கையிருப்பு அறிதல்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த விடுமுறைக் காலத்தில் இராஜபாளையத்தில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் ஒரு வாரம் வேலை பார்த்தேன். அந்த வாரம் மாதத்தின் இறுதி வாரம் என்பதால், 'கையிருப்பு எடுத்தல் அல்லது அறிதல்' (டேக்கிங் ஸ்டாக்) முதன்மையான வேலையாக இருந்தது. காலை முதல் மாலை வரை ஒவ்வொரு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மருந்துகளை எடுத்து அவற்றின் எண்ணிக்கையைக் குறிக்க வேண்டும். இப்போதுள்ள கணினி மென்பொருள்கள் அன்று இல்லை. கையிருப்பு அறிதலுக்கு முதன்மையானது கையில் இருப்பதை அறிதல். அதாவது, நான் கையில் எடுக்கும் பொருள் என்ன என்ற தெளிதல் வேண்டும். அந்தத் தெளிதல் இருந்தால்தான் அது மாத்திரை வகையா, ஊசி வகையா, களிம்பு வகையா என்று நான் பிரிக்க முடியும். அடுத்ததாக, கையிருப்பு அறிதலின் முக்கியமான நோக்கம் நம்மையே அடுத்த மாதத்திற்குத் தயாரிப்பது. எதை வாங்க வேண்டும், எதை நிறுத்த வேண்டும், எந்தப் பொருளுக்குத் தேவை இருக்கிறது, காலாவதியான பொருளை எப்படி நீக்குவது என்பதை அறிவதற்கு கையிருப்பு அறிதல் மிகவும் பயன்படுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், சீடர்கள் தங்கள் கையில் இருப்பவர் யார் என்று அறிகின்றனர். 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என இயேசு கேட்க, பேதுரு, 'நீர் மெசியா' என்று பதிலிறுக்கின்றார். சீடர்கள் புரிந்தும் புரியாமலும் இருக்க, பேதுரு இயேசுவைப் பற்றி அறிந்தவராக நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். பேதுருவின் அறிக்கையைப் பாராட்டுகின்றார் இயேசு.
தொடர்ந்து இயேசு தன் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு பற்றி முதன்முறையாக முன்னறிவிக்கின்றார். அதாவது, தன் கையிருப்பை அறிந்தவராக இருக்கின்றார் இயேசு. துன்பங்கள் பற்றிய கையிருப்பு செய்கின்றார் இயேசு.
பேதுருவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கையில் இருந்த மெசியாவைப் பார்த்த பேதுரு, மெசியாவின் கையிலிருந்த துன்பங்களைக் காண மறக்கின்றார்.
நம் வாழ்வு அடுத்தடுத்த துன்பங்களாகத்தான் கடந்து போகிறது. துன்பங்களே நம் வாழ்வின் வேகத்தைக் கூட்டுகின்றன. துன்பங்களே நம் வாழ்வின் மகிழ்ச்சிகளைக் கொண்டாட வைக்கின்றன.
துன்பங்களைப் பற்றிய நம் பார்வை எப்படி இருக்கிறது?
முதல் வாசகத்தில், யாக்கோபுவின் குழுமத்தில் உள்ள பிரச்சினை ஒன்றைக் காண்கின்றோம். ஏழையர் ஒதுக்கப்படுகின்றனர். செல்வந்தர்கள் மதிக்கப்படுகின்றனர்.
மனிதர்கள் மற்றவர்களின் கையில் உள்ள இருப்பான செல்வத்தைக் கொண்டு மதிப்பிடுகின்றனர். ஆனால், கடவுளோ, மனிதர்களின் உள்ளத்தில் உள்ள நம்பிக்கை என்னும் கையிருப்பைக் கொண்டு அவர்களை மதிப்பிடுகின்றார்.
மற்றவர்களைப் பற்றிய என் மதிப்பீடு எதைப் பொருத்து இருக்கின்றது?
‘கையிருப்பு அறிதல்’…..தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு கடைக்குச்சென்று,செலவுசெய்து,வீடு வந்து சேர்ந்தபின் கையில் மீதி உள்ளது என்ன எனக் கணக்குப்போடுவது என நினைத்தேன். கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது உள்ளே இருக்கும் விஷயமும்.சீடர்கள் இயேசுவை அறிந்தும் அறியாதவராயிருக்கப், பேதுரு அவரைக்குறித்த நம்பிக்கை அறிக்கையை முன்வைக்கிறார்.இயேசு தனக்கு வரப்போகும் கையிருப்பைப் பட்டியலிட,அதை ஏற்றுக்கொள்ள முடியா நிலையில் பேதுரு…. இயேசுவின் ‘இறப்பு’ எனும் கையிருப்பு தான் அவரின் மாட்சிமிக்க ‘உயிர்ப்பு’ எனும் கையிருப்புக்கு கட்டியம் கூறப்போகிறது எனும் உண்மையை அறியாதவராய். பேதுருவில் நம்மையே பார்க்க முடிகிறது. ‘துன்பமின்றி இன்பமில்லை’ எனும் உண்மை உணராதவராய் பல நேரங்களில் முகம் சுளித்தலே நம் கையிருப்பாய் உள்ளது.
ReplyDeleteஅடுத்தவரின் கையிருப்பைக்கண்டு அவர்களை மதிப்பிடும் குணம் மாறி, அவர்களிடம் காணும் ‘நம்பிக்கை’ எனும் கையிருப்பின் பலம் கொண்டு அவர்களை மதிக்க அழைப்பு விடுக்கிறது முதல் வாசகம்.
அடுத்தவரின் கையிருப்பு குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் குணம் விடுத்து இன்று…இப்பொழுது என் கையிருப்பு என்ன என்பதை கணக்கெடுப்போம்.
ஒரு மருந்து கடையில் வேலை செய்பவரின் இலக்கணத்தைத் தந்தை சொல்லியிருக்கும் நேர்த்தி அழகு. வாழ்த்துக்கள்!!!