Thursday, February 17, 2022

பின்பற்ற விரும்பும் எவரும்

இன்றைய (18 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 8:34-9:1)

பின்பற்ற விரும்பும் எவரும்

இயேசுவைப் பின்பற்றுவதற்கான அழைப்பு நற்செய்தி நூல்களில் இரு நிலைகளில் வழங்கப்படுகிறது: (அ) சிலரை இயேசு தாமே விரும்பி அழைக்கின்றார். (ஆ) தன்னை எல்லாரும் பின்பற்றலாம் என்ற திறந்த அழைப்பை விடுக்கின்றார். 

தன்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் ... எனத் தொடர்கின்ற இயேசு அதற்கான செக்லிஸ்டை முன்மொழிகின்றார்: ஒன்று, தன்னலம் துறக்க வேண்டும், தம் சிலுவையைத் தூக்க வேண்டும். செக்லிஸ்ட் சிறியதாக இருந்தாலும் பொறுப்பு என்னவோ அதிகமாகவே இருக்கிறது. 

ஒரு நிறுவனம் தனக்கான பணியாளர்களைத் தெரிவு செய்யும்போது நிறைய ஈர்ப்புகளை முன்வைக்கும். சம்பளம், வெகுமதி, விடுமுறை நாள்கள், கணினி, செயல்திறன்பேசி என நிறையவற்றை முன்மொழிந்து, பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்வர். ஆனால், இயேசு இப்படிப்பட்ட எந்த ஈர்ப்புகளையும் முன்மொழியவில்லை.

தன்னலம் துறத்தல் என்றால் என்ன?

நம் உடல் இயல்பாகவே தன்னலத்திற்குப் பழக்கப்பட்டது. ஆபத்துக்காலத்தில் நம் உடல் தன்னைத் தற்காத்துக் கொள்ளவே விரும்புகிறது. உடலின் செயல்பாடுகள் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நாம் மாற்ற இயலாது. எடுத்துக்காட்டாக, நான் ஒரு குச்சியை எடுத்து உங்கள் கண்ணருகில் வேகமாகக் கொண்டு வந்தால் கண் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இந்த அனிச்சை செயல் வழியாக உடல் தன் உறுப்புகளைத் தற்காத்துக்கொள்கிறது. முற்றும் துறந்த முனிவரின் கண்முன் குச்சியை நீட்டினாலும் அவருடைய கண்ணும் மூடிக்கொள்ளவே செய்யும். ஆக, உடல்சார் தன்னலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. காலையில் எழுந்தவுடன் கழிவு அகற்றுதல், நண்பகலில் பசித்தல், இரவில் தூங்குதல் என்பதன் வழியாக உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. இந்தச் சுழற்சியிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது.இதை யாரும் துறக்க முடியாது.

அறிவுசார் அல்லது மனம்சார் தன்னலம் என்பதையே துறக்க வேண்டும். அதாவது, 'எல்லாரும் என்னை நோக்கி,' 'எல்லாரும் எனக்காக', 'எல்லாம் எனக்காக' என்னும் ஆசையில் தோன்றும் தன்னலம் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய தன்னலம் நம்மைச் சிறைப்பிடிக்கிறது. 

தன் சிலுவை சுமத்தல்

இது செக்லிஸ்டின் இரண்டாவது பண்பு. சிலுவை சுமத்தல் என்பது துன்பம் ஏற்றல். தன்னலம் இயல்பாகவே துன்பம் ஒதுக்குகிறது. தன்னலம் துறக்கும்போது நாம் இயல்பாகவே துன்பம் ஏற்கத் தொடங்குகிறோம். ஏனெனில், தன்னலத்தை விடுப்பதே பெரிய துன்பம்.

அய்ன் ரேன்ட் அவர்கள் எழுதிய, 'தெ வெர்ச்யூ ஆஃப் செல்பிஷ்னெஸ்' தத்துவஇயல் நூல், 'தன்னலத்தை' ஒரு முதன்மையான மதிப்பீடாக முன்வைக்கின்றது. நாம் செய்யும் பெரிய பிறர்நலப் பணியில்கூட தன்னலமே ஒழிந்திருக்கிறது. தாயின் அன்பு, குழந்தையின் அன்பு போன்ற சிலவற்றை நாம் இந்த லிஸ்டில் இருந்து அகற்றலாம். 

என் மனச்சுதந்திரம் அல்லது கட்டின்மை எப்போதும் முதன்மையான தெரிவாக இருக்க வேண்டும்.

முதல் வாசகத்தில், புனித யாக்கோபு, தன் குழுமத்தில் உள்ளவர்களிடம் நம்பிக்கையும் செயலும் இணைந்து செல்ல வேண்டும் எனக் கற்பிக்கின்றார். நம்பிக்கை செயல்களில் கனியும்போது தன்னலம் மறைகிறது.

1 comment:

  1. யாரும் எளிதாக வாழ்வின் இலக்கணமாகக் கொள்ள வேண்டிய பண்புகளைச் சுமந்து வரும் ஒரு பதிவு.ஒரு சிலரைத் தானே தெரிவு செய்திருப்பினும்,அவரிடம் வரத்துடிக்கும் எவருக்கும் எந்த வேலியும் போடவில்லை இயேசு.அதேசமயம் தன்னைப்பின்பற்ற விரும்பும் எவரும் தன் தன்னலம் துறப்பது மட்டுமின்றித் தன் சிலுவையையும் சுமந்தேயாக வேண்டுமென்கிறார். கேட்பதற்கு இரண்டுமே கடினம்தான். இதில் தன்னலம் என்பது இயற்கையே நமக்கு அளித்திருப்பது…பல சமயங்களில் நம் உடலின் தற்காப்பிற்காக, “ அனிச்சை செயல்” எனும் வடிவில். ஆனால் ‘நான்’, ‘எனது’, ‘ எனக்கு’ என்பதை முன்வைக்கும் அறிவுசார் அல்லது மனம் சார் தன்னலத்தைத் துறந்தே ஆகவேண்டும் என்கிறார்….சாய்ஸ் என்ற ஒன்று கொடுக்காமலே.
    ‘ சிலுவை சுமத்தல்’…பல சமயங்களில் நமக்குள் நுழையும் நெருடல்களையும்,கையறு நிலையையும் நினைத்துப் பார்க்கையில், உண்மையான ஒரு மரச்சிலுவையை சும்ப்பதே எளிது எனும் எண்ணம் நம் தன்னிரக்கத்தைக் கூட்ட வைக்கும்.தன்னிரக்கத்தைப் பெற்றெடுப்பதும் கூட தன்னலமே! மற்றவர்களிடம் நாம் காட்டும் அன்பே தன்னலமாக இருக்கலாமெனில் உண்மையிலேயே நம்மீது நாம் காட்டும் அன்பை என்னவென்று சொல்வது? தன்னலத்தை நம்மிடமிருந்து அறவே அகற்ற நம்மைச் சுற்றியிருப்பவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும்….அந்த நம்பிக்கையின் விளைவாக கனியும் செயல்களுமே முதன்மை பெற வேண்டுமென எடுத்து வைக்கும் ஒரு பதிவு. ஐயோ!சிலுவையா? அதைத்தூக்குவதா? எப்படி இயலும்? எனும் கேள்விகளைப் புறந்தள்ளி, ‘அன்பு’ இருக்கும் இடத்தில் எல்லாமே இயலும் என்ற செய்திக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete