Tuesday, February 15, 2022

ஏதாவது தெரிகிறதா?

இன்றைய (16 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 8:22-26)

ஏதாவது தெரிகிறதா?

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி, 'சங்கடமான பகுதிகளில்' (எம்ப்பேரஸ்மென்ட் டெக்ஸ்ட்ஸ்). சங்கடமான பகுதிகள் அனைத்தும் உண்மையான பகுதிகள் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. அப்படி என்ன சங்கடம்? பார்வையற்ற நபருக்கு இயேசு பார்வை தருகின்றார். ஆனால், இரண்டாவது தடவை இயேசு அந்த நபரைத் தொடும்போதுதான் அவர் பார்வை பெறுகின்றார். அப்படி என்றால், இயேசுவின் முதல் தொடுதலுக்கு ஆற்றல் இல்லையா? என்ற கேள்வி நம் உள்ளத்தில் எழுவதால், இது சங்கடமான பகுதியாகக் கருதப்படுகிறது.

இந்தப் பகுதியைப் புரிந்துகொள்ள இப்பாடத்தின் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். மாற்கு நற்செய்தியில் பார்வையற்றவர்கள் பார்வை பெறும் நிகழ்வு இரு இடங்களில் உள்ளது. முதலில், பெயரில்லாத ஒருவர் பார்வை பெறுகின்றார் (மாற் 8:22-26). இரண்டாவதாக, பர்த்திமேயு பார்வை பெறுகிறார் (மாற் 10:46-52). இரு நிகழ்வுகளுமே 'வழிப் பகுதி' என்றழைக்கப்படுகின்ற மாற் 8:22 - மாற் 10:52 என்னும் பகுதிக்குள் உள்ளன. இயேசு எருசலேம் நோக்கிய வழியில் செல்கின்றார். இந்த நிகழ்வின் தொடக்கத்திலும் இறுதியிலும் பார்வையற்ற நபர்கள் பார்வை பெறுகின்றனர். இயேசு தன் எருசலேம் பயணத்தின் போது தன் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பு பற்றி மூன்று முறை முன்னுரைக்கின்றார். மூன்று முறையும் சீடர்கள் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். முதல் முறை பேதுரு இயேசுவுக்குக் குறுக்கே நிற்கின்றார். இரண்டாம் முறை, தங்களுக்குள் யார் பெரியவர்? என்னும் வாக்குவாதம் சீடர்களிடையே எழுகிறது. மூன்றாம் முறை, யாக்கோபும் யோவானும் இயேசுவுக்கு அருகே அமர விரும்புகின்றனர். ஆக, இயேசுவை அவருக்கு அருகிலிருந்த சீடர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் குறித்துக்காட்டும் உருவகங்களாகவே இருக்கின்றனர் இரு பார்வையற்ற நபர்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழங்கப்பட்டுள்ள நிகழ்வில், 'ஏதாவது தெரிகிறதா?' என்று இயேசு பார்வையற்ற நபரிடம் கேட்கின்றார். 'மனிதர்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால், நடக்கிறார்கள்' என்கிறார் பார்வையற்ற நபர்.

மாற்கு நற்செய்தியாளரின் இலக்கியத் திறம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மனித உள்ளத்தில் இருக்கின்ற ஆன்மிக இருளை, கடவுளைக் கண்டுகொள்ள இயலாத நிலையை இதைவிட வேறு எப்படியும் எழுதிவிட இயலாது. 

பார்வையற்ற நபர் பார்க்கிறார். ஆனால், அவருக்குத் தோன்றுவது வேறு மாதிரியாக இருக்கிறது. இயேசுவின் சீடர்களே இங்கே 'நடக்கும் மரங்கள் போல' இருக்கிறார்கள். ஏனெனில், இயேசு அந்த நபரைக் குணப்படுத்தும் நிகழ்வு ஊருக்கு வெளியே நடக்கிறது. நிகழ்வில் இயேசுவும் சீடர்களும் அந்த நபரும் மட்டுமே இருக்கின்றனர். ஆக, கண்கள் திறக்கப்பட்ட அவர் முதலில் சீடர்களைத்தான் பார்க்கின்றார். 

இயேசுவை ஆண்டவர் என்று கண்டுகொள்ளாத நபர்கள், அவர்மேல் நம்பிக்கை அறிக்கை செய்யாத நபர்கள் அனைவரும் நடக்கின்ற மரங்கள் என்பதை தன் குழுமத்தாருக்கு மிக அழகாக விளக்குகின்றார் மாற்கு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். யாக் 1:19-27), 'இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்' எனத் தன் குழுமத்திற்கு அறிவுறுத்துகின்றார் யாக்கோபு.

பாதி வழி வந்து மீதி வழி வர இயலாதவர்கள் நடமாடும் மரங்கள்போல இருக்கின்றது.

இயேசு அந்த நபரை மீண்டும் தொட்டு அவருக்குப் பார்வை அளிக்கின்றார்.

நம்மால் இயேசுவைக் காண இயலாதபோது, அல்லது அவரை முழுமையாகக் காண இயலாதபோது அவரின் தொடுதல் தேவைப்படுகின்றது.

அவர் தொட்டாலன்றி நாம் அவரைக் காண இயலாது.

அவரின் தொடுதல் நம் ஆன்மிக இருள் அகற்றுவதாக!


1 comment:

  1. புரிந்த பகுதிகளோடு புரியாத சில பகுதிகளையும் கொண்ட பதிவு.இயேசு இரு பார்வையற்றவர்களுக்குப் பார்வை தரும் விஷயம் ‘ சங்கடமான பகுதிகளின்’ தொடக்கத்திலும்,இறுதியிலும் வருவதாகச் சொல்லப்படுகிறது.இடைப்பட்ட நேரத்தில் இயேசு தன்னைப்பற்றிப் பேசிய யாதுமே சீடர்களுக்குப் புரியவில்லையெனில்,இருவர் பார்வை பெற்றதை மட்டும் புரிந்துகொண்டார்களா? தெரியவில்லை.இயேசு பார்வையற்றவரை முதல் முறை தொட்டபோது அவர் முழுப்பார்வை பெறாததற்குக் காரணம் ‘இயேசுவைப் புரிந்து கொள்ளாத சீடர்கள் மரங்களுக்குச் சமம்’ என்று புரியவைப்பதற்காகவே என்று தோன்றுகிறது. அதற்குப்பின் தொட்ட இரண்டாவது முறை பார்வை பெறுகிறார் அந்த மனிதன்.
    இந்தப் பகுதி நமக்கு எடுத்து வைப்பது….நாம் எப்படி அடுத்தவர்களின் கண்களுக்குத் தெரிகிறோம்? மனிதர்களாகவா இல்லை நடக்கும் மரங்களாகவா? நாம் சென்றடைய வேண்டிய கரையை அடையமுடியாதபோது என்ன செய்வது? நம் கண்களால் பார்க்க இயலாத இயேசுவை அவரின் தொடுதலின் மூலமாவது புரிந்து கொள்வதுவே. அவரின் தொடுதல் மட்டுமே நம் ஆன்மீக இருளகற்றி நம் வாழ்விற்கு ஒளியேற்றும். இயேசுவின் இரக்கமிகு பார்வையும்….நேசமிகு தொடுதலும் மட்டுமே நம்முடைய மரங்கள் நிலைமாற்றி மனிதநிலைக்கு மாற்றவல்லது என்று புரியவைக்கும் ஒரு பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete