Friday, February 11, 2022

நேர்முகப் பரிவு

இன்றைய (12 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 8:1-10)

நேர்முகப் பரிவு

ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கு இயேசு பகிர்ந்து கொடுக்கும் நிகழ்வை மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். இதையொத்த நிகழ்வில் இயேசு மக்கள் கூட்டத்தின்மேல் பரிவு கொள்வதைப் போல இங்கேயும் பரிவு கொள்கின்றார். இயேசுவின் பரிவு நேர்முகப் பரிவாக, அதாவது, தன் பரிவின் வழியாக அவர்களுடைய வாழ்வை மேம்படுத்தும் பரிவாக இருப்பதைப் பார்க்கின்றோம். 

இயேசுவின் நேர்முகமான பரிவு அவருடைய சொற்களில் மிக அழகாக வெளிப்படுகின்றது: (அ) 'மூன்று நாள்களாக இவர்கள் என்னோடு இருக்கிறார்கள்,' (ஆ) 'உண்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை,' (இ) 'பட்டினியாக அனுப்பிவிட்டால் நெடும் வழியில் அவர்கள் தளர்ச்சி அடைவர்.'

அவர்களின் தேவை உணவு என்பதை அறிகின்ற இயேசு அதை அவர்களுக்குத் தரும் முயற்சியில் இறங்குகின்றார். சீடர்கள் தாங்கள் இருக்குமிடம் பாலைநிலம் என்று சொல்லிக் கேள்வி எழுப்புகின்றனர். 

பரிவு என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, ஒரு செயல்.

எதிர்மறையான பரிவு என்பது என்ன?

புழு வண்ணத்துப் பூச்சியாக உருவெடுக்கும் நிகழ்வை எடுத்துக்கொள்வோம். வண்ணத்துப் பூச்சியாக மாறுவதற்கு கூட்டுப்புழு நிறைய வலியை ஏற்க வேண்டும். 'ஐயோ! அதற்கு வலிக்குமே!' என நான் நினைத்து அதன்மேல் பரிவு கொண்டு அதை விடுவிக்க நினைத்தால், அது வண்ணத்து பூச்சியாக மாறுவதை நான் தடை செய்வதோடு, அதைக் கொன்றும் விடுவேன். இது எதிர்மறையான பரிவு.

புற்றுநோய்க் கட்டியுடன் ஒருவர் மருத்துவமனைக்குச் செல்கின்றார் என வைத்துக்கொள்வோம். அதை உடனடியாக நீக்கினால் நபருக்கு வலிக்கும் என்று நினைக்கின்றார் மருத்துவர். இதை அவர் பரிவு என்றும் கூறுகின்றார். இப்படிப்பட்ட பரிவு நோயுற்றவரை அழித்துவிடும்.

இத்தகைய எதிர்மறையான பரிவை இன்றைய முதல் வாசகத்தில் பார்க்கின்றோம்.

சாலமோனின் அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் இரண்டாக உடைகிறது. வடக்கே 'இஸ்ரயேல்', தெற்கே 'யூதா' என்று இரு அரசுகள் உருவாகின்றன. இதுவரை எருசலேம் ஆலயம் மட்டுமே அனைவருக்குமான பொதுவான இறைவேண்டலின் இடமாக இருந்தது. வடக்கில் உள்ள தன் மக்கள் தெற்கில் உள்ள எருசலேமுக்குப் போக விரும்பாத எரோபவாம் அரசர் மக்களைப் பார்த்து, 'நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா!' என்று அவர்கள்மேல் எதிர்மறையான பரிவு கொண்டு, அவர்களுக்கென கன்றுக்குட்டி ஒன்றை நிறுவி அவர்களுடைய மனத்தைத் திருப்புகிறார். மேலும் பல தொழுகை மேடுகளைக் கட்டி, யாரெல்லாம் விரும்பினார்களோ அவர்களை எல்லாம் திருப்பணியாளர்களாக ஏற்படுத்துகின்றார்.

மக்களைச் சிலைவழிபாட்டுக்கு ஆளாக்கியதோடு, தான் இப்படிச் செய்வதால் அவர்கள்மேல் பரிவு கொண்டதாக நினைக்கின்றார்.

இது எதிர்மறையான பரிவு.

இயேசுவின் நேர்முகப் பரிவு மக்களின் பசி போக்குகிறது.

எரோபவாமின் எதிர்மறைப் பகிர்வு மக்களின் வாழ்வுக்கு அழிவைக் கொணர்கிறது.

1 comment:

  1. பரிவின் பரிமாணங்கள் ….நேர்மறை மற்றும் எதிர்மறை பரிவு.தன்னெதிரே இருப்பவர்களின் தேவை புரிந்தவர்களுக்கு மட்டுமே ஏற்படும் இந்தப் பரிவு…இயேசுவைப்போல். மூன்றுநாட்களாக என்னோடு இருப்பவர்கள் பசிபோக்க வேண்டும்.இல்லையேல் வழியில் அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிடும்…..ஒரு தாயுணர்வு.உடனே செயல் வடிவம் பெறும்.
    ஆனால் புழு வண்ணத்துப்பூச்சியாக உறுமாற அது எடுக்கவேண்டிய முயற்சிக்கு பயந்தாலோ…ஒரு தாய் தன் மகள் பிரசவ வேதனையைத்தாங்கி அவள் பிள்ளையைப் பெற பயந்தாலோ ….அது அழிவுக்கு வித்திடும்….எதிர்மறை பரிவு.சிலசமயங்களில் நமது மனத்தின் கடின பக்கங்களையும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்….பரிவு எனும் பெயரில் பாழடிக்காமல்.
    இருவகை பரிவும் தேவைதான் இடத்தின்…நடைபெற வேண்டிய செயலின் தன்மை யறிந்து. நம் வாழ்க்கை அடிக்கடி நமக்குச் சுட்டிக்காட்டும் விஷயம். மனத்தைத் திறந்து வைத்து காலம் நமக்கு ஆசிரயராகிச் சொல்லித்தரும் விஷயங்களை செவிமடுத்துக் கேட்போம். தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete