Wednesday, February 23, 2022

தூய்மையாக்கப்படுவர்

இன்றைய (24 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 9:41-50)

தூய்மையாக்கப்படுவர்

'பலிப் பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவது போல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்' என்று சொல்கின்ற இயேசு, தொடர்ந்து, உப்பு தன் தன்மையைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றும், சீடர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் அமைதியில் வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.

பலிப் பொருள் தூய்மையாக்கப்படுவதன் பின்புலத்தில் தன் சீடர்கள் ஆன்மிகப் புதுப்பித்தல் பெற அவர்களை அழைக்கின்றார்.

சீடர்கள் மூன்று வழிகளில் தூய்மையாக்கப்படுகிறார்கள்:

ஒன்று, இரக்கச் செயல்கள் வழியாக. அதாவது, ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பதன் வழியாக.

இரண்டு, மற்றவர்களுக்கு இடறலாக இல்லாதிருப்பதன் வழியாக. மற்றவர்களின் பாவச் செயல்களுக்குத் தாங்கள் காரணமாக இல்லாதிருப்பதன் வழியாக. குறிப்பாக வலுவற்றவர்கள் மற்றும் நொறுங்குநிலையில் உள்ளவர்களைப் பாவத்தில் தள்ளாதிருப்பதன் வழியாக.

மூன்று, பாவத்திற்குக் காரணமான உடலுறுப்புகளை உடனடியாக நீக்குவதன் வழியாக. அதாவது, பாவச் செயல்களை உடனடியாக நிறுத்திக் கொள்வதன் வழியாக.

நெருப்பில் எறியப்படும் பொன் தன் அழுக்குகளை எல்லாம் இழந்து ஒளிர்கிறது.

தன்னையே நெருப்பின் வெப்பத்திற்கு ஆட்படுத்தும்போதுதான் அது தூய்மை பெறுகிறது.

இன்று நாம் தூய்மை அடைய வேண்டிய பகுதி எது? நெருப்பில் இட வேண்டிய பகுதி?

முதல் வாசகத்தில், செல்வத்தின் நிலையாமை பற்றித் தன் குழுமத்திற்கு எழுதுகின்ற யாக்கோபு, அநீதியான செல்வம் சேர்த்தலைக் கண்டிப்பதோடு, இவ்வகையான செல்வம் நெருப்பு போல அழித்துவிடும் என்று எச்சரிக்கின்றார்.


1 comment:

  1. தூய்மைக்கு காரணிகளான உப்பும்,நெருப்பும் நம் வாழ்வின் பகுதிகளாக இருந்தால் மட்டுமே, நாம் நம் வாழ்வில் அமைதி என்ற ஒன்றைக் காண முடியும் என்ற புரிதலைத் தரும் ஒரு பதிவு.பலிப்பொருள்களின் புனிதம் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் பல செலுத்துபவர்களின் புனிதமும் என்பதை எடுத்துரைக்கும் வாசகங்கள். தாகத்தோடு நம்மிடம் வருவோருக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பதும்….நம்மைவிட கீழ் நிலையில்( உடலும்,உள்ளமும் நொறுங்கிய நிலையில்) இருப்பவர்களைப் பாவம் என்ற படுகுழியில் தள்ளாதிருப்பதும், பாவத்திற்குக் காரணமான உறுப்புக்களை அகற்றுவது இயலாது என்பதால் பாவச்செயல்களையேனும் நாம் பாவம் என்று உணர்ந்த மறுநிமிடமே திருத்திக்கொள்வதும் சீட்ர்கள் மட்டுமல்ல…இயேசுவின் சீடத்துவத்தைப் பின்பற்ற நினைக்கும் அனைவருமே தங்களின் தூய்மைக்காகப் பின்பற்ற வேண்டிய வழிகள்.
    அதீதமான எதுவுமே அநியாயமானது என்பதால் எதையும் அளவோடு வைத்துக்கொள்ள நம்மைத் தூண்டும் ஒரு பதிவு. தூய்மை காக்கவும்…போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து உணர்த்தவும் வழி சொல்லும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete