காற்றைப் பெற்றெடுத்தல்
கடந்த வாரம் புனேயில் எனக்குக் கற்றுக்கொடுத்த அருள்பணியாளர் ஒருவரைச் சந்தித்தேன். உரையாடலின் இடையே, 'நாம் எழுதும் எழுத்துகள், தயாரிக்கும் உரைகள், எடுக்கும் வகுப்புகள், ஏன் வாழும் வாழ்க்கையும் கூட, நண்டு சாப்பிடுவது போல உள்ளன(து)' என்றார். அவரே தொடர்ந்தார், 'நண்டு சாப்பிடும்போது நாம் நிறைய முயற்சி செய்கின்றோம். நண்டைத் தட்டில் எடுத்து வைத்தல், கையிலும் குத்தி விடாமல் அதே நேரத்தில் வன்மையாகவும் ஓட்டை உடைத்தல், உடைந்த துண்டுகளைப் பிரித்தல், பிரித்தவற்றிலிருந்து சதையைத் தனியே எடுத்தல் என நிறைய வேலை செய்தாலும், வாய்க்குச் செல்வது என்னவோ ஒரு விரல் அளவே!'.
நாம் செய்யும் செயல்களில் உள்ள துன்பம் செயல்களின் விளைவைவிட அதிகமாக இருக்கும்போது நம்மை அறியாமல் சோகமும் விரக்தியும் நம்மைப் பற்றிக்கொள்கின்றன.
இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்களின் புலம்பலாக இருக்கின்றது.
நாடுகடத்தப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் தாய்நாடு திரும்புவதற்கான முயற்சிகள் அனைத்தும் நண்டு சாப்பிடுவது போல ஆகிவிட்டது எனப் புலம்புகிறார் எசாயா.
இன்றைய முதல் வாசகத்தில் மூன்று உருவகங்கள் என்னைக் கவர்கின்றன:
(அ) காற்றைப் பெற்றெடுத்தல்
'ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம் ... பேறுகாலம் நெருங்குகையில் கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவது போல, ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்! நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம். ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்.'
'காற்றைப் பெற்றெடுத்தல்' என்றால் என்ன?
இன்று நாம் வைத்திருக்கும் அல்ட்ரா ஸ்கேன் வசதிகள் அன்று கிடையாது. பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தால் அவர் கருவுற்றிருப்பதாக எண்ணினர். பேறுகால வலி அவருக்கு வந்துவிட்டது எனக் காத்திருந்து, கடைசியில் அது வயிற்றில் உள்ள 'வாயு' என்ற நிலை அறியப்பட்டது. இதற்கு மருத்துவத்தில், 'எம்னெயுமாடோஸிஸ் இன்டெஸ்டினாலிஸ்' என்பது பெயர். இந்த ஒரு மருத்துவ நிலையை இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையோடு பொருத்துகிறார் எசாயா.
வயிறு பெரிதாக இருப்பது, வலி எடுப்பது, வலியால் துடிப்பது என அனைத்தும் உண்மை. ஆனால், குழந்தைக்குப் பதில் வயிற்றில் இருப்பது காற்று. இஸ்ரயேல் மக்கள் இறைவனை நோக்கிக் கதறி அழுவது, தங்கள் துன்பங்களால் வருந்தி வாடுவது அனைத்தும் உண்மை. ஆனால், அவற்றால் பயன் எதுவும் இல்லை. ஏனெனில், அவர்கள் தங்கள் பழைய வாழ்வை விட்டுத் திரும்பவில்லை.
நம் முயற்சிகள் இப்படி இருந்தால் எவ்வளவு பரிதாபத்துக்குரியவர்கள் நாம்!
(ஆ) உலகில் குடியிருக்க
'நாடு விடுதலை பெற நாங்கள் எதையும் சாதிக்கவில்லை. உலகில் குடியிருக்க எவரும் பிறக்கப் போவதில்லை.'
தங்கள் இயலாமையை மக்கள் உணர்வதோடு, வாழ்வின் எதார்த்த நிலையையும் உணர்கின்றனர். அதாவது, இந்த உலகில் பிறக்கும் எவரும் இங்கேயே குடியிருப்பதில்லை. அப்படிக் குடியிருப்பதற்காக இங்கே யாரும் பிறக்கவில்லை. வாழ்வின் நிரந்தரமற்ற நிலையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். தங்களின் தற்காலிக வாழ்க்கை நிலையில் தங்களால் எதுவும் செய்ய இயலவில்லையே எனப் புலம்புகின்றனர்.
(இ) புழுதியில் வாழ்வோரே
இறந்தவர்களை மரியாதை நிமித்தமாக அழைக்கும் சொல்லாடலே 'புழுதியில் வாழ்பவர்.' புழுதி என்பது தண்ணீர்ப் பசை இல்லாத நிலையையும், காற்றால் அடித்துச் செல்லப்படும் நிலையையும், கால்களில் மிதிபடும் நிலையையும் குறிக்கிறது. இஸ்ரயேல் மக்களின் வாழ்வு இப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், அவர்களை ஆண்டவராகிய கடவுள் எழுப்பி ஒளி தருவதாகப் பாடுகின்றார் எசாயா. ஆக, புலம்பலோடு இணைந்து நம்பிக்கையையும் அள்ளித் தெளிக்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில் (மத் 11:28-30), 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, என்னிடம் வாருங்கள்' என அழைக்கின்றார் இயேசு. அவரிடம் நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கின்றது.
நம் வாழ்வின் எதார்த்த நிலை எப்படி இருந்தாலும், கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் நம்பிக்கை ஒளி தெரியத்தான் செய்கின்றது.
பல நேரங்களில் நாம் எடுக்கும் முயற்சிகளனைத்தும் “விழலுக்கிறைத்த நீரே” என சொல்ல வருகிறது இன்றையப் பதிவு.
ReplyDeleteவீங்கிய வயிற்றிலிருந்து குழந்தை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு வெறும் காற்றின் வரவால் ஏமாற்றமாகிப் போவதும்….
இந்த உலகில் நாமெடுக்கும் பிறவி யாருக்கும் நிரந்தரமில்லை என்ற உணர்வு தரும் வெறுமையும்….
பலரின் காலடித் தடங்களால் மிதிபடும் புழுதியில் வாழ்வோரின் நிலமையும்….
அனைத்துக்குமே ஒளி தருவது ஆண்டவர் தரும் நம்பிக்கை.அந்த நம்பிக்கையே சோர்ந்து போகும் நம்மையும் இறைவன் பால் திருப்புவது. “ அவரை நிமிர்ந்து பார்ப்பவர்கள் அனைவரும் நாணத்தால் தலைகுனிய மாட்டாரென” நம்புவோம்!
நம்பிக்கையின் செய்தி… தந்தைக்கு நன்றி!
நண்டு சாப்பிடும்போது நாம் நிறைய முயற்சி செய்கின்றோம். நண்டைத் தட்டில் எடுத்து வைத்தல், கையிலும் குத்தி விடாமல் அதே நேரத்தில் வன்மையாகவும் ஓட்டை உடைத்தல், உடைந்த துண்டுகளைப் பிரித்தல், பிரித்தவற்றிலிருந்து சதையைத் தனியே எடுத்தல் என நிறைய வேலை செய்தாலும், வாய்க்குச் செல்வது என்னவோ ஒரு விரல் அளவே!' /// இதுக்குதான் நான் நண்டு குழம்பே வைக்குறதில்லை ...
ReplyDelete