புனித லூர்தன்னை
1858ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் உள்ள மெசபியல் குகையில் காட்சி தந்த அன்னை கன்னி மரியாவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் இந்நாளை உலக நோயுற்றோர் நாள் எனக் கொண்டாடப் பணித்தார். 30வது உலக நோயுற்றோர் நாளுக்காக நம் திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள்' (லூக் 6:36) என்பதே இந்த ஆண்டுக்கான மையச் செய்தியாக இருக்கிறது.
(அ) தந்தையைப் போல இரக்கம் உள்ளவர்களாக
நாம் முதலில் கடவுளை நோக்கி நம் கண்களை உயர்த்த வேண்டும். ஏனெனில், அவரே இரக்கம் நிறைந்தவர் (காண். எபே 2:4). தன் குழந்தைகள் அனைவர்மேலும் - அவர்கள் அவரை விட்டு விலகிச் சென்றாலும் - அவர் தன் கண்களைப் பதிய வைக்கின்றார். இரக்கம் என்பதே கடவுளின் மேன்மையான பெயர். இது வெறும் உணர்வு அல்ல. மாறாக, திடமும் கனிவும் நிறைந்த செயல். தந்தைக்குரிய திடமும் தாய்க்குரிய கனிவும் அவரிடம் உண்டு. தூய ஆவியாரில் நமக்குப் புத்துயிர் அளிக்க அவர் விழைகின்றார்.
(ஆ) இயேசு, தந்தையின் இரக்கம்
தந்தையின் இரக்கம் இயேசுவின் வழியாக வெளிப்பட்டது. நொறுங்குநிலையிலும் வலுவற்ற நிலையிலும் உறுதியற்ற நிலையிலும் - குறிப்பாக நோயுற்ற நிலையில் - நம் உள்ளம் இறைவனை நோக்கி எழும்புகிறது. ஆறுதல் என்னும் தைலம் தேய்க்கவும், எதிர்நோக்கு என்னும் திராட்சை இரசத்தைக் காயங்களில் ஊற்றவும் இயேசு நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.
(இ) கிறிஸ்துவின் துன்புறும் சதையைத் தொட
கிறிஸ்துவின் துன்புறும் சதையை அனைத்து மனிதர்களிலும் தொடுகின்ற நலப்பணியாளர்களை இன்று நாம் நினைவுகூரல் வேண்டும். நோய்கள் அல்ல, நோயுற்ற மாந்தர்களே முதன்மையானவர்கள். எந்நிலையிலும் அவர்களுடைய மாண்பு போற்றப்பட வேண்டும்.
(ஈ) நலமையங்களே இரக்கத்தின் இல்லங்கள்
அனைத்து நலமையங்களிலும் இறைவனின் இரக்கம் நிழலாடுகின்றது. நலமையங்களுக்கு நாம் செல்லும்போதெல்லாம் இந்த உணர்வு நம்மில் இருக்க வேண்டும்.
(உ) மேய்ப்புப் பணி இரக்கம்: உடனிருப்பும் அருகாமையும்
நலமற்றோர் அனைவரோடும் நாம் உடனிருக்க முயற்சி செய்தல் வேண்டும். நலப்பணியாளர்கள் மட்டுமன்றி அனைவருக்கும் இந்தப் பொறுப்புணர்வு உண்டு.
நம் அன்னையை நலம் தரும் அன்னை என்று கொண்டாடும் இவ்வேளையில் நம் ஒவ்வொருவரின் உடல், உள்ள, ஆன்ம நலன்களுக்காக அவரின் பரிந்துரையை நாடுவோம். நலத்தின் முழுமையாக, இறையருளின் நிறைவாக விளங்கிய அன்னை நம்மோடு என்றும் உடனிருப்பாராக!
“லூர்து அன்னை”…. என் மனதுக்கு மிக நெருக்கமான என் தாய். என் இடறலான நேரங்களில் என்னைத் தூக்கி நிறுத்துபவள். லூர்து நகரில் பெர்னதெத் எனும் சிறுமிக்கு காட்சி தந்தவளின் பெருமை “ உலக நோயுற்றோரின் நாள்” எனும் அளவில் இன்னும் கூடுவதை உணரமுடிகிறது.இந்த அன்னையை நினைவு கூறும் இந்நாளின் முக்கியத்துவத்தைத் திருத்தந்தையின் “ உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதைப் போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்” எனும் செய்தி இன்னும் கூட்டுகிறது.” இரக்கம் என்பதே அவர் பெயர்” எத்தனை ஆறுதலான விஷயம்! நம் உடல் நோய்க்கு மட்டுமின்றி உள்ள நோய்க்கும் மருந்தாகத்…தைலமாகத்….திராட்சை இரசமாகத் திகழ்கிறார்.இந்நேரத்தில் நோயுற்றோருக்காக மட்டுமல்ல…..அவர்களுக்கு அடைக்கலம் தரும் நலமையங்களுக்காகவும்…அங்கு வேலை செய்யும் மருத்துவர்களுக்காகவும் நம் அன்னையின் உடனிருப்பை வேண்டுவோம்.நம் உடல்,உள்ள சுகத்திற்காக மட்டுமல்ல….இறையருளை நமக்கு முழுமையாகப் பெற்றுத்தரும் அன்னையாகவும் இருக்க அவர் பாதம் நாடுவோம்! தந்தைக்கும்,அனைவருக்கும் அன்னையின் திருநாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDelete