வீடு திரும்புதல்
'வீடு திரும்புதல்' ஒரு நல்ல பண்பு. காலை முதல் மாலை வரை நமக்குள் நாமே திரும்பிக் கொண்டிருத்தலே வீடு திரும்புதல்.
இயேசுவால் பணிக்கு அனுப்பப்பட்ட சீடர்கள் இல்லம் திரும்புகின்றனர். தாங்கள் செய்ததை இயேசுவிடம் அறிவிக்கின்றனர். அவர்களை உடனடியாகத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார் இயேசு. ஓய்வெடுப்பதற்காக அவர்கள் ஒதுங்கிச் செல்ல, மக்கள் கூட்டம் அவர்களை விரட்டிச் செல்கின்றது. மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் தன் ஓய்வை ஒதுக்கி வைக்கின்ற இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்குகின்றார்.
இந்த நிகழ்வு அருள்பணியாளர்களுக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றது:
(அ) மேய்ப்புப்பணி அறிவிக்கை (பாஸ்டரல் ரிப்போர்ட்டிங்)
திருத்தூதர்கள் இயேசுவால் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். தங்கள் பணி எப்படி இருந்தது என்பதை தங்கள் தலைவரிடம் திருத்தூதர்கள் அறிவிக்கின்றனர். மேலாண்மையியலில் 'பணிப் பகிர்வு' (டெலகேஷன்), 'பணி அறிவிக்கை' (ரிப்போர்ட்டிங்) என்னும் இரண்டும் இணைந்தே செல்கின்றன. காலையிலிருந்து மாலைவரை மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்காக, அவர்களோடு பல பணிகள் ஆற்றும் அருள்பணியாளர்கள் மாலையில் தங்கள் தலைவராம் இயேசுவிடம் திரும்பி வந்து, நற்கருணைநாதர் முன் அந்த நாள் பற்றிய அறிவிக்கை (ரிப்போர்ட்டிங்) செய்ய வேண்டும். ஏனெனில், அவர்கள் செய்வது இயேசுவின் பணியே அன்றி, தங்கள் பணி அல்ல. மேலும், இயேசுவுடன் அமர்ந்து தங்கள் பணியைத் திறனாய்வு (இவேல்யூவேஷன்) செய்ய வேண்டும்.
(ஆ) மேய்ப்புப்பணி ஓய்வு (பாஸ்டரல் ரெஸ்ட்)
மேலை நாடுகளில் வாரத்தில் ஒரு நாள் அருள்பணியாளருக்கு ஓய்வு நாள் என்று தரப்படுகின்றது. துறவற சபைகளில் ஆண்டுக்குப் பத்து நாள்கள் விடுமுறைகள் தரப்படுகின்றன. ஏன்? 'நீ இல்லாமலும் பங்கு நடக்கும்' என்று அருள்பணியாளருக்கு அறிவுறுத்தவும், 'நீ இல்லாமலும் சபை நடக்கும்' என்று துறவறத்தாருக்கு அறிவுறுத்தவும்தான் இந்த ஓய்வு அளிக்கப்படுகின்றது. ஏனெனில், நாம் பணி செய்யும் இடங்களில் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் பிணைப்பு, 'நான் இங்கு இல்லையென்றால் ஒன்றும் நடக்காது' என்ற மாய உணர்வை என்னில் ஏற்படுத்தி, 'நான் ஓர் இன்றியமையாதவன், இன்றியமையாதவள்' என்ற போலியான எண்ணத்தை உருவாக்குகிறது. விளைவு, நான் என் பணியைப் பற்றிக்கொள்ளத் தொடங்குகிறேன். ஆனால், நான் இன்றியமையாதவன் இல்லை (டிஸ்பென்ஸபிலிட்டி) என்பதை உணர்ந்தால் பற்றுகள் விடுப்பேன். பல வேலைகள் இருந்தாலும் நாம் இரவில் தூங்கச் செல்வது ஏன்? நாம் செய்யாவிட்டாலும் வேலைகள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும். அல்லது நாளை செய்யலாம். அல்லது வேறு ஒருவர் அவற்றைச் செய்வார். 'எல்லாமே நான்தான்' என்ற உணர்வு தன் சீடர்களுக்கு வந்துவிடாத வண்ணம் அவர்களை உடனடியாகத் தனியாக அழைத்துச் செல்கின்றார் இயேசு.
(இ) மேய்ப்புப்பணி பரிவு (பாஸ்டரல் எம்ப்பதி அல்லது கம்ப்பேஸ்ஷன்)
ஓய்வுக்கு என்று சென்றாலும் தேவை வரும்போது தன் திட்டத்தை மாற்றிக்கொள்கின்றார் இயேசு. காரணம், பரிவு. பரிவுக்காக அல்லது பரிவு கொண்டு எதையும் மாற்றலாம் என்பது என் நம்பிக்கை. இதையே, அகுஸ்தினார், 'அன்பு செய். என்ன வேண்டுமானாலும் செய்!' என்கிறார். இயேசு தன் மனத்தை மாற்றிக்கொள்வதை ஃபிக்கில்மைன்டட்னஸ் என்று நாம் சொல்வதில்லை. மாறாக, தேவையின் பொருட்டு தன் பணியை மாற்றும் மேய்ப்புப் பணி விவேகம் (ப்ரூடன்ஸ்) என அழைக்கிறோம். 'நான் தூங்கப் போகிறேன்' என்று சொல்லும் கணவர், இரவில் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால், தூக்கம் தள்ளி வைத்து அவரை மருத்துவமனைக்கு இரவோடு இரவாக அழைத்துச் செல்கிறார். இதுவே பரிவு. இதையே இயேசுவும் செய்கின்றார். அருள்பணியாளரும் தனியாக இருந்தாலும், ஓய்வாக இருந்தாலும் பரிவு தேவைப்படும் இடத்தில் உடனடியாகச் செயலாற்றுதல் வேண்டும்.
திருநிலையினர் விடுத்து, அனைவருக்குமான செய்தியாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
மாலையில் இறைவனின் திருமுன் அமர்ந்து, நம் உள்ளம் திறப்போம்.
நாம் இல்லாமலும் உலகம் நடக்கும் என்ற உணர்வு பெறுவோம்.
நமக்கு அடுத்திருப்பவரின் தேவை கண்டு பரிவு கொள்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில், நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ, எதிரிகளின் அழிவையோ கேட்பதை விடுத்து ஞானத்தைக் கேட்கின்றார் சாலமோன்.
ஞானம் இறைவனிடம் அறிவிக்கை செய்யும், ஓய்வெடுக்கும், பரிவு காட்டும்.
“ வீடு திரும்புதல்” …தன் இருப்பிடத்தை விட்டுக் காலையில் வேலைப்பயணத்தை மேற்கொள்ளும் ஆணோ..பெண்ணோ…அருட்பணியாளரோ..குடும்பத்தஸ்தரோ பணி முடிந்து கூட்டை நோக்கிப் பறக்கும் பறவைகளாகப் பார்க்கப்படுகிறார்கள். அயர்ந்து உறங்கச்செல்லுமுன் அன்றைய நாளை அசைபோட அழைக்கிறது இன்றையப்பதிவு. திருப்தி மேலோங்கி நின்றால் தனக்குத்தானே ஒரு ‘ சபாஷ்!’ சொல்லவும், இல்லையெனில் அன்று விட்டதை மறுநாள் செய்து முடிக்கவும் தனக்குத்தானே ஒரு உத்வேகத்தை ஏற்றிக்கொள்ளவும் அது உதவுகிறது. இதை நற்கருணை நாதர் முன்னமர்ந்து செய்யும் அதிர்ஷ்டம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. தன் இருப்பிடத்தை கோவிலாக்கி..அங்கு உறையும் இறைவனையே சாட்சியாக வைத்துக்கொள்ளப் பழக்க வேண்டும் நம் மனத்தை.
ReplyDeleteபணியைச் செவ்வனே செய்து முடிக்கும் ஒருவன் ஓய்வுக்குத் தகுதியானவன். உழைப்பால் தளர்ந்து போன உடல்பாகங்களை சரிசெய்யவும்…களைத்துப்போன திசுக்களுக்கு உத்வேகம் தரவும் அவசியம் இந்த ஓய்வு. பல பெரிய நிறுவனங்களில் பணத்தையும்,விடுமுறையையும் சேர்த்தே கொடுத்து தன் ஊழியர்களை ஊக்குவிப்பது வழக்கமான ஒன்று. இயேசுவும் அவ்வப்பொழுது களைத்துப்போன தன் சீடர்கள் ஓய்வெடுக்க அவர்களை ஊருக்கு வெளியே அழைத்துச்செல்வதை வழுக்கமாகக் கொண்டிருந்ததைப் பார்க்கிறோம்.எக்காரணத்திற்காகவும் இந்த ஓய்வை நாம் புறந்தள்ளக்கூடாது.நாம் இல்லாமலும் உலகம் சுற்றும் என்ற உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு அடிக்கோல் வைத்துப் போடப்படும் நேர்க்கோடு அல்ல. தேவை ஏற்படுகையில் அதை வளைத்துக்கொள்ளவும் நாம் தயாராக இருத்தல் அவசியம்.தன் மக்கள் ஆயனில்லா ஆடுகளாக நின்றபொழுது அவர்கள் மீது பரிவு கொண்ட இயேசு போல…. அன்பு…பரிவு போன்ற குணங்களை வெளிக்காட்ட நாம் எந்த சட்டத்தை வேண்டுமானாலும் உடைக்கலாம்; உதறலாம்.
மேற்காணும் அத்தனையும் வாழ்வின் வரைமுறைகளுக்குட்பட்டு வாழ நினைக்கும் அனைவருக்குமே அவசியம்….அது இல்லறத்தார் என்றாலும் சரி…துறவறத்தார் என்றாலும் சரியே!
இதற்கெல்லாம் மேலாக நமக்குத்தேவை ஒரு “சாலமோனின் ஞானம்”. அது மட்டும் நம்மிடம் இருக்கும் பட்சத்தில் இறைவனிடம் அறிவிக்கை செய்வதும்…ஓய்வெடுப்பதும்….பரிவு காட்டுவதும் நம் கைமேல் கனியாக வந்து அமரும் விஷயங்களாக மாறும். வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கு மத்தியில்,இப்படித்தான் வாழவேண்டுமெனும் ஒரு வழிமுறை சொல்லும் பதிவு. தந்தைக்குப் பாராட்டும்! நன்றியும்!!!