நம்மைச் சாராதவர்
'மற்றவர்களை விட நாம் ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவர்கள்' என்ற மாயை பல நேரங்களில் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. 'எப்படி எல்லாம் நான் மற்றவர்களை விட உயர்ந்தவர்' என்று என் மனம் என் விருப்பம் இல்லாமலேயே எண்ணிக் கொண்டிருக்கிறது. என்னை விட இன்னொருவர் உயர்ந்தவராகத் தெரிந்தால், உடனே அவரை என் குழுவுக்குள் இழுத்து, 'நாம் வேறு - அவர்கள் வேறு' என்னும் வேறுபாட்டை உருவாக்கிக் கொள்கின்றோம்.
இயேசுவின் திருத்தூதர்களுக்கும் இதே பிரச்சினை இருந்தது. தாங்கள் பெற்ற ஆற்றல், தாங்கள் செய்த அரும் செயல்கள், தங்களோடு இருந்த இயேசு என தங்களுக்கென்று ஒரு குழு மனநிலையை உருவாக்கிக் கொண்டு மற்றவர்கள் தங்களைச் சாராதவர் என்று அடையாளப்படுத்தினர்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் இயேசுவிடம் தங்களைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுவதைக் கண்டு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்ததைச் சொல்கின்றார். ஆனால், இயேசு குழு மனநிலையைச் சார்ந்திருப்பதைத் தாண்டி அந்த மனிதரின் நம்பிக்கையைப் பாராட்டுகின்றார்.
நம் வாழ்விலும், கிறிஸ்தவர்கள் என்ற குழுவுக்குள் இருப்பதால் மற்றவர்கள் நம்மைச் சாராதவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால், மற்றவர்கள் தங்கள் நம்பிக்கையால் நம்மை விட உயர்ந்து கொண்டிருப்பார்கள்.
இரண்டு விடயங்கள் முக்கியமானவை:
ஒன்று, ஆன்மிகம் என்பது குழு சார்ந்தது அல்ல. மாறாக, நம் தனிநபர் நம்பிக்கை அனுபவம் சார்ந்தது.
இரண்டு, அடுத்தவரிடமிருந்து நான் எப்படி வேறுபட்டவர் என்று நினைப்பது நமக்குள் வேற்றுமை மற்றும் பாகுபாட்டு உணர்வைத் தருகிறது. இதைத் தவிர்த்தல் நலம்.
இன்றைய முதல் வாசகத்தில், தன் குழுமத்திற்கு இரு விடயங்களை நினைவூட்டுகிறார் யாக்கோபு: ஒன்று, கடவுளின் திருவுளத்தை மனத்தில் இருத்திச் செயல்படுங்கள். இரண்டு, நன்மை செய்வதற்கு அறிந்திருந்தும் நன்மை செய்யாமல் இருப்பது தீமை.
நம்முடைய பால்யப் பருவத்திலிருந்தே “ நாம் கிறிஸ்துவர்கள்; அதனாலேயே பெரும் பேறு பெற்றவர்கள்” என்பதைக் கேட்டே வளர்ந்திருக்கிறோம். அந்த நினைப்பில் தப்பில்லை; ஆனால், அதனாலேயே மற்றவர்கள் நம்மிலிருந்து வேறுபட்டவர்களென்று நினைப்பது தவறு என்பதை எடுத்து வைக்கும் ஒரு பதிவு.பல நேரங்களில் நம்மைவிட, நம்மைச்சாராதவர் என நாம் நினைப்பவர்கள், வாழும் முறையிலும்,இறைநம்பிக்கையிலும் நம்மை விட மேலானவர்கள்…இன்றைய நற்செய்தியில் வரும் மனிதன் போல…என்பது நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். ‘ஆன்மீகம்’ என்பது நம் பிறப்புரிமை இல்லை…அது நாம் வாழ்ந்து காட்ட வேண்டிய ஒரு விஷயம்.எதைச்செய்திடினும் இறைத்திருவுளத்தை மனத்திலிருத்தி செய்வதும்…நன்மை செய்ய வாய்ப்பிருக்கும் போதே அதைச் செய்து விடுவதும் நாம் மனத்திலிருத்த வேண்டிய விஷயம்.” காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!” என்பதற்கிணங்க வாய்ப்பு நம்மைத் தழுவுகையில் அதை வரமாக்கிக் கொள்ள வேண்டும் எனும் ஒரு செய்திக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete