இன்றைய (15 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 8:14-21)உங்களுக்குப் புரியவில்லையா?
இயேசுவின் சீடர்களின் கவனச் சிதறலைச் சுட்டிக்காட்டுகிறது இன்றைய நற்செய்திப் பகுதி. தேவையான அப்பங்களை அவர்கள் எடுத்துச் செல்ல மறக்கின்றனர். இந்த நேரத்தில் இயேசு அவர்களிடம் பரிசேயரது புளிப்பு மாவு பற்றி - உருவகமாக, அவர்களுடைய வெளிவேடம், இரட்டைத்தன்மை, வன்மம் பற்றி - கவனமாக இருக்குமாறு இயேசு அவர்களை எச்சரிக்கின்றார். ஆனால், அவர்களுடைய எண்ணமெல்லாம் வீட்டில் விட்டு வந்த அப்பத்தின் மேலேயே இருக்கிறது.
அப்பம் அளிக்கும் கடவுள் தன் அருகில் இருப்பதை மறந்துவிட்டு, தாங்கள் விட்டு வந்த அப்பத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் சீடர்கள். பாவம்! பரிதாபத்துக்குரியவர்கள்.
ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பலுகச் செய்தவர், ஏழு அப்பங்களை நான்காயிரம் பேருக்கு உண்ணக் கொடுத்தவர், ஒன்றுமில்லாத நிலையிலும் தங்களுக்கு உணவளிக்க வல்லவர் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். அல்லது அப்பங்கள் இருந்தால்தான் தங்கள் தலைவரால் பலுகச் செய்ய முடியும் என நினைத்தார்களோ என்னவோ!
இயேசுவின் செயல்களைக் கண்டும் அவரை இன்னார் என்று அறிந்துகொள்ள இயலவில்லை சீடர்களால்.
இந்த அறியாமைக்குக் காரணம் என்ன?
(அ) கடின உள்ளம்
மாற்கு நற்செய்தியின் இறுதியில் சீடர்களின் கடின உள்ளத்தைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. கடின உள்ளம் எதையும் எளிதாக நம்பிவிடாது.
(ஆ) முற்சார்பு எண்ணம்
இயேசுவின் எளிய பின்புலம், அல்லது அவர் என்றும் தங்களோடு இருப்பதால் எழுந்த நெருக்கம் ஆகியவை முற்சார்பு எண்ணங்களை உருவாக்கியிருக்கலாம்.
(இ) தன்மையச் சிந்தனை
எந்நேரமும் தங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களை நினைக்கவே மாட்டார்கள். அந்த நிலையில், இவர்கள் தங்கள் வேலை, தங்கள் அப்பத்துண்டுகள், தங்கள் உணவுப் பை என்று கவனமாக இருந்ததால் இயேசுவின்மேல் தங்கள் உள்ளத்தைப் பதிய வைக்க அவர்களால் இயலவில்லை.
கடவுளின் உடனிருப்பை நாம் இன்று எப்படி உணர்கிறோம்? அவரைப் பற்றிய என் புரிதல் என்ன?
முதல் வாசகத்தில் (யாக் 1:12-18), சோதனைகள் பற்றித் தன் குழுமத்திற்கு எழுதுகின்ற யாக்கோபு, நம் சொந்த நாட்டத்தினாலேயே நாம் சோதிக்கப்படுகிறோம் என்கிறார். தீய நாட்டம் மயக்கத்தையும், மயக்கம் பாவத்தையும் உருவாக்குகிறது.
மேலும், கடவுள் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல என்று அறிவுறுத்துகின்றார்.
சீடர்களின் எண்ணங்கள் நிழல் போல மாறிக்கொண்டே இருக்கின்றன. இதுவா? அதுவா? என்னும் அங்கலாய்ப்பில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள இயலாமல் நிற்கின்றனர்.
“கவனச்சிதறல்”…. இந்நாட்களில் அடிக்கடி பலரால் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. ‘இதுதான் தேவை’ என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் நுனிப்புல் மேய்வதால் வரும் விளைவே இந்தக் கவனச்சிதறல்.
ReplyDeleteஅப்பம் அளிக்கும் கடவுள் தங்கள் அருகில் இருப்பதை மறந்துவிட்டு,தாங்கள் விட்டுவந்த அப்பம் குறித்துக் கவலைப்படும் சீடர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.அவர்கள் மட்டுமா? நாமும் கூடத்தான்…பல நேரங்களில் நம் முன்னால் நடக்கும் நிதர்சனத்தை நம்ப மறுத்து, நமக்கு எது சாதகமோ அதற்கேற்றபடி வளைப்பதில்லையா நம் கனவுகளை? எது நடக்க வேண்டுமோ,அது கண்டிப்பாக நடக்கும்…இயேசுவின் உடனிருப்பு நம்மோடிருந்தால்! என்பதை நம்ப வேண்டும். நம்புபவர்களுக்கு மட்டுமே நலம் கிட்டும். எல்லாவற்றையுமே தோராயமாக நினைப்பதை…எதிர்பார்ப்பதை விட்டு விட்டு இதுதான் என் இறைவன்! இப்படித்தான் நான்! என்ற திண்ணமான உள்ளத்தைப் பற்றிக்கொள்வோம். நிறைவான வரமான நம் தந்தை, நம்மிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் நன்மைத்தனங்களுக்கு மட்டுமே காரணமானவர் என்பதை நம்புவோம்….அவரிடமே சரண்டைவோம்.
கடவுள் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல; அவர் நின்றாளும் ‘சூரியன்’ என்ற உண்மையை உரக்கச்சொல்லும் ஒரு உண்மைக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!