தவக்காலம் முதல் ஞாயிறு
இணைச்சட்ட நூல் 26:4-10 உரோமையர் 10:8-13 லூக்கா 4:1-13
செயல் என்பதே சொல்
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோனில் புதிய செயலி (ஆப்) ஒன்றை நிறுவும்போது, கூகுள் ப்ளேஸ்டோர் அல்லது ஐட்யூன்ஸ் ஸ்டோர் நமக்கு ஒரு ஃபார்மைத் தந்து, 'ஏற்றுக்கொள்கிறேன்' அல்லது 'நிராகரிக்கிறேன்' என்ற தெரிவுகளை முன்வைக்கிறது. 'ஏற்றுக்கொள்கிறேன்' என்று டச் செய்தவுடன் செயலி நம் ஃபோனுக்குள் வருகிறது. புதிய மின்னஞ்சல் முகவரி, புதிய டுவிட்டர் அல்லது வாட்ஸ்ஆப் அல்லது ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடங்கும்போதும் நாம் இத்தகைய ஃபார்ம்களை வாசிக்காமல் 'ஏற்றுக்கொள்கிறோம்.' எல்லாம் ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கையால்தான். இல்லையா? வங்கியில் நாம் இடும் கையெழுத்து, புதிய கணக்கு அல்லது புதிய வைப்பு நிதி, அல்லது வரி விலக்கு படிவங்களில் நாம் இடும் கையெழுத்துக்கள் அனைத்தும் நம்பிக்கையால்தான்!
திருமணத்தில் கணவனும், மனைவியும், 'இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து' என்று சொல்லும் வாக்குறுதியும், அருள்பணி நிலை ஏற்கும் இனியவர், 'இதோ! வருகிறேன்!' என்று சொல்லும் முன்வருதலும், 'இறைவனின் துணையால் விரும்புகிறேன்' என்று சொல்வதும், 'வாக்களிக்கிறேன்' என்று வாக்குறுதி கூறுவதும் நம்பிக்கையால்தான்.
ஆக, நம் அன்றாட வாழ்வில் சாதாரண செயலியை பதிவிறக்கம் செய்வதிலிருந்து, வாழ்க்கைத் தெரிவுகள் வரை நிறைய நிலைகளில் நாம் 'ஆம்' என்று அறிக்கை செய்கின்றோம். இந்த ஆம் என்ற வார்த்தையின் பின்னால் இருப்பது 'நம்பிக்கை' என்ற அந்த ஒற்றைச் சொல். மேலும், இவ்வாக்குறுதிகள் பெரும்பானவற்றை நாம் கடைப்பிடிக்கவும் செய்கிறோம். நாம் 'ஆம். ஏற்றுக்கொள்கிறேன்' என்று அறிக்கையிடும்போது, அந்த அறிக்கை நமக்கு சில உரிமைகளைப் பெற்றுத்தருகிறது. செயலியைப் பயன்படுத்தி எல்லாரோடும் உரையாடுவதே அவ்வுரிமை. அதே போல, திருமணத்திலும், துறவறத்திலும் உரிமைகள் உண்டு. உரிமைகளோடு சேர்ந்து கடமைகள் இருந்தாலும், உரிமைகள் இவ்வறிக்கை வழியாக நமக்குக் கொடையாகக் கிடைக்கின்றன.
ஆக, மனிதர்கள்மேல் நாம் நம்பிக்கை கொண்டு செய்யும் அறிக்கைகளே நமக்கு இவ்வளவு உரிமைகளைப் பெற்றுத்தருகிறது என்றால், கடவுள்மேல் நாம் நம்பிக்கை கொண்டு செய்யும் அறிக்கைகள் நமக்கு இன்னும் உரிமைகளைப் பெற்றுத்தரும் என்ற செய்தியைத் தருகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. நம்பிக்கையால் நாம் அறிக்கையிடும்போது நம் நம்பிக்கை தொடர் வலுப்பெறுகிறது.
இன்றைய முதல் வாசகம் (காண். இச 26:4-10), இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற வாரங்களின் திருவிழா அல்லது முதற்கனிகள் திருவிழாவின் பின்புலத்தில் அமைந்திருக்கிறது. இந்த நாளில்தான் இஸ்ரயேல் மக்கள், கடவுள் தங்களுக்குக் கொடையாக வழங்கிய நிலத்திற்காகவும், அவரின் சட்டத்திற்காகவும், சீனாய் மலையில் அவர் தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்காகவும் நன்றிகூறுகின்றனர். தன் நிலத்தின் பலன்களையும் கனிகளையும் ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு வருகின்ற இனியவர் ஆலயத்தின் முகப்பில் அவற்றை வைக்க வேண்டும். ஆலயத்தில் இருக்கும் குரு அக்கூடையை எடுத்துக்கொண்டு போய் பீடத்தின்முன் வைப்பார். அந்த நேரத்தில், இந்த இனியவர் பின்வரும் நம்பிக்கை அறிக்கையைச் செய்ய வேண்டும்: 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு ... இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன்.' கடவுள் இஸ்ரயேல் மக்களை ஓர் இனமாக, நாடாக உருவாக்கிய மூன்று நிகழ்வுகள் இந்த அறிக்கையில் அடிக்கோடிடப்படுகின்றன: ஒன்று, 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை' அல்லது 'நாடோடியான தந்தை' - இது ஆபிரகாமையும் மற்ற குலமுதுவர்களையும் குறிக்கிறது. இவர்கள் நாடோடிகளாக இருந்தனர். இவர்களைக் கடவுள் தெரிந்துகொள்கிறார். இரண்டு, விடுதலைப் பயணம். எகிப்தில் பாரவோனுக்கு அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மோசேயின் தலைமையில் விடுவிக்கும் கடவுள், பல அருஞ்செயல்களை நிகழ்த்தி, தம் வலிய புயத்தால் அவர்களை வழிநடத்துகின்றார். மூன்று, பாலும் தேனும் பொழியும் நாடு. இஸ்ரயேல் மக்களின் மூதாதையருக்கு நிலத்தை வாக்களித்த கடவுள், பாலும் தேனும் பொழியும் நாட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கே அவர்களைக் குடியேற்றுகின்றார்.
ஆக, முதற்கனிகளை ஆண்டவராகிய கடவுளுக்கு அர்ப்பணிக்க அவரின் இல்லம் வரும் இனியவர் இந்த நம்பிக்கை அறிக்கையைச் சொல்லும்போது, அல்லது கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால் அறிக்கையிடும்போது, தன் இருப்பும், தன் இயக்கமும் கடவுளின் கொடை அல்லது கடவுள்தந்த உரிமை என்பதை அறிக்கையிடுகிறார். ஆக, சாதாரண நாடோடி இனத்தை ஓர் இனமாக, நாடாகக் கட்டி எழுப்பியது ஆண்டவரின் அருளே. அவரின் அருளே இவர்களைத் தெரிவு செய்து, விடுதலை செய்து, நாட்டில் குடியமர்த்தியது. எனவே, முதற்கனிகளை ஆண்டவருக்குப் படைக்க வந்த இஸ்ரயேல் மக்கள் கடவுள் தந்த உரிமைகளை நினைவுகூர்ந்து இவ்வறிக்கை செய்தனர்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 10:8-13), 'மீட்பு எல்லாருக்கும் உரியது' என்று பவுல் இறையியலாக்கம் செய்யும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் எப்படி மீட்பு பெறுகிறார்? என்ற கேள்விக்கு பவுல் இரண்டு வழிகளைச் சொல்கின்றார். ஒன்று, 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிடுதல். இரண்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நம்புதல். இங்கே, வாயார அறிக்கையிடுதலும், உள்ளார நம்புவதலும் இணைந்தே செல்கின்றன.
முதலில், 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிடுதல். இதைப் பவுலின் சமகாலத்துச் சூழலில் புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவின் சமகாலத்தவரைப் பொருத்தமட்டில், குறிப்பாக அவரை எதிர்த்தவர்களைப் பொருத்தமட்டில், அவர் ஒரு தோல்வி. உரோமையர்களால் சிலுவையில் அறையப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ஒரு குற்றவாளி. இந்தப் பின்புலத்தில், 'இயேசுவே ஆண்டவர்' என பொதுவான இடத்தில் அறிக்கையிடுவது நம்பிக்கையாளருக்கு அவ்வளவு எளிய காரியம் அல்ல. ஏனெனில், 'குற்றவாளி' எனக் கருதப்படும் ஒருவரை, 'ஆண்டவர்' (அதாவது, 'கடவுள்') என எப்படி அறிக்கையிட முடியும்? யூதர்கள் தங்களுக்கு யாவே தவிர வேறு ஆண்டவர் இல்லை என நம்பினர். ஆக, அவர்கள் இந்த அறிக்கையை எதிர்ப்பார்கள். புறவினத்தார்கள் - குறிப்பாக, உரோமையர்கள் - தங்களுக்கு சீசரே ஆண்டவர் என நம்பினர். அவர்களும் இந்த அறிக்கையை எதிர்ப்பார்கள். இவ்வாறாக, அறிக்கையிடும் நம்பிக்கையாளர் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடும். இந்த அறிக்கைக்காக அவர் தண்டிக்கவும் கொலைசெய்யவும் படலாம். துணிச்சல் கொண்டிருக்கும் ஒருவரே இவ்வறிக்கை செய்ய முடியும். இரண்டாவதாக, இறந்த இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என மனதார நம்புதல். மனது என்பது மூளை செயலாற்றும் இடம் என்றும், மனிதர்கள் முடிவுகளையும், தெரிவுகளையும் எடுக்கும் இடம் என்று கருதப்பட்டது. ஆக, ஒருவர் தன் முழு அறிவாற்றலோடு இயேசுவின் உயிர்ப்பை நம்ப வேண்டும். மேலும், அவரின் இத்தெரிவு அவரின் வாழ்க்கையின் போக்கையும் மாற்ற வேண்டும்.
இவ்வாறாக, இயேசுவை நம்பி, அந்த நம்பிக்கையால் அறிக்கையிடும்போது, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளும்போது, மீட்பு என்னும் உரிமையைப் பெற்றுக்கொள்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 4:1-13), இயேசுவின் சோதனைகளை லூக்கா பதிவின்படி வாசிக்கின்றோம். யோர்தானில் திருமுழுக்கு பெற்று தூய ஆவியால் நிரப்பப் பெற்ற இயேசு, அதே தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இயேசுவின் பணிவாழ்வுத் தொடக்கத்திற்கு முன் இந்த இரண்டு முக்கியான நிகழ்வுகள் அவரின் வாழ்வில் நடக்கின்றன: ஒன்று, அவரின் திருமுழுக்கு. இரண்டு, அவரின் பாலைவனச் சோதனைகள். திருமுழுக்கு நிகழ்வில், வானத்திலிருந்து (கடவுளின்) குரல், 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' (காண். லூக் 3:22) என்று ஒலிக்கிறது. இவ்வாறாக, தான் யார் என்பதையும், தன்னுடன் கடவுள் என்னும் தன் தந்தை இருக்கிறார் என்பதையும் இயேசு இந்த நிகழ்வில் அனுபவிக்கிறார். இந்த அனுபவத்தை அவர் நம்பிக்கை அறிக்கை செய்ய வேண்டும். அல்லது தன் தந்தையாகிய கடவுள்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் ஒரு அறிக்கை செய்ய வேண்டும்.
இயேசுவின் நம்பிக்கை அறிக்கையைத்தான் நாம் அவரின் பாலைவனச் சோதனைகள் நிகழ்வில் வாசிக்கிறோம். கடவுளின் திட்டங்களையும் நோக்கங்களையும் சீர்குலைக்க நினைக்கும் அலகை மூன்று நிலைகளில் இயேசுவைச் சோதிக்கிறது. கடவுளின் பணிகளை இயேசுவைச் செய்யவிடாமல் தடுக்கும் அலகையின் முயற்சியே இது.
முதலில், அலகை, 'கல் அப்பமாகும்படி கட்டளையிடும்' என்று இயேசுவுக்குச் சவால்விடுகிறது. ஒருவேளை இயேசு கல்லை அப்பமாக்கியிருந்தால், தன் பசியைத் தீர்த்துக்கொள்ள, அல்லது தன்னலத்திற்காக கடவுளின் வல்லசெயலாற்றும் கொடையைப் பயன்படுத்தியதுபோல ஆகிவிடும். 'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல ...' (காண். இச 8:3) என்று மறைநூல் வாக்கைச் சுட்டிக்காட்டி, இயேசு சவாலை மறுக்கிறார். இவ்வாறாக, இயேசு, தன்னுடைய ஆற்றலைக் கடவுளின் திருவுளத்திற்காகவும், கடவுளின் நோக்கங்களுக்காகவுமே பயன்படுத்துவேன் என்று தெளிவாக அறிக்கையிடுகின்றார்.
இரண்டாவது சோதனையில், அலகை, இயேசு தன்னை வணங்கினால் உலகின்மேல் முழு அதிகாரத்தையும் வழங்குவதாகச் சொல்கிறது. இங்கே, இயேசு தன் தலைவர் யார் என்பதைத் தெரிவு செய்ய வேண்டும் - அலகையா? கடவுளா? யாருக்குப் பணிவது? மறைநூலை மறுபடி மேற்கோள் காட்டும் இயேசு - 'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக!' (காண். இச 6:13) - அவரின் தெரிவு கடவுள் மட்டுமே என்று அறிக்கையிடுகின்றார்.
இறுதிச் சோதனை கடவுளின் பெயர் தங்கியிருக்கும் எருசலேம் ஆலயத்தின் உச்சியில் நடைபெறுகிறது. அலகை, இப்போது தானே மறைநூலை மேற்கோள் காட்டி - 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு ... அவர்கள் தாங்கிக்கொள்வார்கள்' (காண். திபா 91:11-12) - இயேசு, கடவுள் மேல் உள்ள நம்பிக்கையைச் சோதிக்கும் பொருட்டு, அவரை உச்சியிலிருந்து கீழே குதிக்குமாறு சோதிக்கிறது. மறைநூலில் தான் சொன்ன வார்த்தைக்குக்குக் கடவுள் பிரமாணிக்கமாக இருக்கிறாரா என்று பார்! என்று இயேசுவிடம் சொல்வதாக அமைகிறது இச்சோதனை. இயேசுவின் மனத்தில் சந்தேகத் துளியை விதைக்க நினைக்கிறது அலகை. ஏனெனில், இந்த நம்பிக்கையால்தான் இயேசு தன் வாழ்வின் பணி, பாடுகள், மற்றும் இறப்பை எதிர்கொள்ளவேண்டும். 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' (காண். இச 6:16) என்று சொல்லி, கடவுள்மேல் தான் கொண்டுள்ள நம்பிக்கையில் சந்தேகம் இல்லை என்றும் உறுதிகூறுகிறார் இயேசு.
இம்மூன்று சோதனைகள் வழியாக, இயேசு, கடவுளின் பணியைச் செய்யவிடாமல் தடுக்க முயற்சி செய்தது அலகை. ஆனால், கடவுள் மேல் தான் கொண்டிருக்கிற நம்பிக்கையில், தன் நிலைப்பாட்டை அறிக்கையிடுகிறார் இயேசு. இவற்றின் வழியாக இயேசு தன் நம்பிக்கை, அர்ப்பணம், மற்றும் மனவுறுதியைத் தெளிவுபடுத்துகிறார். இயேசுவின் இந்த நம்பிக்கை அறிக்கை அவரின் பொதுவாழ்வைத் தொடங்க உரிமையளிக்கிறது. இயேசுவும் தன் பணியை உடனே தொடங்குகிறார் (காண். லூக் 4:14-15).
இவ்வாறாக, முதல் வாசகத்தில், இஸ்ரயேலர் இனியவர் ஒருவர், முதற்கனிகள் திருநாளில் கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால் தான் பெற்ற கொடைகளுக்காக அவர்மேல் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார். இரண்டாம் வாசகத்தில், ஒருவர் இயேசுவின் மேல் கொண்ட நம்பிக்கையால் செய்யும் அறிக்கை அவருக்குக் கடவுளின் மீட்பைப் பெற்றுத் தருகிறது. நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் தந்தையின்மேல் கொண்டுள்ள நம்பிக்கையால் தன் நிலைப்பாட்டை அறிக்கையிடுகின்றார். ஆக, நம்பிக்கை அறிக்கையும், நம்பிக்கையால் அறிக்கையிடுதலும் இம்மூன்று வாசகங்களிலும் இணைந்தே செல்கின்றன.
நாம் இன்று நம் நம்பிக்கையை அல்லது நம் நம்பிக்கையால் எப்படி அறிக்கையிடுவது?
1. ஒரே மனநிலை - கூடை நிறையும்போதும், வயிறு பசிக்கும்போதும்
இன்றைய இறைவார்த்தை வழிபாடு இரண்டு வகை மனநிலைகளைப் பிரதிபலிக்கிறது. நாம் முதல் வாசகத்தில் சந்திக்கும் இஸ்ரயேலர் இனியவர் பெரிய கூடையில் முதற்கனிகள் நிறையக் கடவுளின் முன்னிலையில் நிற்கிறார். நற்செய்தி வாசகத்தில் ஒன்றுமே இல்லாத பாலைநிலை வெறுமையில் பசித்த வயிறாய் இயேசு இருக்கிறார். இந்த இரண்டுபேருமே கடவுளை நம்புகின்றனர். அந்த நம்பிக்கையில் அவரைப் பற்றியும், அவரின் அருஞ்செயல்கள் பற்றியும் அறிக்கையிடுகின்றனர். ஆக, நம் கைகள் நிறைய விளைச்சலும், நிலத்தின் பலனும் இருந்தாலும், அல்லது வயிறு பசித்திருந்தாலும் நம் மனநிலை ஒன்றாக இருக்க வேண்டும். அந்த மனநிலை நம் நம்பிக்கையால் வடிவம் பெற வேண்டும். நம் கைகள் நிறையப் பலன் இருக்கும்போது கடவுளை நம்புவதும், அவரைப் பற்றி அறிக்கையிடுவதும் எளிது. ஆனால், வயிறு பசித்திருக்கும்போது மிகக் கடினம்.
2. ஒரே மனநிலை - ஆலயத்திலும் பாலைவனத்திலும்
முதல் வாசகத்தில் அறிக்கை ஆலயத்திலும், நற்செய்தி வாசகத்தில் அறிக்கை பாலைவனத்திலும் நடக்கிறது. ஆலயத்தில் எல்லாம் இனிமையாக இருக்கும். நம் மனம் ஒருமுகப்படும். அமைதியாக இருக்கும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் நல்லதே நினைப்பார்கள். எல்லாரும் அருகிருப்பார்கள். ஆனால், பாலைவனம் அப்படியல்ல. அங்கே தனிமை இருக்கும். நம் மனம் அலைபாயும். நம்மைச் சுற்றி அலகை மட்டுமே இருக்கும். நம் வீழ்ச்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் அலகை. நாம் எந்த இடத்தில் இருந்தாலும் நம்பிக்கை அறிக்கை அவசியம்.
3. ஒரே மனநிலை - நம் வேர்களை நினைக்கும்போதும் நம் கிளையைப் பரப்பும்போதும்
முதல் வாசகத்தில் இஸ்ரயேலர் இனியவர் தன் வேர்களை நினைத்துப் பார்க்கிறார். தன் தந்தை ஒரு நாடோடி என்று சொல்வதன் வழியாக, இருக்க இடமற்ற, உண்ண உணவற்ற, உடுக்க உடையற்ற தன் நொறுங்குநிலையை ஒரே நொடியில் நினைத்துப்பார்க்கிறார். ஆக, இன்று கனிகள் கைகளை நிறைத்தாலும் ஒரு காலத்தில் தான் ஒரு வெறுமையே என்று உணர்கிறார். அதே போல, இயேசுவும் தான் பெற்ற திருமுழுக்கில் தன் வேர்களைப் பதித்து, இறையாட்சி என்ற இலக்கை நோக்கிக் கிளைபரப்புகிறார். இந்த இரண்டு நிலைகளிலும் நம்பிக்கை அறிக்கை நடந்தேறுகிறது.
இறுதியாக, இன்றைய இரண்டாம் வாசகம் சொல்வதுபோல, நாம் அறிக்கையிடும் எல்லா வார்த்தைகளும் - அது கடவுள்முன் என்றாலும், ஒருவர் மற்றவர்முன் என்றாலும், எனக்கு நானே என்றாலும் - செயல்வடிவம் பெற வேண்டும். நிறைவேற வேண்டும். அந்தச் செயலின் ஊற்று நம்பிக்கை. நம்பிக்கையே செயலாகும்போது, நம்பிக்கை என்ற சொல்லின் பொருள் புரியும். ஏனெனில், 'செயல்' என்பதே 'சொல்.'