Saturday, February 26, 2022

நற்கனிகள் அறிதலும் தருதலும்

ஆண்டின் பொதுக்காலம் 8ஆம் ஞாயிறு

I. சீராக்கின் ஞானம் 27:4-7 II. 1 கொரிந்தியர் 15:54-56 III. லூக்கா 6:39-45

நற்கனிகள் அறிதலும் தருதலும்

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற ஆடம்பரப் பயணிகள் கப்பல் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். 'கடவுளால் கூட இக்கப்பலைக் கவிழ்க்க முடியாது' என்று விளம்பரம் செய்யப்பட்டு, 1912ல் தன் முதல் சேவையைத் துவக்கியது இக்கப்பல். உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலும் இதுவே. இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நியுயார்க் நகர் நோக்கிச் சென்ற இக்கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் இரவு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதி, மோதிய 3 மணி நேரங்களில் முழுவதுமாகக் கடலில் மூழ்கியது. கப்பலின் கேப்டன் எவ்வளவோ முயன்றும் கப்பலைப் பனிப்பாறையின்மேல் மோதவிடாமல் தடுக்க முடியவில்லை என்பதுதான் சோகம். கடலில் தெரிந்த பனிப்பாறை கடலுக்கு மேல் நீட்டிக்கொண்டிருந்த அளவை மட்டும் வைத்து பனிப்பாறையின் கனத்தை குறைவாக மதிப்பிட்டதால்தான் இந்த ஆபத்து நேரிட்டது. வெறும் 5 சதவிகத பனிப்பாறை மட்டுமே கடலின் மேற்புரத்தில் தெரிய, மீதி 95 சதவிகிதம் கடலுக்கு அடியில் மூழ்கி மிதந்துகொண்டிருக்கும். வெளியில் தெரியும் சிறு பகுதியை மட்டும் வைத்து ஒட்டுமொத்த பனிப்பாறையின் அளவை ஊகிப்பது தவறு. அதே வேளையில், பனிப்பாறையின் இருப்பை இந்த நுனிப்பகுதி காட்டுகிறது என்பதை அறியாமல் அதன் இருப்பைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறு.

இன்னொரு உருவகம். நம் தோட்டத்தில் இருக்கின்ற ஒரு மாமரம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாம்பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன என வைத்துக்கொள்வோம். மாம்பழம் என்ற கனியை மரத்தின் மற்ற பகுதிகளான கிளை, தண்டு, வேர் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கனியின் அமைப்பும் அளவும் மிகவும் சிறியது. ஆனால், அச்சிறிய கனியைக் கொண்டே நாம் அந்த மரத்தின் இயல்பைச் சொல்லிவிடலாம். அது இனிமையான கனி கொடுக்கும் மரமா அல்லது புளிக்கும் கனி கொடுக்கும் மரமா என்பதை நாம் சொல்வதற்கு அதன் கனியை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். யாரும் மரத்தின் இலை அல்லது தண்டைச் சாப்பிட்டுவிட்டு மரத்தை ஆய்வு செய்வதில்லை. கனி என்ற மரத்தின் சிறிய நீட்சி ஒட்டுமொத்த மரத்தின் இயல்பைச் சுட்டிக்காட்டுகிறது.

பனிப்பாறையின் நுனி மற்றும் மரத்தின் கனி இவை இரண்டிற்கும் இன்றைய இறைவாக்கு வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? வெறும் நுனியைக் கண்டு மொத்தத்தையும் அளந்துவிடாதே என எச்சரிக்கிறது இன்றைய முதல் வாசகம். வெறும் கனியைக் கண்டு ஒரு மரத்தின் இயல்பை அளவிடு என அறிவுறுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். மறைந்திருக்கும் நல் இயல்பு வெளியில் தெரியும் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுகிறது. நல்ல இயல்பிலிருந்தே நல்ல சொற்களும், நற்செயல்களும் வெளிவர முடியும். எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 27:4-7) இஸ்ரயேலின் பிந்தைய ஞானத் தொகுப்பான சீராக்கின் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஞானம் என்பது கடவுளின் கட்டளைகளுக்கும், நியமங்களுக்கும் கீழ்ப்படிவதன் கொடை எனப் பொதுவாக அறியப்பட்டாலும், ஞானம் மனித வாழ்வின் அன்றாட அறநெறி மற்றும் வாழ்வியல் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகவே அமைகிறது. உருவகங்கள், பழமொழிகள் என காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத மதிப்பீடுகளுக்கு மக்களை அழைத்துச் சென்றனர் ஞானியர். இவ்வகையில் ஏறக்குறைய கி.மு. 200ல் யேசு பென் எலயேசர் பென் சீராக் (காண். சீஞா 50:27) என்பவரால் எழுதப்பட்ட சீராக்கின் ஞானநூல் பல ஞானக் கோர்வைகளைப் பல்வேறு தலைப்புக்களில் தாங்கி நிற்கிறது. இஸ்ரயேல் மக்களின் சட்டநூல்கள் என்றழைக்கப்படுகின்ற முதல் ஐந்நூல்களில் உள்ள கருத்துக்களை எடுத்து அக்கருத்துக்களை அன்றாட வாழ்வில் செயல்முறைப்படுத்தும் வழிமுறைகளைத் தருகிறார் ஆசிரியர். 

அவ்வகையில் ஒரு மனிதரின் மறைந்திருக்கும் குணம் அல்லது இயல்பு எப்படி வெளிப்படும் என்பதை இரண்டு பழமொழிகள் வழியாக விளக்குகிறார் ஆசிரியர். முதல் பழமொழி: 'சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது. அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்து விடுகின்றது.' அதாவது, சலிக்கின்ற போது சல்லடையில் மேலே தங்குகின்ற உமி, அந்த அரிசியில் இவ்வளவு மாசு இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உமி குறைவாக இருந்தால் அரிசி கலப்படமற்றது என அறிகிறோம். அதுபோல, ஒரு மனிதர் பேசும்போது அவரிடம் எவ்வளவு மாசு இருக்கிறது என்பதை அவரிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் காட்டிவிடுகின்றன. ஆக, பேச்சும் மாசுள்ளதாக இருக்கலாம். பேசுபவரின் உள்ளமும் மாசுள்ளதாக இருக்கலாம். எனவே, வார்த்தைகளைப் பற்றிய அக்கறையும், வார்த்தை வெளிவரும் உள்ளம் பற்றிய அக்கறையும் அவசியம். இரண்டாவது பழமொழி: 'குயவரின் கலன்களை சூளை பரிசோதிக்கிறது. மனிதரை உரையாடல் பரிசோதிக்கிறது.' மண்பானை செய்கின்ற குயவன் எப்படிப்பட்ட மண்ணைப் பயன்படுத்தினான், எப்படிப் பிசைந்தான், எவ்வளவு நீர் ஊற்றினான், எப்படி சக்கரத்தில் சுற்றினான் என்னும் அவனுடைய கைப்பக்குவத்தை நெருப்பு பரிசோதிக்கும். அதுபோல, மனிதர் எப்படிப்பட்டவர்; என்பதை அவருடைய உரையாடலை வைத்து மற்றவர்கள் பரிசோதிப்பர். நெருப்பில் இடும் போது கீறல் விடாத பானை நல்ல பானை என அறியப்படுவது போல, ஒரு மனிதர் நல்லவர் என்பதை அவருடைய உரையாடல் வழியாக நாம் கண்டுகொள்கிறோம். தொடர்ந்து, 'ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே. பேச்சைக் கொண்டே அவரை அறிந்துகொள்ளலாம்' என எச்சரிக்கிறார் ஆசிரியர். ஒருவருடைய உரையாடலைக் கேட்குமுன்பே, அவனுடைய வெளி அலங்காரத்தை வைத்து அவரைப் புகழ வேண்டாம் என்றும், பார்ப்பதற்கு பகட்டாக இருக்கும் அவர் பேசுவது மடமையாக இருக்கலாம் என்பதும் இதன் பொருள்.

ஆக, ஒருவரின் நாணயம், நற்குணம், நல்மதிப்பீடு ஆகியவை வெளிப்புற அடையாளங்களால் அறிந்துகொள்ளப்பட முடியாதவை. மாறாக, அவர் பேசும் சொற்கள் அவருடைய மூளையின், உள்ளத்தின் நீட்சியாக இருக்க, அவற்றை வைத்து நாம் அவரின் நாணயத்தையும், நற்குணத்தையும், நல்மதிப்பீட்டையும் அறிந்துகொள்ளலாம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 15:54-58) இறந்தோர் உயிர்ப்பு பற்றிய பவுலின் வாதம் நிறைவுக்கு வருகிறது. எசா 25:8 மற்றும் ஆமோ 13:14 என்னும் இறைவாக்குகளின் பின்புலத்தில், 'சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?' என்று அக்களிக்கிறார் பவுல். பவுலின் பார்வையில் கிறிஸ்துவின் உயிர்ப்பு இறந்தோர் அனைவருக்கும் கிடைத்த கொடை. ஏனெனில், கிறிஸ்துவில் இறந்தோர் அனைவரும் கிறிஸ்துவில் உயிர்ப்பர். கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இறவாமையைப் பெற்றுத் தருகிறது. தொடர்ந்து பவுல், 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி' என்கிறார். 

இதன் பின்புலத்தில் உயிர்ப்பு பற்றிய உரையை நிறைவு செய்கிற பவுல், நிறைவாக கொரிந்து நகரச் சபைக்கு அறிவுரையும் வழங்குகின்றார்: 'உறுதியோடு இருங்கள். நிலையாய் இருங்கள். ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.' நாம் இறந்தவுடன்தான் எல்லாம் ஒன்றிமில்லாமல் போய்விடுகிறதே. அப்புறம் எதற்கு உழைக்க வேண்டும்? எனச் சிலர் கேள்வி எழுப்பியதன் பின்புலத்தில், 'நீங்கள் உழைப்பது வீண்போகாது' என்கிறார் பவுல். ஆக, இவ்வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் உயிர்ப்பின் கனிகளாகக் கனிகின்றன. இச்செயல்களை நிறுத்தும்போது நாம் கனிகளையும் நிறுத்துவிட வாய்ப்புண்டு. கனிகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து நம் வேலைகளைச் செய்ய வேண்டும்.

ஆக, இவ்வுலக வாழ்வு என்பது ஒரு மரம் போன்றது என்றால், அம்மரத்திற்காக நாம் செய்யும் உழைப்பு மறு உலகில் கனியாக நீளும். அக்கனிகள் இனிமையாக இருக்க வேண்டுமென்றால், நான் என் வாழ்க்கை என்ற மரத்தின் இயல்பை இனிமையானதாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நான் உழைக்க வேண்டும். என் நம்பிக்கையில் உறுதியாகவும் நிலைத்தும் இருத்தல் வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 6:39-45) ஒருவரின் நாணயம், நற்குணம், மற்றும் நன்மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்றும், அது எப்படி கனியாக சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும் என்பதை மூன்று உருவகங்கள் வழியாகப் பதிவு செய்கிறது. முதலில், 'பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற மற்றவருக்கு வழிகாட்டுவது' - இது முதலில் சீடர்களுக்கான போதனையாக இருக்கிறது. இயேசுவின் சீடர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கு முன்பாக, தாங்கள் முதலில் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வது அவசியம். தங்களிலேயே நற்செயல் அல்லது நற்சொல் இல்லாத ஒருவர் அவற்றை மற்றவருக்குக் கொடுக்க முடியாது. இரண்டாவதாக, 'ஒருவர் தன் கண்ணில் இருக்கும் கட்டையைப் பார்க்காமல் மற்றவரின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கக் கைநீட்டுவது.' இதுவும், சீடர்கள் மத்தியில் இருந்த ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் தன் குறையைக் கண்டுகொள்ளாமல் அடுத்தவரின் குறையைப் பெரிதுபடுத்தியிருக்கலாம். இயேசு இந்த வெளிவேடத்தைக் கண்டித்து, தன் சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களையே தன்னாய்வு செய்து பார்க்க அழைக்கின்றார். இப்படித் தன்னாய்வு செய்யும்போது ஒருவர் தன் மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்ய முடியும். அப்படிச் செய்யாதபோது அவர் வளர முடியாமல் போய்விடும். மேலும், தன் கண்ணையே ஒரு கட்டை மறைப்பதால் அடுத்தவருக்கு உதவி செய்வது தொந்தரவிலும் முடியலாம். மூன்றாவதாக, 'கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை. நல்ல கனி தரும் கெட்ட மரமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்.' ஒருவர் நீண்ட காலம் நடிக்கவும், ஏமாற்றவும் முடியாது. ஏனெனில், அவரின் செயல்களே அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் என எச்சரிக்கிறார் இயேசு. பொய்மை நீண்ட காலத்திற்கு உண்மை என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வலம் வர முடியாது. மேலும், 'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்' என்று சொல்வதன் வழியாக ஒருவரை அவருடைய சொல் காட்டிக்கொடுத்துவிடும் என்கிறார் இயேசு.

இயேசுவின் இம்மூன்று உருவகங்களுமே சீடத்துவத்தை மையமாக வைத்திருக்கின்றன. இயேசுவின் சீடர் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும், வெளிவேடமின்றி தன்னையே ஆய்வு செய்து பார்க்க வேண்டும், அடுத்தவருக்கு வழி காட்டுவதற்கு முன் தன்னையும், தன் வழியையும் அறிந்திருக்க வேண்டும், தன் வாழ்வில் உள்ள இரட்டைத்தன்மை அகற்ற வேண்டும்.

ஆக, ஒருவரின் உள்ளியல்பு அவரின் வழிகாட்டுதல், குற்றங்கடிதல், மற்றும் உரையாடுதல் ஆகியவற்றில் வெளிப்பட்டுவிடும் என்பதால் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இவ்வாறாக, எளிய பழமொழிகள் மற்றும் உருவகங்கள் வழியாக சீராக்கும் இயேசுவும், 'ஒரு மனிதரின் உண்மையான குணம் அல்லது இயல்பும் அவருடைய உள்ளத்தின் பண்பாடும் அவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது' என்றும், பவுல், 'நல்ல செயல்கள் வழியாக உயிர்ப்பின் நற்கனிகளை அனுபவிக்க முடியம்' என்றும் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.

நாணயத்தின், நற்குணத்தின் நற்கனிகள் தருவது எப்படி?

1. நல்ல உளப்பாங்கு கொண்டிருத்தல்

ஆங்கிலத்தில், 'ஆட்டிட்யூட்' என்று சொல்கிறோம். இன்று, ஒருவரின் நேர்காணலில் அவரின் சொற்கள் மற்றும் செயல்களைவிட, இந்த 'ஆட்டிட்யூட்' தான் அதிகாக ஆய்வு செய்யப்படுகிறது. இன்றைய நற்செய்தி வாசகம் நான்கு வகை உளப்பாங்கை எடுத்துக்காட்டி, முதல் மூன்று வகை உளப்பாங்கை விட்டுவிடவும், நான்காவதைப் பற்றிக்கொள்ளவும் அழைக்கிறது. (அ) கெட்ட கனி தரும் மரம் - 'கெட்ட கனியால் யாருக்கும் பலன் இல்லை. கெட்ட கனிகள் விஷமாக மற்றவர்களைக் கொல்லும் ஆற்றல் பெற்றவை' – இம்மரம் இயல்பிலேயே கெடுதல் செய்வதாக இருக்கிறது. இவ்வகை மரம் தீங்கையே உருவாக்குவதால், காலப்போக்கில் அதே தீங்கினால் தானும் அழிந்துவிடும். (ஆ) முட்செடிகள். முட்செடிகள் முள்கனிகளைத்தான் கொடுக்குமே தவிர அத்திப்பழங்களைக் கொடுக்காது. முட்செடிகள் போன்றவை அடுத்த மரங்களின் தண்ணீர் மற்றும் உரத்தை எடுத்துக்கொண்டாலும் இவை தங்கள் இயல்பிலேயே தொடர்ந்து இருப்பவை. இவை, என்னதான் பசுமையாக, செழுமையாக இருந்தாலும் இவற்றின் அருகில் யார் சென்றாலும் இவை அவர்களைக் காயப்படுத்திவிடுகின்றன. (இ) முட்புதர் – திராட்சைக் கனியை நாம் முட்புதரிலிருந்து பெற முடியாது. திராட்சை உயரமான பந்தலில் வளரக் கூடியது. ஆனால், முட்புதரோ தரையோடு தரையாக மண்டிக் கிடந்து, விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறிவிடும். புதருக்குள் மறைந்திருப்பது யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர்கள் தங்கள் எண்ணங்களை மிகவும் தாழ்வான எண்ணங்களாக வைத்துக்கொண்டு விஷம் தங்கும் இடமாக மாறிவிடுவர். மற்றும் (ஈ) நல்ல கருவூலம் - ஒவ்வொரு வீட்டின் பாதுகாப்பான இடம் கருவூலம். இங்கே மிகவும் மேன்மையானவற்றிற்கு மட்டுமே இடமுண்டு. நல்லவரின் உள்ளம் நல்ல கருவூலமாக இருக்கும். இதிலிருந்து வெளிப்படுபவை மதிப்பு மிக்கவையாகவும், மற்றவர்களுக்குப் பயன் தருவனவாகவும் இருக்கும். ஆக, என் உளப்பாங்கு நல்ல கருவூலமாக இருத்தல் வேண்டும்.

2. இனிய வார்த்தைகளைப் பேசுதல்

பேச்சு ஒரு கொடை. அதே வேளையில் அது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு. நம் வார்த்தைகளே நம் உலகத்தை உருவாக்குகின்றன. நம் பேச்சு நம்மைப் பல்லக்கிலும் ஏற்றும், பாழுங்கிணற்றிலும் தள்ளும். இன்று நாம் அரசியல் மற்றும் ஊடகங்களில் கேட்கின்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகளே. அவற்றால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அவ்வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் தொடர்பு இருப்பதில்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல வார்த்தைகள் வதந்திகளாகவும், பொய்களாகவும் இருக்கின்றன. இவற்றால் வீணான அச்சமும் குழப்பமும் உருவாகிறது. ஆனால், இவற்றிற்கு மாறாக நம் வார்த்தைகள் அடுத்தவரின் மேல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளாக இருத்தல் வேண்டும். ஆக, பொறுப்புணர்வோடு நாம் வார்த்தைகளைக் கையாள வேண்டும்.

3. உன் வார்த்தையே நீ

'உன் உள்ளத்தின் நிறைவே உன் பேச்சும்' என்று இயேசுவும் சொல்கின்றார். நம்மிடம் உள்ள நாணயம் மற்றும் நன்மதிப்பீட்டின் நீட்சியாக நம் வார்த்தைகள் இருக்க வேண்டும். எனக்கு நான் கொடுக்கும் வாக்குறுதிகள் மற்றும் அடுத்தவருக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளில் நான் உண்மையோடு இருக்க வேண்டும். ஆகையால்தான், ஒளவையார், 'கற்பு என்பது சொல் திறம்பாமை' என்கிறார். சொல்லும், செயலும், என் இயல்பும் ஒன்றாக இருத்தலே கற்பு, தூய்மை. என் வார்த்தைகளே நானே நம்பவில்லை என்னும் நிலை வரும்போது, அடுத்தவர்கள் என் வார்த்தைகளை எப்படி நம்புவார்கள்?

வார்த்தையும் வாழ்வும், கனியும் மரமும், இயல்பும் வெளிப்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதை அறிந்து செயல்படும் 'நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர். கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர் ... அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர். என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்' (திபா 92:12,14).

1 comment:

  1. ஆண்டின் பொதுக்காலம் 8ம் வாரத்திற்கான மறையுரை.”மறைந்திருக்கும் பனிப்பாறையின் தன்மை தெரியாமல் அதன் வெளியில் தெரிந்த நுனியைக்கொண்டே அப்பாறையின் தன்மையைக் கணக்கிட்ட மாலுமியின் செயல் தவறு என்று சொல்லும் நம் மனது, ஒரு மரத்தில் தெரிந்தும் தெரியாமலுமிருக்கும் அத்தனை பாகங்களையும் கணக்கில் கொள்ளாமல் நாம் உண்ணும் கனியை வைத்தே அம்மரத்தின் தன்மையைக் கனித்துவிடலாமென்று சொல்கிறது” எனப் புரிய வைக்கும் இன்றைய வாசகங்கள்.
    சல்லடையில் தேங்கி நிற்கும் உமியைக்கொண்டு அரிசியின்/ நெல்லின் தன்மையறிந்து கொள்ளலாம் என்பதற்கிணங்க, ஒரு மனிதனின் உண்மைத்தன்மையறிய அவன் வாய்திறந்து பேசும் வரைக்காத்திருக்க வேண்டும்; “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்பதற்கிணங்க அவன் வெளிப்பகட்டை வைத்து அவன் குணநலனை எடைபோடுவது தவறு எனக்கூறும் முதல் வாசகம்……
    மரத்திற்கு ஒப்பான இவ்வாழ்வில் நாம் செய்யும் அறச்செயல்களும், உழைப்புமே கனியாக மாறி நம் விண்ணுலக வாழ்விற்கு வித்திட வேண்டும் எனக்கூறும் இரண்டாம் வாசகம்….
    “கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனிதரும் கெட்ட மரமுமில்லை” என்பதற்கேற்ப நம் உள்ளத்தின் தன்மையே…எண்ணங்களே வாய்ச்சொற்களாக வெளிவருதலால் நல்லவற்றை சிந்தித்து அவற்றையே பேசவும்…. என் முன்னால் நிற்பவனை எடை போடுமுன் என்னையே தராசில் வைத்து என் குறை,நிறைகளை எடைபோடவும்,அடுத்தவருக்கு வழிகாட்டுமுன் தன் வழியை அறிந்திருக்கவும் வழி சொல்லும் நற்செய்தி வாசகம்….
    நம் மனமானது முட்புதர் மற்றும் முட்செடியாக இல்லாமல் ஒரு இல்லத்தின் பாதுகாப்புப் பெட்டகம் போல் இருக்கவும்….”கனியிருப்ப காய்கவர்ந்தற்று” எனும் வள்ளுவரின் வார்த்தைக்கிணங்க அடுத்தவரைக் குளிரவைக்கும் வார்த்தைகளையே நாம் பேசவும்….கற்புக்கிணையான என் சொல்லும்,செயலும் கைகோர்த்து நடைபோடும் ஒரு வாழ்க்கையை வாழவும்…அழைப்பு விடுக்கின்றன இன்றைய வாசகங்கள்.
    வார்த்தையும்- வாழ்வும், கனியும்- மரமும், இயல்பும்- வெளிப்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று அறிந்து செயல்படவும், அதன்மூலம் “ பேரீச்சை மரமென செழித்தோங்கவும்….கேதுருமரமெனத் தளைத்து வளரவும், முதிர்ந்த வயதிலும் கனி தரவும்,என்றும் செழுமையும்,பசுமையாகவும, இருக்கவும்” வழி சொல்லும் ஒரு மறையுரைக்காகத் தந்தைக்கு நன்றியும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete