Thursday, June 30, 2022

என்னைப் பின்பற்றி வா!

இன்றைய (1 ஜூலை 2022) நற்செய்தி (மத் 9:9-13)

என்னைப் பின்பற்றி வா!

மத்தேயு நற்செய்தியாளரின் அழைப்பு நிகழ்வை இன்றைய நற்செய்திப் பகுதியில் வாசிக்கின்றோம். 'இயேசு கண்டார்,' 'வா! என்றார்,' 'மத்தேயு பின்பற்றிச் சென்றார்' என்று வரிசையான மூன்று வினைச்சொற்களால் நிகழ்வைப் பதிவு செய்கின்றார் மத்தேயு. 

மத்தேயுவின்மேல் இயேசுவின் பார்வைதான் முதலில் விழுகின்றது. இயேசுவே மத்தேயுவை முதலில் காண்கின்றார். அவர் நம்மைக் காணாமல் அவரை நாம் காணுதல் சாத்தியமில்லை என்கிறார் இயேசு. 

இரண்டாவதாக, 'என்னைப் பின்பற்றி வா!' என்னும் இயேசுவின் குரலைக் கேட்கின்றார் மத்தேயு. மத்தேயு தன் பணியில் மும்முரமாக இருக்கின்றார். வரி தண்டும் பணி மிகவும் மோசமான பணி. யூதர்களால் இழிதொழில் எனக் கருதப்பட்ட பணிகளில் வரிதண்டுவதும் ஒன்று. ஏனெனில், யூதர்களிடமிருந்து பெறப்பட்ட வணிக வரி, நில வரி, சொத்து வரி, விளைச்சல் வரி போன்றவை உரோமைப் பேரரசுக்குக் கொடுக்கப்பட்டது. இயேசுவின் சமகாலத்தில் உரோமை அரசு விதித்த அதிக வரி முறைகளால் பலர் முணுமுணுத்தனர். மேலும், உரோமை அரசுக்கு வேலை பார்க்கின்ற வரி தண்டும் யூதர்கள் தங்கள் சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டனர். இப்படிப்பட்ட பின்புலத்தில், ரபி அல்லது போதகர் ஒருவர், 'என்னைப் பின்பற்றி வா!' என்று சொல்வதை மத்தேயு மிக ஆச்சர்யமாகப் பார்த்திருப்பார். மேலும், வரி வசூலிக்கின்ற இடத்தில் உள்ள சண்டை, சத்தம், சச்சரவுகளுக்கு நடுவே மத்தேயுவால் இயேசுவின் குரலை எப்படிக் கேட்க முடிந்தது?

மூன்றாவதாக, 'அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்'. அதாவது, இயேசுவின் குரல் கேட்டவுடன் அதற்கேற்ற பதிலிறுப்பைச் செய்கின்றார் மத்தேயு. உடனடியாகப் புறப்பட்டுச் செல்கின்றார். மேலும், இந்த இடத்தில் மத்தேயுவின் நேர்மை அல்லது நாணயத்தையும் காண முடிகிறது. தனக்கென்ற எந்தப் பணமும் எடுத்துக்கொள்ளாமல், இருக்கின்ற பணத்திற்கான கணக்கை உடனடியாக எழுதி வைப்பவராகவும், தன் பணியை அப்படியே விட்டுவிட்டுச் செல்லும் அளவுக்குத் துணிச்சல் பெற்றவராகவும் இருக்கின்றார். 

வரிக் கணக்கை எழுதிய கைகள் இனி கடவுளின் நெறிக் கணக்கை எழுதப் போகின்றன என அவருக்குத் தெரிந்ததா?

தன் பழைய காலத்தை விட்டு எழுகின்ற மத்தேயு, தன் பழைய நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்கின்றார். எலிசா தன் குடும்பத்தாருக்கு வழங்கிய பிரியாவிடை விருந்தை ஒத்துள்ளது இது. 'இவர்கள்தாம் என் நண்பர்கள்!' என்று தன் நண்பர்களை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வாகவும், 'இதுதான் இயேசு!' என்று இயேசுவைத் தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வாக இருக்கிறது மத்தேயு அளிக்கின்ற விருந்து.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் சமூகத்தில் நிலவிய சமூக அநீதியைச் சாடுகின்ற இறைவாக்கினர் ஆமோஸ், ஆண்டவர் அனுப்பப் போகின்ற பஞ்சத்தை உரைக்கின்றார். உணவுக்கான அல்லது நீருக்கான பஞ்சம் அல்ல அது. மாறாக, இறைவார்த்தைக்கான பஞ்சம் என உரைக்கின்றார் ஆமோஸ். அதாவது, இனி இறைவன் அவர்களோடு பேச மாட்டார். 

இறைவனின் வார்த்தையே இவ்வுலகைப் படைத்தது, தங்களை எகிப்திலிருந்து மீட்டது, தங்களோடு பயணம் செய்தது என அனுபவித்த இஸ்ரயேல் மக்களுக்கு இது மிகப் பெரிய சாபமாக இருந்திருக்கும். ஏனெனில், இறைவன் பேசவில்லை என்றால் அவர்களுடைய இருத்தல் இல்லாமல்போய்விடும். 

இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வில் அநீதச் செயல்கள் செய்துவிட்டு, இறைவனின் ஆலயத்திற்குச் சென்று அவரைப் புகழ்ந்து பாடவும், வழிபடவும் செய்தனர். இவ்வார்த்தைகள் அனைத்தும் வெற்று வார்த்தைகள் என அவர்களுக்கு உணர்த்துவதற்காக, இறைவன் ம்யூட் மோடுக்குச் செல்கின்றார். 

மத்தேயு நற்செய்தியாளரின் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம், பணி, வேலையாள்கள் என எல்லாம் இருந்தது. ஆனால், 'இறைவார்த்தை' இல்லை. ஆகையால்தான் இயேசுவின் சொல்லைக் கேட்டவுடன் எழும்பிச் செல்கின்றார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

(அ) இறைவன் என்னைக் காணுமாறு நான் அனுமதித்துள்ளேனா?

(ஆ) இறைவனின் குரலை மற்ற அனைத்துக் குரல்களிலுமிருந்து வேறுபடுத்தி அறிய என்னால் இயலுமா? அவரின் குரலை நான் கேட்காதவாறு என்னைச் சுற்றி எழுப்பும் ஒலிகள் எவை?

(இ) உடனடியாக இயேசுவை நான் பின்பற்றுவதற்கு உள்ள தடைகள் எவை?

இன்று பிறக்கும் புதிய மாதத்தில், உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுடன் இறைவார்த்தையும் நமக்கும் நிறைவாகக் கிடைப்பதாக!


1 comment:

  1. Philomena Arockiasamy7/01/2022

    புனித. மத்தேயு! அவர் வரி தண்டும் தொழிலுக்குச் சொந்தக்காரர்; இழிநிலையில் வைத்துப் பேசப்பட்டவர்…ஆனாலும் நல்லவர்.ஆகவே தான் இயேசுவின் பார்வை இவர்மேல் விழுகிறது.இறைவன் குரல் கேட்டவுடன் தன் பணியை அப்படியே விட்டுவிட்டு அவரைப் பின் செல்கிறார்.இயேசுவைத் தன் நண்பர்களுக்கும்….தன் நண்பர்களை இயேசுவுக்கும் அறிமுகம் செய்யும் முகத்தான் விருந்தொன்றையும் படைக்கிறார்.அவரைச்சார்ந்தவராக மாறுகிறார்.
    இஸ்ரேல் மக்களின் அநீதிக்காக அவர்களைச்சாடுகிற ஆமோஸ் இனி இறைவன் அவர்களோடு பேசமாட்டாரென உரைக்கிறார். பொதுவாக நம் வாழ்வில் என்னெல்லாம் இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு இல்லாத ஒன்றை மட்டுமே தேடி ஓட வேண்டும். அதைத்தான் செய்தார் மத்தேயு. இறைவார்த்தை இல்லாத வாழ்வை சரிபடுத்த இறைவனை நோக்கி ஓடுகிறார். இன்று நம்மிடம் என்ன இல்லையென நாம் தெரிந்து வைத்திருக்கிறோமா? அதைப்பெற இருப்பவரைத்தேடி ஓடுகிறோமா? இன்று இறைவன் குரல் கேட்கவும்…அவரை நாடித்தேடி ஓடவும்..அவரைப்பின்பற்ற எனக்குள்ள தடைகளைத் தகற்தெரியவும் வரம் கேட்போம்…நாம் கேட்காத்தும் கூட சேர்த்தே கிடைக்கும்.தந்தையின் நல் வார்த்தைகள் அனைவரிலும் நிறைவேறட்டும்!!! இறைவார்த்தை இருக்குமிடத்தில் அனைத்தும் இருக்குமெனச் சொல்லும் பதிவு. தந்தைக்கு நன்றி!

    ReplyDelete