Thursday, September 30, 2021

உனக்குக் கேடு!

இன்றைய (1 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 10:13-16)

உனக்குக் கேடு!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, திருந்த மறுத்த நகரங்களைச் சாடுகின்றார். அதாவது, கடவுளின் இரக்கத்தைப் பதிவு செய்யும் இளைய மகன் எடுத்துக்காட்டை எழுதுகின்ற லூக்காதான், நாம் மனம் மாறாவிட்டால் கடவுள் நம்மைத் தண்டிப்பார் என்றும் எச்சரிக்கின்றார். கண்டிக்கும் முகம் ஆணுடைய முகம். 


கடவுளின் கண்டிக்கின்ற, ஆண் முகத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. 

இயேசு, இன்றைய நற்செய்தி வாசகத்தில், தான் பணியாற்றித் திருந்த மறுத்த நகரங்களைச் சபிக்கின்றார். இயேசுவின் சாபம் அல்லது நிந்தனை மனமாற்றத்திற்கான அழைப்பாக அமைகின்றது. இந்த நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

செயல்களால் பதிலிறுப்பு

இறைவனின் செய்தியைக் கேட்கின்றவர்கள் அதற்கேற்ற பதிலிறுப்பு செய்ய வேண்டும். அல்லது அது வெற்றுக் குரலாக மாறிவிடும். இயேசுவின் சமகாலத்தவர் இயேசுவின் போதனையைக் கேட்டதோடு, அவருடைய வல்ல செயல்களையும் கண்டனர். ஆனால், அவர்கள் இயேசுவை இறைமகன் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை நம்பவில்லை. ஆகையால், அவர்கள் சாபத்திற்கு உள்ளாகின்றனர். (ஆனால், இன்றைய பெண்முக இறையியல் இயேசு விடுகின்ற சாபத்தையும் சமரசம் செய்கிறது. இது ஓர் இலக்கியக் கூறு என்றும், இது பிற்காலத்தில் எழுதப்பட்ட பகுதி என்றும் சொல்கிறது). 

செயல்களால் பதிலிறுப்பு செய்வது மிகவும் அவசியம்.

இன்றைய முதல் வாசகத்தில், பாரூக்கு நூலின் ஆசிரியர், தாங்கள் செய்த தவறுகளை எண்ணிப்பார்த்து மனம் வருந்துகின்றார். தாங்கள் அடைந்த துன்பங்களுக்குக் காரணம் தங்களுடைய தீமையே என்கிறார் பாரூக்கு. கடவுள் அறிவித்த கேடுகளும் சாபங்களும் தங்களுக்கு வரக் காரணம் தங்களுடைய செயல்களே என ஏற்றுக்கொள்கின்றார் பாரூக்கு. இதன் வழியாக, மனமாற்றத்திற்கும், தீPங்கற்ற நல்வாழ்வுக்கும் மக்களை அழைக்கின்றார். ஆனால், 'கடவுளின் இரக்கம் நம்மை மீட்டது' என்று அவர் சொல்லத் தொடங்கினால், மக்கள் தங்கள் தீமையிலேயே தொடர்ந்து இருப்பார்கள்.

இன்று, மௌனப் புன்னகையாள், சின்னராணி என அழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரசாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். தன் இறைவேண்டலால் மறைபோதகப் பணிகளுக்குத் துணைநின்றதால் மறைபரப்பின் பாதுகாவலர் என்றும், திருஅவையின் ஆசிரியர் என்றும் அழைக்கப்படுகின்றார் இப்புனிதை. இவர் மொழிந்த 'சின்ன வழி' மிகப் பெரிய தாக்கத்தை ஆன்மிகத்தில் ஏற்படுத்தியது. ஆக, ஆன்மிகம் என்னும் மலையில் ஏறி சின்னச் சின்ன எட்டுகளே போதும். 'சின்ன வழி என்றால் பற்றுறுதி மற்றும் சரணாகதியின் வழி' என்கிறார் சின்னராணி. மிகப் பெரிய அடிகள் எடுத்து வைக்கும் வளர்ந்த ஆண் மற்றும் பெண்ணாக வலம் வரும் நாம், கொஞ்சம் சிறிய அடிகள் எடுத்து வைக்கப் பழகுதலும் நலம்.


3 comments:

  1. தந்தையின் குழப்பம் நம்மையும் சேர்த்தே குழப்புவதில் வியப்பில்லை! ஆண்முக இறையியல்…பெண் முக இறையியல்….எல்லாம் புதிதாக இருக்கின்றன. என் மீட்பை நான் உறுதியாக்க “என் இறைவன் என் தந்தை” என்ற எளிய விசுவாசமே எனக்குப் போதும் என்று நினைப்பவள் நான்! ஆண்கள்…பெண்கள் இருபாலருக்குள்ளும் நாம் பார்த்து வியப்படையும் குணாதிசயங்களும், வெறுத்து ஓரங்கட்ட வேண்டிய விஷயங்களும் உள்ளன. எதுவும்,யாருக்கும் பொதுவானதல்ல.
    இதில் ஆறுதலான விஷயம் “ நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நாம் செய்த தீமையே காரணம்” எனும் பாரூக்கின் வரிகளும், நம் சின்ன ராணி புனித குழந்தை தெரசாவின் “நாம் ஆன்மீகம் என்னும் மலையில் ஏறச் சின்ன சின்ன எட்டுக்களே போதும்” எனும் வரிகளுமே!
    விவிலியத்தின் அத்தனை நுணுக்கங்களையும் கரைத்துக் குடித்துள்ள தந்தையின் வரிகள் இன்னும் மழைலையர் பள்ளியை விட்டுத் தாண்டாத எனக்குப் புரியவில்லை என்பது வியப்பல்ல. தந்தை என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்! தந்தையின் எழுத்திற்குப் பின்னே தெரியும் பெரு முயற்சிக்கு என் பாராட்டும்! நன்றியும்!!!

    ReplyDelete
  2. We are deceiving people when we talk of mercy without knowing what the word means. The Lord forgives sins, but only if we repent of them - Cardinal Sarah

    ReplyDelete