சிம்சோன் புதிரும் புதினமும்
மனோவாகு
ஆனால், ஓடுகிறாள். இனியும் மற்றவர்கள் தன்னைப் பற்றி புறணி பேசிவிடக்கூடாது என்பதற்காகவும், தன் கணவனுக்கு பிரமாணிக்கமாகவும், நம்பகத்தன்மையோடும் இருக்க விரும்பியும், இனி குழந்தை தனக்கானது அல்ல, அது கணவனுக்கும் மனைவிக்கும் பொதுவானது என்ற எண்ணத்திலும் அவள் ஓடுகிறாள். தன் கணவன் மனேவாகு கடவுளின் தூதரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றாள். ஆசிரியர் அவளின் ஓட்டத்தை அழகாகப் பதிவு செய்கிறார்: 'அவள் தன் கணவரிடம் விரைந்து ஓடிச் சென்று சொன்னாள்.' அவளின் நீளமான, உறுதியான கால்கள் வயல்வெளிகளில் வளர்ந்து கிடந்த கோதுமை மற்றும் பார்லிப் பயிர்களையும், நீள நீளமாக முளைத்து நின்ற வேலி மரங்களையும் தாண்டி ஓடுகின்றன. அவளுடைய கைகள் காற்றைக் கிழித்து வேகத்தைக் கூட்டுகின்றன. வீட்டில் கணவன் இருப்பானா? தூங்கிக் கொண்டிருப்பானா? மது மயக்கத்தில் இருப்பானா? அழைத்தால் வருவானா? அவனுடன் இணைந்து தான் திரும்பி வரும் வரை வானதூதர் இருப்பாரா? அல்லது திரும்பி விடலாமா? வானதூதர் மறைந்துவிட்டால் என்ன செய்வது? அப்படி அவர் மறைந்துவிட்டால், 'பொய் சொல்கிறாயா?' என்று கேட்டு கணவன் அடிப்பானே? அவள் வயல்களின் கதிர்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், இவ்வளவு எண்ணங்கள் அவளுடைய உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்தன். ஓட்டத்தை நிறுத்தாத அவள் தொடர்ந்து ஓடுகிறாள். மனோவாகைக் கண்டவுடன், 'இதோ! அன்று என்னிடம் வந்த மனிதர் எனக்குத் தோன்றியுள்ளார்!' என்று மூச்சிரைக்கப் பேசி முடிக்கிறாள்.
எங்கும் தோன்றக்கூடிய வானதூதர் இப்போது இங்கே தோன்றியிருக்கலாமே? வயலில் மட்டுமே தோன்ற அவர் காரணம் என்ன? அண்டை வீட்டாரின் கண்களுக்கு மறைவாய் இருக்க தூதரும் விரும்பினாரா?
'மனோவாகு எழுந்து தன் மனைவியின் பின் சென்றான்.'
ஆசிரியரின் இவ்வார்த்தைகள், மனோவாகு எவ்வளவு மெதுவாகச் சென்றான் என்பதை நம் காதுகளில் ஒலிக்கச் செய்கின்றன. பருத்த தன் உடலை மெதுவாகத் திண்ணையிலிருந்து உயர்த்தி, இடுப்பில் கட்டியிருந்த ஆடையைச் சரி செய்துகொண்டு, அங்கே தாழ்வாரத்தில் தொங்கிக் கொண்டிருந்த துண்டு ஒன்றை அப்படியே உதறி எடுத்து தோளில் போட்டுக் கொண்டு, காலணிகளைத் தேடி, ஒரு காலணி தான் விட்ட இடத்திலும், இன்னொரு காலணி கொஞ்ச தூரத்தில் கோழிகள் அடைக்கும் பஞ்சாரக் கூடைக்கு அடியிலும் இருப்பதைக் கண்டு, 'செருப்பு போடவா, வேண்டாமா?' என்று யோசித்துக் கொண்டே, அதைக் குனிந்து எடுக்க மனம் இல்லாமல், உடலை வளைக்க விரும்பாமல், அப்படியே வெறும் காலுடன் நடக்கத் தொடங்குகிறான். திரும்பிப் பார்த்தால், மனைவி தன்னைவிட வேகமாகச் செல்கிறாள். 'ஏன் இவ்வளவு அவசரமா ஓடுறா?' எனக் கேட்டுக்கொண்டே பொடி நடையாக நகர்கிறான். அவன் அப்படித்தான் மெதுவாக நடப்பான். 'மனோவாகு' என்ற அவனுடைய பெயருக்கு, எபிரேயத்தில், 'ஓய்வு' அல்லது 'சோம்பல்' அல்லது 'இறத்தல்' அல்லது 'படுத்துக்கிடத்தல்' அல்லது 'தாமதம்' என்பது பொருள். 'அவள் விரைந்து ஓடி அவனிடம் வருகிறாள்.' ஆனால், 'அவனோ மெதுவாக மனைவியின் பின்னால் நடக்கிறான்.' இருவருக்குமான முரணை வாசகர் இங்கே எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது. மனைவி, கன்றுக்குட்டி போல தாவித் தாவி ஓட, இவனோ, கால்கள் கட்டப்பட்ட கழுதைக்குட்டி போல மெதுவாகத் தவ்வி தவ்வி நகர்கிறான்
தால்முத் என்னும் ரபி இலக்கியம் இக்காரணத்திற்காக மனோவாகைக் கடிந்துகொள்கிறது. அவனை 'இழிமனிதன்' என்றும், 'மண்ணின் மனிதன்' என்றும் சொல்கிறது. ஏனெனில், யூத சமூகம் வரையறுத்து வைத்திருந்த பாலின ஒழுங்கை அவன் மீறுகிறான்: 'எந்த ஒரு ஆணும் இன்னொரு பெண்ணின் - அவள் அவனது மனைவியாக இருந்தாலும் - பின்னால் நடக்கக் கூடாது. அவளோடு அவன் பாலம் ஒன்றைக் கடக்க நேர்;ந்தாலும், அவள் அவனுக்கு அருகில் இருக்க வேண்டுமே தவிர, முன் செல்லக் கூடாது. ஆற்றைக் கடக்கும்போது எந்தவொரு ஆண், பெண்ணின் பின்னால் நடக்கிறானோ அவனுக்கு மறுவுலகத்தில் இடம் கிடையாது.'
தன் சமூகத்தின் விதியை மீறுகின்றான் மனோவாகு. அல்லது அவனுடைய இயலாமையில், வலுவின்மையில், அவள் அவன்மேல் ஆதிக்கம் செலுத்த அவன் அனுமதித்துவிட்டான். எப்படியோ, மனைவியின் பின்னால் நடந்து வருகின்ற மனோவாகு, வயலில் நின்ற அந்த அந்நியன் முன் வந்து சேர்கின்றான். வந்தவுடன், தன் கண்களாலேயே அந்த அந்நியனை அளக்கிறான். 'கடவுளின் மனிதரை' அனுப்பும் என்று அவன் கடவுளிடம் வேண்டியிருந்தாலும், வயலில் நிற்கும் அந்த அந்நியன்மேல் உள்ள ஐயம் அவனுக்குத் தீரவில்லை. 'இவன்தான்' கடவுளின் தூதர் என்று அவன் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. நிற்கும் இந்த அந்நியனை, இந்தப் பயலைத்தான் தன் மனைவி, யாருமற்ற வயலில் இருமுறை சந்தித்தாளா, இவனைச் சந்தித்தபின்தான் கருவுற்றாளா என நினைத்துக்கொண்டே, நின்றுகொண்டிருந்தவனைச் சுற்றி வருகின்றான் மனோவாகு
'இப்பெண்ணிடம் பேசிய மனிதர் நீர்தாமா?' எனக் கேட்கின்றார். ஒரே கேள்வியில், தனக்கும் தன் மனைவிக்கும், தனக்கும் தன்முன் நிற்கும் அந்நியனுக்கும் இடையேயான தூரத்தை வரையறுத்துக்கொள்கின்றான் மனோவாகு. 'என் மனைவியிடம் பேசிய மனிதர் நீர்தாமா?' என அவர் கேட்கவில்லை. 'என் மனைவி' என்ற உறவை, 'இந்தப் பெண்' என்ற மூன்றாம் ஆள் உறவாக மாற்றிக்கொள்கின்றார். 'நீர்தாமா?' என்று கேட்கும்போது, 'நீ ஒருபோதும் நானாக முடியாது' என்ற ஏளனம் அவனுடைய வார்த்தையில் இருக்கிறது. மேலும், தன் மனத்திலிருந்த பொறாமை, நம்பிக்கையின்மை, சந்தேகம், அவமானம் என்னும் அனைத்து உணர்வுகளையும் இந்த ஒற்றைக் கேள்வியாகத் தொடுத்துவிட்டான் மனோவாகு. தாழ்ந்து பேசுவதுபோலப் பேசியத் தன் வார்த்தைகளில் அவன் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை அவனறியாமலேயே வெளிப்படுத்திவிட்டான்.
(தொடரும்)
“இப்பெண்ணிடம் பேசிய மனிதர் நீர்தாமா?” தனக்கு முன்னால் நின்றவனை ஒரு அந்நியனாகவும்,”என்றைக்கும் அவன் இவனாக முடியாது” என்ற நினைப்புடன் மட்டுமல்ல… தன் மனைவியையும் தன்னிலிருந்து தள்ளி நின்றே பார்க்க விரும்புகிறான்..அவன் அத்தனை செயல்களிலும் ஒரு மமதையும், பொறாமையும், நம்பிக்கையின்மையும் களிநடமாடிய நேரத்தில் அவனது தாழ்வு மனப்பான்மையை அவனே அரங்கேற்றுகிறான் என்று தெரியாமலே!
ReplyDeleteகடவுளின் மனிதரைக்காண விரும்பி அவசரம் காட்டியவன் இப்போது ஆர்வமற்றவனாகத் தெரிகிறான். கன்றுக்குட்டியாகத் தாவித்தாவிச்செல்லும் அவள் கால்களுக்கு முன்.அவனோ கால்கள் கட்டப்பட்ட கழுதை போல் தவ்வித்தவ்விச் செல்கிறான்.இருவர மனதும் இருப்பது எதிரெதிர் துருவம்! கடவுளின் தூதரைப்பார்த்து அவன் கேட்ட கேள்விகளும் அவன் தரம் தாழ்ந்தவன் என்று பறைசாற்றியது.
ஆனால் தந்தையின் எழுத்தில் இயற்கையின் வசீகரம் தெரிகிறது.அவளின் உறுதியான கால்கள் வளர்ந்து கிடந்த பார்லி மற்றும் கோதுமைப்பயிர்களையும்,நீளநீளமாக முளைத்து நின்ற வேலி மரங்களையும் தாண்டி ஓடுகின்றன.அவளுடைய கைகள் காற்றைக் கிழித்து வேகத்தைக் கூட்டுகின்றன….போன்ற வரிகள் மனோபாகுவின் மனைவியின் வேகத்தை மட்டுமல்ல…..அவளின் உடல் இயற்கைக்கு ஈடுகொடுத்துச்செல்வதையும் தெரிவிக்கிறது. வானதூதரை சந்திப்பது ஒன்றே அவள் நினைவாக இருக்க…வக்கிரம் பிடித்த அவள் கணவன் அவளின் கற்பை சந்தேகிக்கிறான். இயற்கையுடன் இணைந்து இந்த சம்பவங்களைத் தந்தை கோர்த்துத் தரும் வித்தை அருமை!!!
ஆமென்!
ReplyDelete