Thursday, February 3, 2022

புனித அருளானந்தர்

இன்றைய (4 பிப்ரவரி 2022) திருநாள் 

புனித அருளானந்தர்

மறவ நாட்டு மாணிக்கம், செம்மண் புனிதர் என அன்போடு அழைக்கப்படும் புனித அருளானந்தரின் (ஜான் தெ பிரிட்டோ) திருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இயேசு சபையின் மதுரை மிஷன் களப்பணியின் முக்கியமான மறைசாட்சி இவர். 

1693ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பாம்பாற்றங்கரையில் உள்ள ஓரியூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றார். பிப்ரவரி 3ஆம் தேதி சிறையில் தன் தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதுகின்றார்:

'கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய ஓரியூர் தடியத்தேவனிடம் அனுப்பி வைத்தனர். கால தாமதமின்றி என்னைக் கொன்று விடுமாறு அவனுக்கு இரகசிய உத்தரவும் அனுப்பப்பட்டது. இங்கு நான் ஜனவரி 31ஆம் தேதி வந்துசேர்ந்தேன். பொறுமையின்றி நான் மரணத்தை எதிர்நோக்கி இருக்கின்றேன். அதுவே என்னுடைய இலட்சியத்தை நிலைநிறுத்தக் கூடியது. இதுவரை நான் செய்துவந்த வேலைக்குக் கைம்மாறாக என் உயிரைத் தியாகம் செய்யக்கூடிய பொன்னான சந்தர்ப்பம் இப்போது வந்துவிட்டது.'

இந்த எழுத்துகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சோகம் அதிகம். தன் தலை வெட்டப்படுவதற்காக அவர் குனிந்தபோது அவருடைய உள்ளத்தில் எழுந்த உணர்வு என்னவாக இருந்திருக்கும்! தன் நாட்டின் பாதுகாப்பு, உறவினரின் உடனிருப்பு, பணி என அனைத்தையும் துறந்துவிட்டு, இந்த மண்மேட்டில் முழந்தாள்படியிட்டுக் கிடக்க அவரால் எப்படி முடிந்தது?

தனக்கு ஜான் என்னும் பெயர் கொடுக்கப்பட்டதால் என்னவோ, திருமுழுக்கு யோவான் போலவே வாழவும் இறக்கவும் செய்கின்றார். 

மறைக்காகவும் கடவுளுக்காகவும் துன்புறுதல் சரியா? என்ற கேள்வியை இன்றைய உலகியல்சார் அறிவுலகம் எழுப்புகின்றது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 12:24-26), 'கோதுமை மணி பற்றிய உருவகத்தை' முன்மொழிகின்ற இயேசு, 'தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவார்' எனச் சொல்கின்றார். அதாவது, நம் வாழ்வு நம்மை நோக்கியதாக இருந்தால், வாழ்வின் மதிப்பை அது குறைக்கிறது.

புனித அருளானந்தர், தன் கடவுளுக்காகவும் தன் மக்களுக்காகவும் என வாழ்ந்ததால் அவர் தன் வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்.


1 comment:

  1. “மறவநாட்டு மாணிக்கம்” என அழைக்கப்படும் “புனித அருளானந்தர்” ….ஒரு புனிதர் என்பதையும் தாண்டி அந்தப் பகுதியின் அனைத்துக் குடும்பங்களிலும் ஒருவராக….பாதுகாவலராகக் கருதப்படுபவர்.கிறித்துவ மறைக்கு சாட்சியாக நின்ற அவர், தன் உயிரிழப்பை….தியாகத்தைப் பொன்னான சந்தர்ப்பம் என்கிறார்.படங்களில் வளைந்த முதுகோடு குனிந்து, தான் கொலைசெய்யப்பட அவர் தன்னையே கையளிக்கும் காட்சி நம்மை உறையச்செய்பவை. ‘இறைவனுக்காகவும்,தன் மக்களுக்காகவும் தம் வாழ்வைத்தரத் துணிவோர் இறப்பிலும் வாழ்வர்’ என்பதற்குப் புனித அருளானந்தர் ஒரு எடுத்துக்காட்டு.
    எங்கள் அன்பியத்தின் பாதுகாவலர் புனித அருளானந்தர் என்பதையும் தாண்டி எனக்கு இன்னும் நெருக்கமானவர்.சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளின் காதுகுத்து மற்றும் முடிஇறக்குதல் போன்ற சுப காரியங்களைப், புனித அருளானந்தர் தன் உயிரை ஈந்த ஓரியூரில் நடத்துவதுண்டு.அதில் நானும் ஒருத்தி என்பது எனக்குக் கூடுதல் பெருமை. அவர் குருதி படிந்த அவ்வூர் மண் சிவப்பாய் மாறியதும்…அந்த மண்ணை இன்னும் பல குடும்பங்கள் தங்கள் இல்லங்களில் புனிதப் பொருளாய் போற்றிக்காப்பதும் கூடுதல் பெருமை.இவரின் பெயரைக் கொண்ட அனைத்து மக்களுக்கும், இவர் பெயரைத் தாங்கி நிற்கும் அனைத்து நிறுவனங்களைச்சார்ந்தவர்களுக்கும், இயேசு சபை குருக்களுக்கும், இந்த அழகான பெருமை மிகு பதிவைத் தந்த தந்தைக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!!!


    ReplyDelete