Wednesday, February 2, 2022

அங்கி ஒன்றே போதும்

இன்றைய (3 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 6:7-13)

அங்கி ஒன்றே போதும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் பன்னிருவரை, இருவர் இருவராகப் பணிக்கு அனுப்புகின்றார். கைத்தடி தவிர வேறு எதையும் எடுத்துச் செல்வதைத் தடை செய்கின்ற இயேசு, 'அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்' என்கிறார்.

பாலஸ்தீனம் போன்ற வெப்பமான பகுதிகளில் அதிகமாக வியர்க்கும். உடையில் தூசியும் அழுக்கும் நிறையப் படியும். அப்படி இருந்தாலும் அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் என்று இயேசு அறிவுறுத்துகின்றார். அணிவதற்கு ஒரே ஆடை இருப்பதால் பணியில் அவசரம் காட்ட வேண்டும் என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது. 

நிறைய ஆடைகள் எடுத்துக் கொண்டு சென்று, ஆற, அமரச் செய்யும் பணி அல்ல இறையாட்சிப் பணி. மாறாக, அவசரம் அவசரமாகச் செய்து முடிக்க வேண்டிய பணி. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற தள்ளிப் போடுதல் இல்லை. ஏனெனில், 'நாளை' என்பதே இறையாட்சியில் இல்லை. 'இன்றே இப்பொழுதே இறையாட்சி' அறிவிக்கப்பட வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில், தாவீது தன் மகன் சாலமோனிடம் பேசும் இறுதி வார்த்தைகளைக் கேட்கின்றோம். தாவீதின் இறுதி நாள்கள் இனிமையாக இல்லை. உடலளவில் மிகவும் வலிமை இழக்கின்றார். பத்சேபா தன் வலுவின்மையைப் பயன்படுத்தி சாலமோனை அரசனாக அறிவிக்கச் சொன்னதை நினைத்து உள்ளத்து அளவிலும் வருந்துகின்றார்.

'அனைத்துலகும் போகும் வழியில் நானும் போகிறேன்' என்னும் தாவீதின் சொற்கள் ஞானமிகு சொற்களாக உள்ளன. 

நாம் அனைவரும் இந்த வழியில் போக வேண்டும் என்பதால் இன்றைய நம் வழியைச் சீர்ப்படுத்த வேண்டும் என்று சாலமோனுக்குக் கற்பிக்கின்றார்.


2 comments:

  1. வாழ்க்கையில் என்றோ ஒருநாள் செய்த தவறு தன் இறுதி மூச்சு வரை தன்னை துரத்துவதை உணர்கிறார் தாவீது.மனம் வெதும்பி நிற்கும் நேரங்களில் தான் மனிதனுக்கு ஞானம் பிறக்கிறது.” அனைத்துலகும் போகும் வழியில் நானும் போகிறேன்.” யாராலும் இதைத் தடுக்க முடியாது என உணருகிறார்.
    இன்றைய நற்செய்தியிலும் ஞானத்தைப் புகுத்துகிறார் இயேசு.தன் சீடர்கள் இறைபணிக்குச் செல்லும் விதம் இப்படித்தான் இருக்கவேண்டும் என முறைப்படுத்துகிறார். உடைகளை மாற்றி அணிய ஆயிரம் காரணங்கள் இருப்பினும் அணிந்திருக்கும் ஒரே அங்கியுடன் கைத்தடியை மட்டும் எடுத்துச் செல்லப் பணிக்கிறார்.
    “ இறையாட்சி” மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்க வேண்டுமென்பதற்காக மற்ற விஷயங்களைப் புறந்தள்ளச் செய்கிறார். பிறக்கப்போகும் நாளைக்காகக் காத்திராமல் செய்ய வேண்டிய இறைப்பணியை இன்றே….இந்த நிமிடமே செய்ய வேண்டுமென்கிறார். நம் வாழ்வைப்புரட்டிப்பார்க்க வேண்டிய நேரமிது. எதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்! அழகா….ஆடையா….அணிகலன்களா? எது என் வாழ்வை நிர்ணயிக்கப்போகிறது? செய்ய வேண்டியதை இன்றே செய்தால்….அதையும் நன்றே செய்தால் நம் வாழ்வின் இறுதி வேளையில் நம் வாயும் கூட ஞானம் நிறை சொற்களை உதிர்க்கும்…தாவீதைப் போல என்ற கருத்தைச் சொல்லும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete