Friday, February 18, 2022

நாவடக்கம்

இன்றைய (19 பிப்ரவரி 2022) முதல் வாசகம் (யாக் 3:1-10)

நாவடக்கம்

தன் குழுமத்தில் பலரும் போதகர்களாக விரும்புவதைக் காண்கின்ற திருத்தூதர் யாக்கோபு, அதற்கான அறிவுரைப் பகுதியில் நாவடக்கம் பற்றிப் பேசுகின்றார்.

'காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம். அடக்கியும் உள்ளனர். ஆனால், நாவை அடக்க யாராலும் முடிவதில்லை' என்கிறார் யாக்கோபு.

நாவடக்கம் என்பதை மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்:

ஒன்று, உண்மையானவற்றையும், மேன்மையானவற்றையும் உரைப்பது

நாவடக்கம் என்பது ஊமை போல இருக்கின்ற நிலை அல்ல. மாறாக, உண்மையானவற்றை உரைக்க உரைப்பதே நாவின் பணி. பொய்யுரைப்பது குறையும்போது இயல்பாகவே நாவடக்கம் வந்துவிடுகிறது.

இரண்டு, கெட்ட வார்த்தைகளையும், கடுஞ்சொற்களையும் தவிர்ப்பது

ஆண்டவரைப் புகழ்கின்ற நாவைக் கொண்டே அடுத்தவரையும் பழித்துரைப்பது சரியா? என்னும் கேள்வியை எழுப்புகின்ற யாக்கோபு, கடுஞ்சொற்கள் தவிர்க்க நம்மை அழைக்கின்றார்.

மூன்று, அமைதி அல்லது மௌனம் காப்பது

நாவடக்கத்திற்கான மிகவும் எளிய வழி இது. ஆனால், அமைதி காத்தல் நமக்குப் பல நேரங்களில் கடினமாக இருக்கிறது. ஏதாவது பேசியே ஆக வேண்டும் என்னும் எண்ணத்தில் நாம் எதையாவது பேசிக்கொண்டே இருக்கின்றோம். நம் சொற்கள் கூடக் கூட நம் மடமையும் கூடுகிறது. நிறைவான, சரியான சொற்களைத் தேவையான நேரங்களில் மட்டுமே பயன்படுத்துவது நலம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் திருத்தூதர்கள் மூவர்முன் தோற்றம் மாறுகின்றார். இயேசுவைப் பற்றிய புதிய புரிதலை அவர்கள் பெறுகின்றனர். மலையில் கேட்கின்ற குரலொலி, 'இவருக்குச் செவிசாயுங்கள்' என நம்மை அழைக்கிறது.

அவருக்குச் செவிசாய்த்தல் ஆழ்ந்த அமைதியில்தான் நடந்தேறுகிறது.


1 comment:

  1. “காட்டில் வாழ்வன,பறப்பன,ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கி விடலாம்.ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை.” ஆற அமர்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.பல நேரங்களில் பேசியே ஆகவேண்டுமெனப் பேசுகிறோம்; நாலு பேர் இருக்கும் சபையில் நமக்குத் தெரிந்ததையெல்லாம் கொட்டிவிட வேண்டுமென்று பேசுகிறோம்; நமக்குப்பிடிக்காத ஒருவர் பற்றி…பிடிக்காத விஷயங்கள் பற்றி என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறோம்.ஒரு விஷயத்தின் நியாய- அநியாயத்தை அதில் சம்பந்தப்பட்டவர்களோடு நமக்குள்ள உறவு நிலைக்கேற்ப திரித்துப் பேசுகிறோம். என் சிறுவயதில் உடலின் அவயவங்களின் பயன் குறித்து நான் பயின்ற ஒரு பாடலில் “ ஓர் சிறு நாவு “அவர்” புகழ் பாட” என்று சொல்லிக்கொடுக்கப்பட்டது.ஆனால் அந்த வேலையை மட்டுமா
    செய்கிறது நம் நாவு? “எலும்பில்லா நாக்கு இருபுறமும் பேசும்” என்ற பழமொழியையல்லவா மெய்யாக்குகிறது.யோசிப்போம்! நல்லது பேச முடியவில்லை எனில் அமைதி காக்கப் பழகுவோம். மலையில் கேட்கும் அந்தக் குரலுக்கு செவிகொடுக்க நாம் செய்யும் முயற்சி ஒன்றே நாம் அமைதி காக்க உதவும். அமைதி காப்போம்; அந்த அமைதியில் இறைவனைக் காண்போம்.
    முயன்றால் யாரும் வாழ்க்கையில் கடைபிடிக்க க் கூடிய ஒரு விஷயத்தைத் தொட்ட தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete