Sunday, February 13, 2022

நங்கூரப் புள்ளிகள்


ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு

I. எரேமியா 17:5-8 II. 1 கொரிந்தியர் 15:12,16-20 III. லூக்கா 6:17,20-26

நங்கூரப் புள்ளிகள்

என்.எல்.பி என்று சொல்லப்படும் நியூரோ லிங்விஸ்டிக் புரோகிராமிங் என்னும் உளவியல் பகுப்பாய்வில் பேசப்படும் சில கருத்துருக்களில் ஒன்று, 'நங்கூரமிடுவது' ('ஆங்க்கரிங்'). அதாவது, எதிர்மறையான நிகழ்வு ஒன்றை நான் எதிர்கொள்ள வேண்டும் என வைத்துக்கொள்வோம். பத்தாயிரம் பேர் அமர்ந்திருக்கும் ஒரு கூட்டத்தில் நான் பேச வேண்டும். எனக்குக் கூட்டத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது. என் பயத்தைப் போக்க நான் என்ன செய்ய வேண்டும்? நான் இதற்கு முன் பயமில்லாமல் பேசிய ஒரு நிகழ்வை என் மனத்தில் ஓடவிட்டு, அந்த எண்ண ஓட்டங்களை ஒரு மோதிரம், பேனா, சட்டை என ஏதாவது ஒன்றோடு இணைத்துவிட வேண்டும். இப்போது இக்கூட்டத்தின் முன் பேசுவதற்குமுன் நான் அந்த மோதிரத்தை அணிந்தாலோ, அந்தப் பேனாவைச் சட்டையில் வைத்திருந்தாலோ, அல்லது அந்தச் சட்டையை அணிந்தாலோ என் மனம் நேர்முகமான உணர்வுகளில் இருந்து ஆற்றல் பெற்று பயம் என்னும் எதிர்மறை உணர்வை அழித்துவிடும். இப்படியாக நேர்முகமான உணர்வின்மேல் உள்ளத்தைப் பதிய வைப்பதுதான் நங்கூரமிடுவது.

'நங்கூரம்' - இது ஒரு கப்பல் அல்லது கடல்தொழில் சொல்லாடல். நகர்கின்ற கப்பலை அல்லது பெரிய படகை நிலைநிறுத்தப் பயன்படுவது நங்கூரம். நங்கூரமிட்ட கப்பலை பெரும் புயலும் நகர்த்த முடியாது. எல்லா இடத்திலும் நங்கூரம் இறக்கிவிட முடியாது. சகதி அல்லது சேறு, பாறை அல்லது கடல் மலைப்பாங்கான பகுதிகளில் நங்கூரம் பதியாது. ஆக, சரியான நங்கூரப் புள்ளிகளைக் கண்டுபிடித்தால்தான் கப்பலை நிலைநிறுத்த முடியும். 

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்முடைய நங்கூரப் புள்ளிகள் எவை என ஆராய்ந்து பார்க்க அழைக்கின்றன. என் நம்பிக்கையை, என் நங்கூரத்தை இன்று நான் எதன்மேல் வைக்கிறேனோ அப்போதுதான் நான் வளர முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 17:5-8) எரேமியா, 'மனிதர்மேல் நம்பிக்கை,' 'ஆண்டவர்மேல் நம்பிக்கை' என நம்பிக்கையை இரண்டாகப் பிரித்து, மனிதர்மேல் நம்பிக்கை வைப்போர் அடையும் துன்பத்தையும் அழிவையும், ஆண்டவரின்மேல் நம்பிக்கை வைப்போர் பெறுகின்ற மகிழ்ச்சியையும் வாழ்வையும் உருவகமாகப் பதிவு செய்கின்றார். எரேமியாவின் இந்த இறைவாக்கு நிகழ்வு யூதா அரசன் யோயாக்கினின் காலத்தில் (காண். 2 அர 23:36-37) நடக்கிறது. பாபிலோனியர்கள் யூதா நாட்டின்மேல் படையெடுத்து வந்தபோது, யோயாக்கின் பாபிலோனியாவிடம் உடனடியாகச் சரணடைந்து தன் நாட்டை அழிவிலிருந்து தற்காலிகமாகக் காப்பாற்றுகிறார். ஆனால், சில ஆண்டுகள் கழித்து, தனக்கு அருகில் இருந்த எகிப்து நாட்டோடு கரம் கோர்க்கின்ற யோயாக்கின் பாபிலோனியாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார். ஆனால், பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் மிக வேகமாக எழுந்து இக்கிளர்ச்சியை அடக்கி, கிமு 597ஆம் ஆண்டு யூதாவை முற்றுகைக்கு உட்படுத்துகிறார். உடனடியாக எகிப்தியர்கள் தாங்கள் கொடுத்த இராணுவ பலத்தை விலக்கிக்கொண்டு பின்வாங்குகிறார்கள். யோயாக்கின் கொல்லப்படுகிறார். எருசலேம் கைப்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வைத்தான் எரேமியா இன்றைய இறைவாக்கில் குறிப்பிடுகின்றார்: 'மனிதரில் (எகிப்தியரில்) நம்பிக்கை வைப்போர் (யோயாக்கினும் அவருடைய அரச அலுவலர்களும்), வலுவற்ற மனிதரில் (எகிப்தியர்) தம் வலிமையைக் காண்போர் (யோயாக்கினும் அவருடைய அரச அலுவலர்களும்) சபிக்கப்படுவர்.' யோயாக்கின் எருசலேமை அழிவிலிருந்து காப்பாற்ற தன் நங்கூரத்தை மனிதர்கள்மேல் பதித்தார். 'ஆண்டவரின் மேல் பதிக்கத் தவறிவிட்டார்.' மனிதர்கள்மேல் வைக்கின்ற நம்பிக்கை உடனடித் தீர்வைத் தரலாம். ஆனால், நிரந்தரத் தீர்வு ஆண்டவரிடமே உள்ளது. இப்படியாக, அரசர்களுக்கும், அரச அலுவலர்களுக்கும் இறைவாக்குரைக்கின்ற எரேமியா, தொடர்ந்து, அவர்கள் தங்கள் சக மனிதர்கள்மேலும், தங்கள் சிலைவழிபாட்டின்மேலும் நம்பிக்கை வைக்கின்ற நிலையைச் சாடுகின்றார். ஆண்டவரின்மேல் வைக்கும் நம்பிக்கை உடனடியாக பலன் தராததுபோலத் தோன்றினாலும் அது நீண்ட காலப் பலனை நிச்சயம் தரும். ஏனெனில், மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை 'பாலைவனப் புதர்ச்செடி போன்றது.' பாலைவனத்தில் செடிகள் வேகமாக முளைக்கும். ஆனால், நிலத்தில் நீர் இல்லாததாலும், வெயிலின் கொடுமையாலும் மிக வேகமாகக் காய்ந்துபோய்விடும். புதர்கள் பார்ப்பதற்கு நிறைய இருப்பதுபோலத் தெரிந்தாலும் அவை தன்னிலே வலுவற்றவை. அதுபோலவே, மனிதர்களும். எண்ணிக்கையில் நிறைய என்றிருந்தாலும் அவர்கள் தங்களிலேயே வலுவற்றவர்கள். ஆனால், நீர் அருகில் நடப்பட்ட மரம் முளைக்க நாள்கள் ஆகலாம். ஏன் மாதங்கள்கூட ஆகலாம். ஆனால், அந்த மறைவான நாட்களில் அவ்விதையானது நீரோடை நோக்கி கீழாக வளர்கிறது. பின் வேகமாக மேலே வளர ஆரம்பிக்கும். அதன் நங்கூரம் தண்ணீரில் பதிந்திருப்பதால் வெப்பமிகு காலத்திலும் அதற்கு அச்சமில்லை. அது எப்போதும் கனி கொடுக்கும்.

ஆக, எகிப்தியர் என்னும் வலுவற்ற மனிதர்கள்மேல் நங்கூரத்தைப் பதிய வைக்காமல், ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்து அவரையே நங்கூரப் புள்ளியாக்க வேண்டுமென்று இறைவாக்குரைக்கின்றார் எரேமியா.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:12,16-20) இறந்தோர் உயிர்ப்பு பற்றிய பவுலின் விளக்கவுரையாகத் தொடர்கிறது. கொரிந்து நகர நம்பிக்கையாளர்கள் இறந்தோர் உயிர்ப்பை மறுத்தனர். ஏனெனில், அவர்கள் நடுவில் நிலவிய கிரேக்க தத்துவச் சிந்தனை அதற்கு இடையூறாக இருந்தது. தத்துவச் சிந்தனையைப் பொருத்தவரையில் மனித ஆன்மா என்பது மனித உடலில் சிறைப்பட்டிருக்கிறது. உடல் தனக்கென்று ஆசைகளையும், உணர்வுகளையும் வைத்திருப்பதால் அது அழிவுக்குரியதாகவும், தாழ்வானதாகவும், வலுவற்றதாகவும் கருதப்பட்டது. ஆக, ஆன்மா உடலிலிருந்து பெறும் விடுதலைக்காகவே காத்திருக்கிறது. இப்படி இருக்க, இறந்தோர் உயிர்ப்பில் மீண்டும் ஆன்மா உடலுக்குள் வரும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'உடல் இல்லாத வாழ்வையே' அவர்கள் விரும்பினர். இந்தப் பின்புலத்தில் பவுல் மிகவும் பொறுமையோடும், சிந்தனைத் தெளிவோடும் அவர்களுக்குப் புரிய வைக்கிறார். உயிர்க்கும்போது இருக்கும் உடல் அழியாமையை அணிந்துகொள்கிறது என்றும், இந்த அழியா உடலையே இயேசு பெற்றார் என்றும், அவரின் இறப்பில் பங்கேற்கும் நாம் அவரைப் போல அழியா உடல் பெற்று உயிர்ப்போம் என்றும் விளக்குகின்றார். ஆக, அழிந்துபோகும் இவ்வுலக உடலில் தங்கள் நம்பிக்கையைப் பதிய வைக்காமல், அழியாமல் உயிர்க்கும் அந்த உடலின்மேல் நம்பிக்கையைப் பதிய வைக்க அவர்களை அழைக்கின்றார் புனித பவுல்.

ஆக, அழிவுக்குரிய உடலின்மேல் நம்பிக்கை வைக்காமல் கிறிஸ்துவின் உயிர்ப்பு அவருக்குத் தந்த அழியாத உடலின்மேல் - நாம் பெறப்போகும் அந்த உடலின் மேல் - நம்பிக்கையைப் பதிய வைக்க அழைக்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 6:17,20-26) இயேசுவின் சமவெளிப்பொழிவை வாசிக்கின்றோம். இயேசுவின் மலைப்பொழிவில் (காண். மத் 5:3-10) 'எட்டுப் பேறுகளை' பதிவு செய்கின்றார் மத்தேயு. ஆனால், இயேசுவைச் சமவெளியில் நிற்கச் செய்யும் லூக்கா, அவரின் போதனைகளை, 'நான்கு பேறுகள்,' 'நான்கு சாபங்கள்' என வடிவமைக்கின்றார். இரக்கமே உருவான இயேசு, பகைவரையும் அன்பு செய்யச் சொல்லும் இயேசு மற்றவர்களைச் சபிக்கலாமா? செல்வமும், உணவும், சிரிப்பும், புகழ்ச்சியும் கொண்டிருப்பது தவறா? இவற்றை அல்லது இவற்றைப் பெற்றிருப்பவர்களை இயேசு ஏன் கடிந்து கொள்ள வேண்டும்? என்னும் கேள்விகள் நம்மில் எழலாம். இயேசு. 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' ஆகியவற்றைச் சபித்து, 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' ஆகியவற்றை மட்டுமே நாம் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தவில்லை. மாறாக, 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' போன்ற நான்கு வாழ்வியல் எதார்த்தங்களில் நம் மனம் நம்மேலும், நம் சக மனிதர்கள்மேலும், அவர்களின் அங்கீகாரத்தின் மேலும் தங்கி, நம் நம்பிக்கையைப் பதித்துவிடும் என்றும், 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' போன்ற வாழ்வியல் எதார்த்தங்களில்தாம் நம் மனம் இயல்பாக ஆண்டவரை நோக்கி எழும்பும் எனவும் சொல்லி, முன்னதை விடுத்துப் பின்னதைப் பெற்றுக்கொள்ள அழைக்கின்றார். 

ஆக, மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதை விடுத்து ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதற்கான அழைப்பாகவே இருக்கிறது இயேசுவின் சமவெளிப்பொழிவு.

இவ்வாறாக, மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை சிறிது காலமே பலன்தர, ஆண்டவர்மேல் வைக்கும் நம்பிக்கை நீண்ட நாள்கள் கனிதர நமக்கு வலுவூட்டும் என்று எரேமியாவும், அழியும் உடல்மேல் வைக்கும் நம்பிக்கையை விட கிறிஸ்துவின் அழியாத உடலின்மேல் வைக்கும் நம்பிக்கையை நமக்கு உயிர்ப்பைத் தரும் என்று பவுலும், 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' என்பவை மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதன் கனிகளாக இருந்தாலும் அவற்றால் நீடிய பயன் இல்லை என்றும், 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' போன்றவை ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பவருக்கு இறைவன் செயலாற்றும் தளங்களாக மாறும் என்று இயேசுவும் நமக்குச் சொல்கின்றனர். இவர்கள் மூவரின் வார்த்தைகளும் ஒன்றுதான்: 'மனிதர் என்னும் நங்கூரப் புள்ளி வலுவற்றது.கடவுள் என்னும் நங்கூரப் புள்ளி வலுவானது. வலுவற்றதை விடுத்து வலுவானதை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்.'

மனிதர் என்னும் நங்கூரப் புள்ளியை விட்டு, கடவுள் என்னும் நங்கூரப் புள்ளியை பற்றிக்கொள்வது மூன்று நிலைகளில் இது சாத்தியமாகும்.

1. வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அகலமாக விரிப்பது

தன் கப்பலையும் தன் இருப்பையும் மட்டும் பார்க்கின்ற மாலுமி நங்கூரத்தைத் தனக்குக் கீழ் இருக்கும் சேறு அல்லது பாறையின் மேல் இடுவார். ஆனால், கடல் மொத்தத்தையும் பார்க்கின்ற மாலுமி தன் கப்பலை நகர்த்திச் சென்று சேறு அல்லது பாறை இல்லாத இடத்தில் போடுவார். குறுகிய பார்வை கொண்டிருப்பதால் நம் வேலை எளிதாக முடிவதாக நினைக்கலாம். ஆனால், எளிதாக வருவது எல்லாம் இனிமையாக நீடித்து இருப்பதில்லை. யோயாக்கின் அரசன் தன் நாட்டின் உடனடி பாதுகாப்பைத்தான் பார்த்தாரே தவிர, ஒட்டுமொத்த அரசியல் சூழ்ச்சியை அல்லது ஆண்டவரின் உடனிருப்பை விரித்துப் பார்க்கவில்லை. கொரிந்தியர்கள் தாங்கள் பெற்றிருக்கும் இந்த உடலைப் பார்த்தார்களே தவிர, இதற்கு மேலும் அல்லது இதைவிடவும் அழியாத உடல் இருக்கிறது என்பதைப் பார்க்கவில்லை. செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி கொண்டிருப்போரும் தங்களின் இப்போதைய இருப்பில் மகிழ்ந்தார்களே அன்றி, வாழ்வின் மறுபக்கத்தை அவர்கள் நீட்டிப்பார்க்கத் தவறிவிட்டனர். ஆக, யார் ஒருவர் இருப்பதிலிருந்து இல்லாதது வரை அகலமாகத் தன் கண்களை விரிக்கிறாரோ அவர்தான் தன் நங்கூரப் புள்ளியைச் சரியான இடத்தில் போட முடியும். எடுத்துக்காட்டாக, வால்ட் டிஸ்னி. தன் அறைக்குள் நுழைந்த எலிகளைக் கேலிச்சித்திரமாக வரைவதோடு நின்றிருந்தால் அவர் ஒரு கார்ட்டூன் வரைபவராகவே இருந்திருப்பார். ஆனால், 'மிக்கி மவுஸ்' என்ற ஒன்றை எடுத்து குழந்தைகள் பொழுதுபோக்கு என்று மாற்றியதால்தான் அவரால் டிஸ்னி உலகம் பற்றி யோசிக்க முடிந்தது. இயேசு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் உருவில் பெரிய திருச்சபைத் தலைவர்களைப் பார்த்தார். ஆக, வாழ்வைப் பெரிதாக, முழுமையாக விரித்துப்பார்க்கும்போது நம் நங்கூரப் புள்ளியை நிலையானவற்றில் நாம் பதிக்க முடியும்.

2. உடனடி இன்பங்கள் தவிர்ப்பது

யோயாக்கின், கொரிந்து நகர மக்கள், மற்றும் செல்வர், உணவருந்தி இன்புற்றிருப்போர், சிரிப்போர், புகழ்ச்சியை இரசிப்போர் ஆகிய அனைவரும் உடனடியாகக் கிடைக்கும் முடிவுகள் பற்றியே கருத்தாய் இருந்தனர். இன்றைய உலகம் நமக்கு நிறைய உடனடி நங்கூரப் புள்ளிகளைத் தருகிறது. சமூக தொடர்பு செயலிகளும், விளம்பரங்களும் அவற்றை நோக்கி நம்;மை இழுக்கின்றன: களிப்பு, பொழுதுபோக்கு, அழகு, பணம், அறிமுகம், வெற்றி, வேலை என நிறைய நங்கூரப் புள்ளிகள் நம்மை அழைக்கின்றன. இவை எல்லாம் இன்பம் தருபவையே. ஆனால், எவ்வளவு வேகமாக இவை இன்பத்தைத் தருகின்றனவோ, அவ்வளவிற்கு வேகமாக இன்பத்தை இழக்கவும் செய்கின்றன. மேலும், இவை ஒருவரைத் தன்மையம் கொண்டவராக மாற்றிவிடுகின்றன.

3. கவனச் சிதறல்கள் குறைப்பது

'இரு மானைத் துரத்துபவர் ஒரு மானையும் பிடியார்' என்பதுபோல, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நங்கூரம் போட நினைப்பவர் ஓரிடத்திலும் போட மாட்டார். ஆக, எது சரியானது என்பதைத் தேர்ந்து தெளிந்து, தெரிவு செய்ததில் முழுமையாக ஆற்றலைச் செலுத்தும் மனப்பக்குவமும், மனவுறுதியும் பெற வேண்டும். 'அது நன்றாக இருக்குமே, இது நன்றாக இருக்குமே' என்று வண்ணத்துப் பூச்சி போல பறந்துகொண்டிருந்தாலும், 'அவரைப் போல நான் இருப்பேன். இவரைப் போல நான் செய்வேன்' என்று ஒப்பீடுகள் செய்துகொண்டிருந்தாலும் நம்மால் நிலையானதில் நங்கூரம் பதிக்க முடியாது. யோயாக்கினுக்கு எகிப்து ஒரு கவனச் சிதறலாகவும், கொரிந்தியருக்கு தங்களின் கிரேக்க தத்துவ சிந்தனை ஒரு கவனச் சிதறலாகவும், இயேசுவின் சமகாலத்து எதிராளிகளுக்கு தங்களின் செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி ஆகியவை கவனச் சிதறல்களாகவும் இருந்தன. இன்று நம்முடைய கவனச் சிதறல் எது?

இறுதியாக, கொஞ்சம் நிமிர்ந்து, கண்களையும் இதயத்தையும் திறந்து வைத்து அகலமாகப் பார்த்தால், பார்வை தெளிவாகும். என் நங்கூரப் புள்ளியை - அதாவது, நம்பிக்கை மையத்தை - சரியாகத் தெரிவு செய்து, அதற்கேற்ற உழைப்பைக் கொடுத்து, பொறுமையாகக் காத்திருந்தால் நானும் நிலைத்துக் கனிகொடுப்பேன்.

இதுவே, இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 1) திருப்பாடல் ஆசிரியரின் இறைவேண்டலாக, ஏக்கமாக, எதிர்நோக்காக இருக்கிறது: 'ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர் (நங்கூரம் பதிப்பவர்) நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல இருப்பார். பருவகாலத்தில் கனிதருவார். தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்!'

1 comment:

  1. ஆண்டின் பொதுக்காலம் 6 ம் ஞாயிறுக்கான மறையுரை. “ நங்கூரமிடுவது” கூடுதல் அர்த்தம் பெறும் வார்த்தை. கூட்டத்தைப்பார்த்தாலே தொடை நடுங்கும் ஒருவரை நங்கூரப் புள்ளியாக்கவும்,அதைத் தகுந்த இடத்தில் முறையுடன் பதிக்கவும் வரைமுறைகளைச் சொல்ல வருகிறது.
    எருசலேமைக் கைப்பற்ற நடந்த போராட்டத்தில் யார், யார் மேல் நம்பிக்கை வைத்தனர் என்பதைத் தெளிவு படுத்துகிறார் எரேமியா.”வலுவற்ற மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்” என்கிறார்.பாலைவனப்புதர்ச்செடிகளாக இன்று முளைத்து நாளை கருகுவதை விட, காலம் கடந்து நம்பிக்கைகொடுத்தாலும், நீரில் நடப்பட்ட மரத்தின் நங்கூரம் பூமியில் பதிந்திருப்பதால், நாட்கள் பல சென்று கனி கொடுத்தாலும் அச்சமில்லை என்று சொல்லும் முதல் வாசகம்……
    அழியா உடல் பெற்ற இயேசு போல்,அவர் உயிர்ப்பில் பங்கேற்கும் நாம் அவரைப்போல அழியா உடல் பெற்று உயிர்ப்போம் என்றும்,அழிவுக்குரிய உடலின் மேல் நம்பிக்கை வைக்காமல் நாம் பெறப்போகும் அழியா உடல் மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமென அறைகூவல் விடும் பவுலின் வார்த்தைகளை உள்ளடக்கிய இரண்டாம் வாசகம்…..
    செல்வம்,உணவு, சிரிப்பு, புகழ்ச்சி போன்ற வாழ்வியல் எதார்த்தங்களில் வாழ்க்கையை ஒன்றிப்போய் விடாமல் பார்த்துக்கொள்ளவும்…அதற்கு பதிலாக ஏழ்மை,பசி,அழுகை,புறக்கணிப்பு போன்றவற்றில் நம் மனத்தைச் செலுத்தவும் அழைப்புவிடும் லூக்காவின் நற்செய்தி வாசகம்…
    மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களில் திருச்சபையின் பெரிய தலைவர்களைப் பார்த்த இயேசு போல, நம் நங்கூரத்தை ஆழமாகவும்,அகலமாகவும் விரித்துப்போட்டு நிலையானவற்றில் நம் பார்வையைப்பதிக்கவும், இன்பமாக இருப்பதை உணரும் நொடிப்பொழுதில் அது துன்பமாக மாறும் விஷயங்களைத் துச்சமாக நினைத்துப்புறந்தள்ளவும்,எது சரியானது என்பதைத் தேர்ந்து,தெளிந்து,தெரிவு செய்வதில் ஆற்றலை செலுத்தவும் நம்மை அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.
    இன்றைய வாசகங்கள் சொல்லும் வழி நடந்து என் நம்பிக்கை நங்கூரத்தை நானும் சரியாகப் பதிக்கும் பட்சத்தில்… “நானும் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பேன்; பருவகாலத்தில் கனி தருவேன்; நான் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவேன்” என்று திருப்பாடலாசிரியரோடு இணைந்து பாடமுடியும்!
    நம்பிக்கையின் நங்கூரத்தை மனத்தில் பதித்த தந்தைக்கு நன்றியும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete