தொட்ட அனைவரும்
மாற்கு நற்செய்தியாளருக்கு மிகவும் பிடித்த சொல் 'உடனே' என்பது. இச்சொல்லை '42' முறை பயன்படுத்துகின்றார். 'வேகம்,' 'எதிர்பார்ப்பு,' 'குறுக்கீடு,' 'பரபரப்பு' என பல எண்ணங்களை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது இச்சொல்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கெனசரேத்துப் பகுதியில் பலருக்கு நலம் தருகின்றார். 'அவர்கள் படகை விட்டு இறங்கிய உடனே மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுகொண்டு, ஓடிச்சென்று நலம்குன்றியவர்களை அவரிடம் அழைத்து வருகின்றனர்.' இயேசுவின் ஆடையையாகிலும் தொட விரும்புகின்றனர். தொட்ட அனைவரும் நலம் பெறுகின்றனர்.
என் அருள்பணி நிலைக்கு இந்நிகழ்வு மூன்று சவால்களை முன்வைக்கின்றது:
(அ) இன்னார் என்னும் நான்
பல இடங்களுக்கு மறையுரை மற்றும் கருத்தமர்வுகளுக்குச் செல்லும்போது, அழைத்தவர்கள் என்னை அறிமுகம் செய்யும் நிகழ்வு எனக்கு மிகவும் நெருடலாக இருக்கும். 'இவர்தான் இன்னார்' என்பதை நாம் பல நிலைகளில் அறிமுகம் செய்கின்றோம். பெயர், பணி, இருப்பிடம், படிப்பு, அறிமுகமான நபர்கள், எழுதிய நூல்கள் அல்லது கட்டுரைகள் ஆகியவை நம்மை இன்னார் என்று காட்டும் என நினைக்கின்றோம். ஆனால், இயேசுவுக்கு இப்படிப்பட்ட எந்த அறிமுகம் தேவையில்லை. அவரைக் கண்டவுடன், மக்கள் இயேசுவை இன்னாரென்று கண்டுணர்கின்றனர். இன்று என்னை என் மக்களுக்கு அறிமுகப்படுத்துவது எது?
(ஆ) தொடுமாறு அனுமதித்தல்
படகைவிட்டு இறங்கியதைத் தவிர வேறெதுவும் இயேசு செய்யவில்லை. எச்சொல்லும் பேசவில்லை. அனைவரும் வந்து அவர்மேல் விழுகின்றனர். அவரைத் தொட முயற்சி செய்கின்றனர். நலம் பெறுகின்றனர். இயேசு தன்னை மற்றவர்கள் தொடுமாறு அனுமதிக்கின்றார். குருமாணவராகப் பயிற்சியிலிருக்கும்போது கற்பிக்கப்படுகின்ற ஒன்று 'நோலி மே டான்ஜ்ஜரே' ('என்னைத் தொடாதே!') என்னும் விதிமுறை. அதாவது, ஒருவர் மற்றவருக்கு இடையேயுள்ள தனியுரிமையை மதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விதிமுறை. இது எங்களில் எந்த அளவுக்குப் பதிந்துவிடுகிறது என்றால், எங்களை அறியாமலேயே நாங்கள் அனைவரையும் விட்டு விலகி விடுகின்றோம். மக்களுடைய எந்தக் கவலையும் எங்களைப் பாதிப்பதில்லை. யாரும், எதுவும் எங்களைத் தொடுவதில்லை. இன்னொரு பக்கம், யாரும் எதுவும் எங்களைத் தொட முடியாது அல்லது தொடக்கூடாது என்று எங்களுக்கு நாங்களே பாதுகாப்பு அரண்களை உருவாக்குகிறோம். அல்லது பதவிகளில் அமர்கிறோம். மற்றவர்கள் என்னைத் தொட வேண்டும் என்றால் நான் அழுக்காவதற்குத் தயாராக இருக்க வேண்டும். எனக்கு அருகில் அவர்கள் வந்தால் என் அழுக்கும் குறையும் தெரிந்துவிடுமோ என்ற பயம் விட வேண்டும். நானும் மற்றவர்களைப் போல, மற்றவர்களில் ஒருவன் என்பதை உணர வேண்டும்.
(இ) நோக்கம் நிறைவேறுதல்
மக்கள் இயேசுவிடம் நலம்தேடி வருகின்றனர். நலம் பெற்றுத் திரும்புகின்றனர். அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறுகிறது. அருள்பணியாளரைத் தேடி வருகிறவர்கள் தங்கள் ஆன்மிகப் பசி நீங்கவும், ஆறுதல் பெறவும், ஆற்றுப்படுத்தப்படவும் வருகின்றனர். இப்படி வருகிறவர்களின் நோக்கத்தை நான் நிறைவேற்றுகிறேனா? இறைவார்த்தை கேட்க வந்தவர்கள் இறைவார்த்தை கேட்டுத் திரும்புகிறார்களா, அல்லது நான் சொல்லும் ஜோக்குகளைக் கேட்டுத் திரும்புகிறார்களா? ஆற்றுப்படுத்தப்படுமாறு வந்தவர்கள் ஆறுதல் பெற்றுச் செல்கிறார்களா, அல்லது அங்கலாய்ப்புடன் செல்கிறார்களா? என் இருத்தல் மற்றும் பணியின் நோக்கத்தை நான் ஒவ்வொரு நொடியும் நிறைவேற்றுதல் அவசியம்.
நிற்க.
இயேசுவைத் தேடி வந்த மக்களின் ஆர்வம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
'இயேசுவே, உன்னைக் காண நான் பசித்திருந்தேன்!' என்பது அவர்களின் உள்ளத்து வார்த்தைகளாகவும், வாழ்வியல் செயல்பாடாகவும் இருந்தன.
இறைவனை நோக்கிய என் தேடலின் வேகம் எப்படி உள்ளது?
இன்றைய முதல் வாசகத்தில் (1 அர 8), சாலமோன் அரசர் கட்டிய ஆலயத்திற்குள் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பேழை கொண்டுவரப்படுகிறது. ஆண்டவரின் மாட்சி ஆலயத்தை நிரப்புகின்றது. குருக்கள்கூட நின்று திருப்பணி செய்ய இயலாத அளவுக்கு மாட்சி நிறைந்ததாகப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.
'குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக!' என்று பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர் (132).
நான் எப்போதும் நீதியை ஆடையென அணிந்தால், என்னை முழுவதும் ஆண்டவரின் மாட்சி நிறைத்தால், என் தேடல் இறையாக இருந்தால் எத்துணை நலம்!
கெனசரேத் பகுதிக்கு வந்த இயேசு, படகை விட்டு இறங்கியதைத் தவிர வேறொன்றும் செய்யா நிலையிலும்,….அவரைத் தொட்ட அனைவரும் உடனே நலம் பெறுகின்றனர் என்பதை எடுத்து வைக்கும் ஒரு அழகான பதிவு. இங்கே குறிப்பிடலாமா என்று தெரியவில்லை.ஆனாலும் குறிப்பிடத்தோன்றுகிறது.” ஊரறிஞ்ச பாப்பானுக்குப் பூணூல் எதற்கு?” என்று பழமொழி உண்டு. இயேசுவானாலும் சரி…அவரின் வழிநடக்கும் அருட்பணியாளர்களாலும் சரி….அவர்களின் நல்ல செயல்களே அவர்களை அறிமுகம் செய்ய வேண்டுமேயொழிய, அவர்கள் பெயரின் பின்னே வரும் எழுத்துக்கள் அல்ல..அதுதான் நடந்துள்ளது இயேசுவின் விஷயத்தில்.பள்ளியைப் பார்த்திராத ஒரு தச்சனின் மகன் பலரைத் தன் வல்ல செயல்களால் புருவங்களைத் தூக்க வைக்கிறார்.இன்றைய அருட்பணியாளர்களிடம் இருப்பதாகத் தந்தை குறிப்பிடும் சில விஷயங்கள் களையப்பட வேண்டியவையே! ‘தன்னிடமும் குறையுள்ளது’ என்று உணரும்போதே ஒருவர் அதைத் தவிர்க்க ஆரம்பித்து விட்டார் என்பது நம் அனுபவம் கற்றுத்தரும் பாடம்.
ReplyDelete“இயேசுவே உன்னைக் காண நான் பசித்திருந்தேன்” என்பது நம் செயல்பாடாக இருக்கும் பட்சத்தில் ….குருக்களும் நீதியை ஆடையென அணிய முடியும்…..நம்மையும், நாம் நுழையும் ஆலயங்களையும் ஆண்டவரின் மாட்சி நிறைக்கும்… என் தேடலும் இறையாக இருக்கும்.
மாற்கு நற்செய்தியாளரால் 42 முறை பயன்படுத்தப்பட்ட “உடனே” என்ற சொல்லின் சில அர்த்தங்களைத் தந்ததையும் தாண்டி, “ அவரைத் தொட்ட யாவரும் நலமடைந்தனர்” எனும் positivity கொண்ட அழகான தலைப்பிற்காகவும் தந்தைக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!!