Sunday, July 24, 2022

புனித பெரிய யாக்கோபு

இன்றைய (25 ஜூலை 2022) திருவிழா

புனித பெரிய யாக்கோபு

நாளை திருத்தூதரான தூய யாகப்பரின் - யாக்கோபு - திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஆங்கிலத்தில் 'ஜேம்ஸ்', இஸ்பானியத்தில் 'ஹைமே', இத்தாலியனில் 'யாக்கோமோ' என அழைக்கப்படும் இவரின் லத்தீன் பெயர் 'சான்க்து இயாக்கோபு' - இதுவே மருவி சந்தியாகு அல்லது சந்தியாகோ என ஆகிவிட்டது.

இவர் திருஅவை பாரம்பரியத்தில் 'யாக்கோப் மயோர்' (பெரிய யாகப்பர்) எனவே அறியப்படுகின்றார். இவர்தான் செபதேயுவின் மகன். யோவானின் சகோதரர். அப்படியென்றால் 'யாக்கோப் மினோர்' (சின்ன யாகப்பர்) என்று சொல்லப்படுபவர் யார்? அவர் அல்ஃபேயுவின் மகன் யாக்கோபு (காண். மத் 10:2).

இயேசுவுக்கு பன்னிரண்டு திருத்தூதர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தப் பன்னிரண்டு பேரில் மூன்று பேர் இயேசுவின் 'பவர் ஹவுஸ்' போல அவருக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள்: பேதுரு, சந்தியாகு மற்றும் யோவான். இந்த மூவரும் தான் இயேசு உருமாற்றம் பெற்றபோது அவரோடு உடனிருக்கின்றனர். இந்த மூவரையும் தான் இயேசு யாயிரின் மகளை உயிர்ப்பிக்கும்போது அருகில் வைத்துக்கொள்கின்றார். மேலும் இந்த மூவர்தாம் இயேசுவின் இரத்தவியர்வையின்போது கெத்சமேனித் தோட்டத்தில் உடனிருக்கின்றனர்.

மேலும், இவர்தான் முதல் மறைசாட்சி என்கிறது பாரம்பரியம்.

இவர் தொடக்ககாலத்தில் திருச்சபையின் முக்கியத் தலைவராக இருந்திருக்கின்றார். மேலும் முதன்முதலாக கூட்டப்பட்ட எருசலேம் சங்கத்தின் தலைவராகவும் (திப 15) இருந்து பிறஇனத்தாருக்கும் மீட்புத் திட்டத்தில் பங்கு உண்டு என்ற கருத்தை அழுத்தமாக முன்வைக்கின்றார்.

இவர் தன் திருச்சபைக்கு ஒரு திருமடலும் வரைகின்றார். இந்தத் திருமடலில் இருந்துதான் 'நோயிற்பூசுதல்' என்னும் அருளடையாளம் பிறக்கின்றது. 'நம்பிக்கையும் செயலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்,' 'துன்பத்தின் வழியாக மட்டுமே வாழ்வு' என்ற கருத்துக்களை முன்வைப்பதும் இவரே.

எருசலேமிருந்து இவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இஸ்பானிய நாட்டில் உள்ள 'கம்போஸ்தெலா' என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. 'கம்போஸ்தெலா' என்றாலே 'உடலின் எலும்புகளின் மிச்சம்' என்பதே பொருள். இந்தச் சாலை 'சான் டியாகோவை நோக்கிய சாலை' என இன்றும் அழைக்கப்பட்டு நிறையப்பேர் ரோமிலிருந்தும், லூர்துவிலிருந்தும், ஃபாத்திமாவிலிருந்தும் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். தங்களின் வாழ்வின் நோக்கம் தெளிவாகும் அல்லது தெளிவாக வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தப் பயணத்தில் காட்சி கிடைப்பதாக இன்னும் நம்பப்படுகிறது.

சந்தியாகப்பர் நம் வாழ்வின் அர்த்தத்தை நாம் கண்டுகொள்ள அருள்புரிவாராக!

நாளைய நற்செய்தியில் இவரின் வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை அறிய இவரின் தாய் இவரையும், இவரின் தம்பி யோவானையும் அழைத்துக்கொண்டு இயேசுவிடம் சென்று, 'வலப்பக்கம் ஒருவரும், இடப்பக்கம் ஒருவரும் அமருமாறு செய்யும்' என்கிறார்.

பள்ளியின் ஆண்டுவிழா அல்லது கலைவிழா நேரத்தில் தன் குழந்தையைக் கூட்டி வரும் தாய் தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பாசிரியரிடம், 'என் மகளுக்கு, மகனுக்கு இந்த டான்ஸ் வேண்டும், அந்த நாடகத்தில் இந்த வேடம் வேண்டும்' எனக் கேட்பதுபோல இருக்கிறது இந்நிகழ்வு.

இப்படி ஒரு அம்மா கிடைக்க இந்த இரண்டு மகன்களும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

'என் மகன் உன் பின்னாலே திரியுறானே, வீட்டிற்கும் வருவதில்லை, மீன்பிடிக்கவும் செல்வதில்லை. இப்படியே போனால் என்ன ஆவது? ரெண்டுல ஒன்னு சொல்லு!' என்று இயேசுவிடம் முறையிடுகின்றார் இந்த அன்புத்தாய்.

ஆனால், இயேசு கழுவுற மீனுல நழுவுற மீனாய் 'நீங்க கிண்ணத்துல குடிப்பீங்களா?' 'தட்டுல சாப்பிடுவீங்களா?' என்கிறார். 'என் வாழ்வின் பொருள் என்ன?' என்று நான் இயேசுவிடம் செல்லும்போதும் அவர் இப்படி என்னை அலைக்கழிக்க வாய்ப்புகள் நிறைய உண்டு. பின் எதன்தான் செய்வது? யாருக்கு எது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கோ அது அவருக்கு அருளப்படும். அதுவரைக்கும்?

செய்ற வேலையைச் செய்வோம் - யாக்கோபும், யோவானும், நாமும்.

இறுதியில், இவர் இயேசுவுக்கான மறைசாட்சியாக உயிர்விடுகின்றார். இவருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் பெட்டியில், 'இயேசுவின் சகோதரர் யாக்கோபு' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள்தாம், இயேசு என்ற வரலாற்று நபர் வாழ்ந்தார் என்பதற்கான, விவிலியத்திற்குப் புறம்பான சான்றாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (2 கொரி 4:7-15), 'கடவுளின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது' என எழுதுகிறார்.

'மண்பாண்டத்தில் செல்வம்' என்னும் இந்த உருவகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இந்த உருவகத்தைப் புரிந்துகொள்ள பவுலின் சமகாலச் சூழலைப் புரிந்துகொள்வது அவசியம். பவுலின் சமகாலத்தில் கடவுள் வழிபாட்டுக்குப் பொன், உணவு உண்ண வெள்ளி, மலம் மற்றும் சிறுநீர் சேகரிக்க மண், உமிழ்நீர் துப்ப மரம் என்று நான்கு வகைகளான பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில், வீட்டுத் தலைவர் பொன் மற்றும் வெள்ளி பாத்திரங்களைக் கையாள்வார். மண் மற்றும் மரப் பாத்திரங்களை அடிமைகள் கையாள்வர். மண் மற்றும் மரப் பாத்திரங்கள் தாழ்வானவற்றுக்குப் பயன்பட்டதால் அவை வீட்டிற்கு வெளியே வைக்கப்படும். மழை மற்றும் வெயில் என அனைத்துக் காலங்களிலும் வெளியே கிடக்கும். மதிப்பற்றவற்றுக்குப் பயன்படுவதால் அவை மதிப்பின்றிக் கிடக்கும்.

பவுல் தான் அப்படிப்பட்ட நிலையில் இருந்ததாகத் தன் பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்து, கடவுளின் அழைப்பு தனக்குச் செல்வம் போல வந்தது என்கின்றார். 

மலம் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மண்பாண்டத்தில் திடீரென பொன் மற்றும் புதையலை வைத்தால் என்ன ஆகும்? மண்பாண்டத்தின் மதிப்பு கூடும். மண்பாண்டம் வீட்டிற்குள் வைத்துப் பாதுகாக்கப்படும். ஆனால், அந்த மண்பாண்டத்தின் மதிப்பைக் கூட்டுவது அதன் உள்ளே இருக்கும் பொன் மற்றும் புதையல்தாம். ஆக, திருத்தூதர்கள் எளியவராக இருந்தபோது இறைவன் அவர்களைத் தெரிவு செய்து, தன் அழைத்தல் என்னும் பொன்னை அவர்களுக்குக் கொடுத்து அவர்களின் மதிப்பை உயர்த்துகின்றார்.

மண்பாண்டம் தன்னிலே வலுவற்றது, மதிப்பற்றது, தாழ்வானது. இருந்தாலும், வீட்டுத் தலைவர் அதைத் தெரிந்துகொள்கின்றார்.

திருத்தூது நிலைக்கு உயர்த்தப்பெற்ற யாக்கோபு கடற்கரையில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது மண்பாண்டம் போல இருக்கின்றார். ஆண்டவராகிய இயேசு அவர்களைத் தன் இறையாட்சிக்குப் பணிக்கு அழைக்கின்றார். மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் மனிதரைப் பிடிப்பவர் ஆகின்றார்.

இந்த உருவகமும் திருநாளும் நமக்குச் சொல்வது என்ன?

(அ) கடவுள் நம் எளிய நிலையில் நம்மைத் தெரிந்துகொள்கின்றார். நம் மதிப்பை உயர்த்துகின்றார். 

(ஆ) மண்பாண்டம் போல நாமும் வலுவற்று நொறுங்குநிலையில் இருக்கின்றோம். இறைவன் நம் நொறுங்குநிலையைத் தழுவிக்கொள்கின்றார்.

(இ) மண்பாண்டத்தில் இப்போது செல்வம் இருப்பதால் அது முன்பு இருந்ததை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனக்கு உள்ளே இருக்கின்ற அந்தப் புதையலைத் தற்காத்துக்கொள்ளும் வண்ணம் அது தன்னையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உயர்மதிப்புக்கு ஒதுக்கப்பெற்ற அந்த மண்பாண்டம் இனி தாழ்வானவற்றின் பக்கம் செல்தல் கூடாது.

திருத்தூதர் யாக்கோபிடம் விளங்கிய துணிவும் மனத்திடமும் நாமும் பெற இறைவேண்டல் செய்வோம்.

No comments:

Post a Comment