கடவுள், குடிபோதையில் இருந்த ஒற்றை ஏரோதுவின் வாயை அடைத்து, திருமுழுக்கு யோவானைக் காப்பாற்றாதது ஏன்?

அல்லது, இவை இரண்டுமே இயல்பான நிகழ்வுகள்தாம். இவற்றில் கடவுளுக்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது என்று சொல்லலாமா?

இல்லை.

முதல் வாசகத்தில் சாப்பானின் மகன் அகிக்காமை அனுப்பிய கடவுள், நற்செய்தி வாசகத்தில் இயேசுவை அனுப்புகின்றார்.

ஏனெனில், திருமுழுக்கு யோவானுடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்த சீடர்கள், இயேசுவிடம் போய் அதை அறிவிக்கின்றனர்.

இனி, இயேசு திருமுழுக்கு யோவானின் வேலையைச் செய்யப் புறப்படுவார்.

ஆக, நீதிக்கான, நேர்மைக்கான, உண்மைக்கான போராட்டத்தில் தோல்வி என்பது இல்லை. தீமை நன்மையை வெல்வது போலத் தெரிந்தாலும், நன்மை தீமையை வெற்றி கொள்ளும் என்பதே வாழ்வியல் எதார்த்தம்.

'தொடங்கும் அனைத்தும் நன்றாகவே நிறைவுபெறும். நன்றாக நிறைவுபெறவில்லை என்றால், அது இன்னும் நிறைவுபெறவில்லை என்றே பொருள்' என்கிறார் ஆஸ்கார் வைல்ட்.


No comments:

Post a Comment