அக மதிப்பு
கலிலேயக் கடற்கரை ஓரத்தில் தங்கள் படகுகளை நிறுத்தி விட்டு வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்த பேதுரு மற்றும் அந்திரேயாவை அழைக்கின்ற இயேசு, 'உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குவேன்!' என்கிறார். மீன் பிடிப்பது என்பது அவர்களுடைய முகமதிப்பு. மனிதர்களைப் பிடிப்பது என்பது அவர்களுடைய அகமதிப்பு.
கண்ணுக்குப் பார்த்தவுடன் தெரிவது முகமதிப்பு. கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது அகமதிப்பு. அகமதிப்பைக் காண நம்பிக்கைப் பார்வை தேவை.
மனிதர்களின் முக மதிப்பு இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள், நாளுக்கு நாள் மாறுபடும். எப்படி?
எடுத்துக்காட்டாக, என் இல்லத்தில் ஓட்டுநராக வேலை செய்கிறவரின் முக மதிப்பு 'ஓட்டுநர்' என்பது. ஆனால், அவருடைய இல்லத்தில் அவருடைய முக மதிப்பு 'தந்தை' அல்லது 'மகன்' அல்லது 'கணவர்' என்பது. இதைத் தாண்டி அவர் தன்னிலேயே மேற்காணும் அடையாளங்களைக் கடந்த ஓர் அகமதிப்பைக் கொண்டிருக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவருகின்றனர். சீடர்கள் அவர்களை அதட்டுகின்றனர். 12 வயது நிரம்பாத குழந்தைகளை பெரும்பாலும் அஃறினையில்தான் அழைக்கின்றது கிரேக்க மொழி. நம் தமிழ் மொழியிலும் இதைக் காண்கிறோம். 'பாப்பா என்ன படிக்குது?' 'தம்பி எங்க இருக்கு?' என்று நாமும் குழந்தைகளை அஃறினையில்தான் பேசுகின்றோம். மேலும், 12 வயது நிரம்பினால்தான் தோரா என்னும் சட்ட நூல்களைப் படிக்க முடியும் என்பதால், குழந்தைகள் ஆன்மிக அளவிலும் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையினராகவே கருதப்பட்டனர்.
கிரேக்க மொழியும், யூத சமயமும் குழந்தைகளின் முக மதிப்பைக் கண்டன. சீடர்களும் இதன் பின்புலத்திலேயே அவர்கள் தங்கள் போதகரிடம் வருவதைத் தடை செய்கின்றனர்.
ஆனால், இயேசு இக்குழந்தைகளின் அகமதிப்பைக் காண்கின்றார். 'இறையாட்சி இத்தகையோரதே!' என அவர்களை இறையாட்சியின் முதல்நிலை உறுப்பினர்களாக மாற்றுகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். யாக் 5:13-20), யாக்கோபு தன் திருமுகத்தை ஏறக்குறைய நிறைவு செய்யும் பகுதியில், தன் குழுமத்திற்கு இறுதி அறிவுரை வழங்குகின்றார். உண்மையை விட்டு விலகிச் செல்லும் ஒரு நபரை மனந்திரும்பச் செய்தல் என்பது அந்த நபரை மனந்திருப்புதலுக்குச் சமம் என்கிறார் யாக்கோபு.
உண்மையை விட்டு விலகிச் செல்பவரின்மேல் பொறுப்புணர்வும், அவருடைய தவற்றைச் சுட்டிக்காட்டும் துணிவும் கொண்ட ஒருவர்தான் அவரை மனம்திரும்பச் செய்ய முடியும். பல நேரங்களில் நாம் பொறுப்புணர்வைத் தட்டிக் கழிக்கின்றோம். அல்லது அவரோடு சமரசம் செய்துகொள்கின்றோம்.
சீடர்கள் குழந்தைகளைப் பார்க்கின்ற பார்வையை இயேசு மாற்றுவதன் வழியாக அவர்களை மனந்திருப்புகின்றார்.
இன்றைய நற்செய்தி நமக்கு இரு பாடங்களைக் கற்றுத் தருகின்றது:
ஒன்று, நான் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது அவருடைய முக மதிப்பை மட்டும் காண்கின்றேனா? அல்லது அதையும் தாண்டி அவருடைய அக மதிப்பை நோக்கிச் செல்கின்றேனா?
இரண்டு, என் அகமதிப்பை நான் கண்டுகொள்கின்றேனா? என் அக மதிப்பு உயர்ந்து இருக்கும்போது என் வாழ்க்கை நிலையும் உயர்கின்றது. வெளி அடையாளங்களைக் கடக்கும்போதுதான் நான் என் அகமதிப்பைக் கண்டுகொள்ள முடியும்.
முகமதிப்பு மற்றும் அகமதிப்பு. ஒரு மனிதனை அடையாளம் காட்டுவது இரு மதிப்புக்களும் தான்.ஆனால் குழந்தைகளின் விஷயத்தில் முன்னதே முன்னுரிமை பெருகிறது. குழந்தைகளின் அகமதிப்பைப் பார்க்கத்தெரியாத சீடர்கள் அவர்கள் இயேசுவிடம் வருவதைத் தவிர்க்க, “ விண்ணரசு இத்தகையோரதே” என்கிறார் இயேசு அவர்களின் அகமதிப்பை மட்டுமே கண்டுகொண்டவராய்.இந்நிகழ்வு நம்மைப் பார்த்து ஒரு கேள்வியை முன்வைக்கிறது.நான் அடுத்தவரில் பார்ப்பது அகமதிப்பையா? இல்லை முகமதிப்பையா? என் முகமதிப்பை ஒரு பக்கமாகத் தள்ளி வைக்கையில் மட்டுமே என் அகமதிப்பை என்னில் தூக்கி நிறுத்த முடியும் என்பதை உணருகிறேனா? பதில் தேட அழைக்கிறது இன்றையப்பதிவு.
ReplyDeleteஎன்மேல் எனக்குள்ள அக்கறை போல் என் அயலானிடமும் காட்டவேண்டுமென அழைக்கிறது இன்றைய முதல்வாசகம். தான் செல்ல வேண்டிய பாதை மாறிப் பயணம் செய்யும் ஒருவரின் குறையை சுட்டிக்காட்டி,அவர் செல்ல வேண்டிய பாதையில் அவரைத் திருப்பி விட வேண்டுமென்கிறார் யாக்கோபு.அதற்கான துணிவு என்னிடம் இருக்கிறதா? இல்லை நான் நமக்கேன் வம்பு? என்று ஒதுங்குகிறேனா? யோசிப்போம்.
இன்றையப் பதிவு தரும் இருபாடங்களுமே அழகானவை. என் வாழ்க்கையில் யாருக்கேனும் ஒருவருக்கு இவற்றைச் செய்ய முடிந்தால் எத்துணை நலம்! “எல்லாம் நம் கையில்” என்று சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!