Monday, February 21, 2022

பேதுருவின் தலைமைப்பீடம்

இன்றைய (22022022) திருநாள்

பேதுருவின் தலைமைப்பீடம்

'வாழ்க்கையில ஏதாச்சும் செய்யணும், ஆனா நேரமும் காலமும் அமைவதில்லை' என்று புலம்புபவர்களுக்கு இன்றைய நாள் ஒரு குட் நியூஸ். 22022022 என்னும் இந்த தேதியின் எண்களை மேலே கீழே, இட வலம், வலமிடம் என எப்படி வாசித்தாலும் தேதியின் எண்கள் மாறுவதில்லை. எண்ணியல் சோதிடம் (நியூமெரலாஜி)-படி '3', '6', மற்றும் '9' என்னும் எண்களில் பிறந்தவர்கள் இன்று எதைச் செய்தாலும் வெற்றி பெறுவார்கள். (அப்படி எதையாச்சும் சொல்லி வைப்போம்!)

இன்று நம் தாய்த் திருஅவை பேதுருவின் தலைமைப்பீடத்தைக் கொண்டாடி மகிழ்கின்றது. நான்காம் நூற்றாண்டு முதல் உரோமையின் பாரம்பரிய வழக்கப்படி இத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. 'உன் பெயர் பாறை. இந்தப் பாறையின்மேல் நான் திருச்சபையைக் கட்டுவேன்' என்னும் இயேசுவின் வார்த்தைளைப் பின்புலமாகக் கொண்டுள்ளது இத்திருநாள். திருஅவை என்னும் மந்தையை நம் ஆண்டவராகிய இயேசு திருத்தந்தையின் பொறுப்பில் விட்டுச் சென்றார் என்றும், நம் திருத்தந்தை உறவு ஒன்றிப்பின் அடையாளமாகத் திகழ்கிறார் என்றும் நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.

இத்திருவிழா நமக்குத் தரும் பாடங்கள் எவை?

அ. தனிநபர் நம்பிக்கை அறிக்கை

'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்னும் இயேசுவின் கேள்விக்கு, 'நீர் மெசியா' எனப் பதில் தருகின்றார் பேதுரு. இது பேதுருவின் உள்ளுணர்வு அல்லது தனிப்பட்ட அனுபவமாக இருக்கிறது. இன்று சற்று நேரம் அமர்ந்து, 'இயேசுவைப் பற்றி நான் அப்படிக் கேள்விப்படுகிறேன், இப்படிக் கேள்விப்படுகிறேன். மறையுரையில் இப்படிப் பேசுகிறார்கள். நூல்கள் இப்படி முன்மொழிகின்றன. ஆனால், அவர் எனக்கு யார்? திடீரென்று நான் இயேசுவை நேருக்கு நேராகச் சந்திக்க நேர்ந்தால் எந்த அடைமொழியால் நான் அழைப்பேன்?' என்று நம்மை நாமே கேட்டுப் பார்க்கலாம். நம் உள்ளுணர்வு அல்லது தனிப்பட்ட அனுபவத்தின் பின்புலத்தில் இயேசுவுக்கென்று ஒரு தலைப்பை இட்டு மகிழலாம் நாம்!

ஆ. வலுவின்மையின் கொண்டாட்டம்

பேதுருவின் பெயர் பாறை என இருந்தாலும், அவர் என்னவோ பல நிலைகளில் உறுதியற்றே இருந்தார். இயேசு தன் பாடுகளை முதன்முறை அறிவித்தபோது, சிலுவை வேண்டாம் என இயேசுவைக் கடிந்துகொள்கின்றார். பாடுகள் நிகழ்வில் இயேசுவை மறுதலிக்கின்றார். பாறை போல உறுதியாக இருக்க வேண்டிய பேதுரு, களிமண் போல நெகிழ்வுத்தன்மை கொண்டிருந்தார். ஆனால், அந்த நெகிழ்வுத் தன்மையை உறுதியாக்கும் பொறியாளர் இயேசுவே. ஆக, நம் வலுவின்மைகளையும் உறுதியாக்க வல்லவர் இயேசு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பேதுரு செய்தது போல, 'ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே!' (காண். யோவா 27:17) என்று அவரிடம் சரணாகதி அடைவதுதான்.

இ. ஒருமைப்பாட்டின் கொண்டாட்டம்

புனே பாப்பிறைக் குருமடத்தில் என் ஆன்மிகத் தந்தை என்னிடம், 'நீ எப்போதும் இந்த நான்கு பிரமாணிக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும்!' என்று சொல்வார்: 'உன்மேல் பிரமாணிக்கம் (faithfulness to self), கடவுள்மேல் பிரமாணிக்கம் (faithfulness to God), இறையழைத்தல்மேல் பிரமாணிக்கம் (faithfulness to vocation), திருஅவைமேல் பிரமாணிக்கம் (faithfulness to church).' திருஅவை என்பது சிறிய அளவில் நாம் சார்ந்திருக்கின்ற மறைமாவட்டத்தையும், அகல்விரிவெளி அளவில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவையையும் குறிக்கிறது. திருஅவையிடம் நாம் நிறையக் குறைகள் கண்டாலும், அவள் நம் தாய். தாயிடம் குறையிருக்கிறது என்பதற்காக இன்னொரு தாயை நாம் உரிமையாக்கிக் கொள்ள இயலுமா? திருஅவையின்மேல் நமக்குள்ள கடமைகைளை நினைவுகூரவும், திருஅவையை இன்னும் அதிகம் புரிந்துகொள்ள முயற்சி செய்யவும் இந்த நாள் நம்மைத் தூண்டுவதாக!

இன்றைய நாளில் நம் அகில உலகத் திருஅவையின் தலைவர் மதிப்புக்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகவும், நம் தலத் திருஅவையின் தலைவராகத் திகழ்கின்ற, நிர்வாகிகள், ஆயர்கள், மற்றும் பேராயர்களுக்காகவும் சிறப்பாக மன்றாடுவோம்.


1 comment:

  1. “உன் பெயர் பாறை.இந்தப் பாறையின் மேல் நான் திருச்சபையைக்கட்டுவேன்.” இயேசு இவ்வார்த்தைகளைப் பேதுருவைப்பார்த்துக் கூறியிருப்பினும் அவர் வழியாக நாம் இந்தப் பாறையின் ஒரு சிறு பகுதியாகவும்,இதன் மூலம் நாம் ஒவ்வொருவருமே இயேசு கட்டிய திருச்சபையின் அங்கத்தினராகவும் ஆக்கப்படுகிறோம்.பேதுருவும் அவரைப்பின்பற்றி வரும் ஒவ்வொரு தலைமையும் சரியாக இயங்க வேண்டுமெனில்,அதன் அங்கங்கங்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவருமே நம் பொறுப்புணர்ந்து செயல்பட அழைக்கப்படுகிறோம்.இயேசுவுக்கும் எனக்கும் இடையேயுள்ள தனிப்பட்ட உறவைப்புரிந்து கொள்ளவும், நம்மைப்பற்றி அனைத்தும் தெரிந்த அவரிடம் நம் வலுவின்மையில் வலிமை சேர்க்கவும்,நம் தாயாம் திருஅவையிடம் நாம் காணும் குறையிலும் நிறைவு காணவும் இந்த நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
    இத்தனை பெருமைக்குரிய திருஅவையில் நம்மையும் ஒரு அங்கமாக்கிய ‘ அவருக்கு’ நன்றி கூறும் இவ்வேளையில் நம் திருஅவையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகவும், அதன் நிர்வாகப்பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் சிறப்பாக இறைவனை மன்றாடுவோம்! இத்திருஅவையின் ஒரு அங்கம் என மார்தட்டிக்கொள்ளும் அதே நேரம்,நமக்கென்று இருக்கும் கடமைகளையும் சரிவர ஆற்ற அழைப்பு விடுக்கும் தந்தைககு நன்றியும்! திருநாள் வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete