Sunday, February 27, 2022

அன்பொழுக நோக்கி

இன்றைய (28 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 10:17-27)

அன்பொழுக நோக்கி

இயேசு எருசலேம் செல்லும் வழியில் இருக்கின்றார். நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள, தான் என்ன செய்ய வேண்டும் என்னும் கேள்வியுடன் இளவல் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். கட்டளைகளை இளமைப் பருவம் முதல் கடைப்பிடிக்கின்ற அந்த இளவலிடம், அவருக்கு உள்ளதையெல்லாம் விற்குமாறு பணிக்கிறார்.

இங்கே இயேசுவின் சொற்களை விட அவருடைய ஒரு செயல் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. தன்னிடம் வந்த அந்த இளவலை அன்பொழுக நோக்குகிறார் இயேசு.

அன்பொழுக நோக்கிய இயேசுவை விட்டு முகவாட்டத்தோடு திரும்புகிறார் இளவல்.

இளவலின் செயலை தானே முன்னறிந்ததால் என்னவோ இயேசு அவரை அன்பொழுக நோக்குகின்றார். 

இளவல் முகவாட்டத்தோடு செல்லக் காரணம் என்ன? தன் பற்றுகளை விடுக்க அவரால் இயலவில்லை.

பற்றில்லாத இயேசுவின் பாதங்களைப் பற்றிக்கொள்வதற்குப் பதிலாக, தன் பற்றுகளையே பற்றிக்கொள்ள விரும்பினார் அந்த இளவல்.

பற்றுகளை விட நம் மனம் துணிவதில்லை. ஏனெனில், பற்றுகள் நம்மை அறியாமலேயே நம்மோடு ஒரு பிணைப்பை உருவாக்கிக்கொள்கின்றன. பற்றுகளை விடுத்தல் நம் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது.

'மனிதரால் இது இயலாது. கடவுளால் எல்லாம் இயலும்' என்கிறார் இயேசு.


2 comments:

  1. அன்பொழுக நோக்கிய இயேசுவை விட்டு முகவாட்டத்துடன் திரும்புகிறான் இளவல்.இந்த விஷயத்தில் நாம் அனைவருமே அந்த இளவலின் உறவினர் தாம்.நம் தேவைகள் நிறைவேறுகையில் முகம் மலர்வதும்,அவை நிறைவேறாதபோது முகம் சுருங்குவதும் நாம் அனைவரும் செய்வதுதானே! ஒரு மாற்றம் கருதி பற்றுக்களை விட்டுவிடலாமென நினைத்தாலும் ஏதோ ஒன்று அதே குட்டைக்கே நம்மைத் திருப்பிக்கொண்டு செல்கின்றதே! இதற்குப் பெயர் தான் பாதுகாப்பின்மையா? அந்த இளவலுக்குப் புரியவில்லை ‘ பாதுகாப்பு’ எங்கேயென்று.பற்றுக்கள் எத்தனை தான் நமக்குப்பாடம் புகட்டினாலும் அவர்களை விடுவது கடினம்தான்.நம்மால் இயல்வது கடினம்தான்.ஆனால் எல்லாவற்றையும் இயலச்செய்யும்…நடத்திக்காட்டும் இறைவன் நம் பக்கம் இருக்கையில் இது இயலும்….பற்றுகளுக்குப் பதில் அவரையே பற்றிக்கொண்டால்! கேட்க எளிமையான விஷயங்களிலும் வாழ்க்கையை வளம்படுத்தும் விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. புரிய வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Anonymous4/26/2022

    ஆமென்!

    ReplyDelete