Friday, October 1, 2021

புனித காவல்தூதர்கள்

இன்றைய (2 அக்டோபர் 2021) திருநாள்

புனித காவல்தூதர்கள்

'குழந்தைகளை வளர்க்க தந்தையர்கள் போதவில்லை. ஆகையால்தான், கடவுள் ஞானத்தந்தையர்களை வழங்குகிறார்' என்பது மரபுவழி வாக்கியம். மனிதர்கள் தங்களைக் காத்துக்கொள்ள இயலாதவர்கள். எனவே, கடவுள் காவல்தூதர்களை நியமித்துள்ளார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு, 'தூதர்' என்னும் வார்த்தையை மையமாக வைத்துச் சுழல்கிறது. முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் மோசேயுடன் வழிநடக்க தன் தூதர்களை அனுப்புகின்றார். அவர்கள் மக்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்து அவர்கள் தங்கள் இலக்கை அடைய உதவி செய்கின்றனர். நற்செய்தி வாசகத்தில், 'இவர்களது வானதூதர்கள் என் தந்தையின் திருமுன் எப்போதும் இருக்கிறார்கள்' என்று எச்சரித்து, குழந்தைகளுக்கு யாரும் இடறலாக இருத்தல் கூடாது என அறிவுறுத்துகின்றார். 

'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி. இதில் நடந்துசெல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்' (காண். எசா 30:21) என்னும் வார்த்தைகளிலும் வானதூதரின் குரலே ஒளிந்துள்ளது.

'நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்' (திபா 91) என்று ஆண்டவராகிய கடவுள் வாக்குறுதியாக மொழிகின்றார்.

இத்திருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன?

(அ) கடவுள் நம்மோடு துணைநிற்கிறார் என்ற நம்பிக்கைச் செய்தியை காவல்தூதர்கள் நமக்குத் தருகிறார்கள். மேலும், காவல்தூதர்களின் உடனிருப்பு நம்மை நேரிய வழியில் நடக்கத் தூண்டுகிறது. நம் தன்மதிப்பை உயர்த்துகின்றது.

(ஆ) நம் காவல்தூதரை நாம் கண்டதில்லை. ஆனால், அருகில் நடக்கும் அமரும் நகரும் அவருக்கு நாம் ஒரு பெயர் வைத்து அழைக்கலாம். 

(இ) நம் பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் சில நேரங்களில் காவல் தூதர்கள்போல நம்மோடு இருக்கின்றனர். 


2 comments:

  1. விவிலியத்தில் பல இடங்களில் தென்படும் “ காவல் தூதர்” பற்றிய குறிப்பு, நம் வாழ்வில் அவர்களின் பங்கு என்ன என்பதை நம்முன் வைக்கிறது.நம்மை நாமே காத்துக்கொள்ள இயலாத நமக்குப் பக்கத்தில், “ஒரு ஊன்றுகோலாக வருபவரே இந்தக் காவல் தூதர்கள்” எனும் எண்ணம் தனிமையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இருப்பின் அவர்கள் தனிமைத் துயரை எளிதாகக் கடந்து விடலாம்.

    “நீர் இடப்புறமோ,வலப்புறமோ எப்பக்கம் சென்றாலும் இதுதான் வழி.இதில் நடந்து செல்லுங்கள்.” எனும் ஏசாயா… மற்றும் “ நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படித் தம் தூதருக்குக் கட்டளையிடுவார்” எனும் திருப்பாடலின் வரிகள் இந்தத் தூதர்களின் பிரசன்னம் நம் இருப்பிற்குத் தரும் பாதுகாப்பையும், அவர்களால் காக்கப்படும் குழந்தைகளுக்கு செய்யப்படும் இடறலை இறைவனும் சகித்துக்கொள்ள மாட்டாரெனும் உண்மையையும் நம்முன் வைக்கின்றன.

    நம் கண்களால் காண முடியாத இந்த வானதூதர்களின் உடனிருப்பு, நம் வாழ்வில் உடன் பயணம் செய்யும் யாரோ ஒருவரால் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது.நாமும் நம் கரங்களை நீட்டி அவரின் உடனிருப்பை ஏற்றுக்கொள்ளும் போது நம் வாழ்வை ஒரு பாதுகாப்பு வளையம் சூழ்ந்து நிற்கும்.

    ‘எனக்கு மிகவும் பிடித்த இந்தக்காவல் தூதர்கள்!’ …குறித்த அழகானதொரு பதிவு! தந்தைக்கு மகிழ்ச்சி நிறை நன்றிகள்!!!

    ReplyDelete