Wednesday, September 22, 2021

இவர் யாரோ?

இன்றைய (23 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 9:7-9)

இவர் யாரோ?

குழந்தை இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணம் செய்யும் நிகழ்வில், மரியாளிடம் உரையாடுகின்ற சிமியோன், 'இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு, பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்' (காண். லூக் 2:34-36) என்கிறார். 

குறுநில மன்னன் ஏரோதின் உள்ளத்து எண்ணங்கள் வெளிப்படுவதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கின்றோம். மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தியாளர்கள் திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்படுவதைப் பதிவு செய்கின்றனர். தன் நற்செய்தியில் இயேசுவின் இரத்தக்கறை தவிர வேறு எந்த இரத்தக்கறையும் இருக்க விரும்பாத லூக்கா இந்நிகழ்வைப் பதிவு செய்யவில்லை. மாறாக, திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்பட்டார் என்பதை, கொலை செய்தவரின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் ஒப்புகையாக, உள்ளக்கிடக்கையாகப் பதிவு செய்கின்றார்.

'நிகழ்ந்தவற்றை எல்லாம் கேள்விப்படுகின்ற ஏரோது மனம் குழம்புகிறார்.' நற்செய்தி நூல்களில் நாம் இரண்டு ஏரோதுக்களைக் காண்கின்றோம். முதலாம் நபர் பெரிய ஏரோது. இவர் கிமு 37 முதல் 4 வரை யூதேயாவை ஆண்டவர். இவருடைய காலத்தில்தான் இயேசு பிறக்கின்றார். குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடுவதும் இவரே. இரண்டாம் நபர் ஏரோது அந்திபா. இவர் கிமு 4 முதல் கிபி 39 வரை கலிலேயா மற்றும் பெரேயாவின் குறுநில மன்னனாக விளங்கியவர். திருமுழுக்கு யோவானைக் கொன்றவரும், இயேசுவின் பாடுகள் வரலாற்றில் பிலாத்துவிடம் இயேசுவை அனுப்பியவரும் இவரே. இயேசுவின் பிறப்பு பற்றிய செய்திகள், குழந்தைப் பருவ நிகழ்வுகள், அவருடைய போதனைகள், வல்ல செயல்கள், பயணங்கள், அவரைச் சுற்றியிருக்கின்ற மக்கள் திரள் போன்றவற்றைப் பற்றி ஏரோது கேள்விப்படுகின்றார். ஆக, இயேசு புளிப்பு மாவு போல தன் பிரசன்னத்தை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக்கம் செய்துகொண்டே இருக்கின்றார். 

இயேசுவைப் பற்றி மக்கள் மூன்று புரிதல்களை ஏரோதுவிடம் சொல்கின்றனர்: 'இறந்த யோவான் எழுப்பப்பட்டார்' – அதாவது, இறக்கின்ற நீதிமானுடைய ஆவி இன்னொருவரின் மேல் தங்கும் என்பது யூதர்களின் நம்பிக்கை. அப்படித்தான் எலியாவிடம் தங்கியிருந்த ஆவி எலிசாவிடம் தங்குகிறது. 'எலியா மீண்டும் வருவார்' என்ற நம்பிக்கையில், இயேசுவை 'எலியா' என்கின்றனர் இன்னும் சிலர். மேலும் சிலர், 'முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர்' எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்கின்றனர்.

'யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே!' என்னும் வார்த்தைகள் ஒரே நேரத்தில் ஏரோது தன் உள்ளத்தில் தான் செய்த தவற்றை ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுவதாகவும், இவ்வார்த்தைகளைக் கொண்டு இயேசுவை எச்சரிப்பதாகவும் அமைந்துள்ளன. ஏனெனில், இந்த ஏரோதுவே இன்னும் சில நாள்களில் இயேசுவைக் கொல்லத் தேடுவார். இயேசு இந்த ஏரோதுவை அந்நேரத்தில் 'குள்ளநரி' என அழைக்கின்றார் (காண். லூக் 13:32). 

'இவர் யாரோ?' என ஏரோது கேட்கும் கேள்வியை, சற்றுமுன் சீடர்களும், 'இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகின்றார். அவை கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?' என்று கேட்கின்றனர் (காண். லூக் 8:25). ஆக, இயேசுவின் வல்ல செயலைக் காணும் ஒருவர் எழுப்பும் பதிலிறுப்பாகவும், இயேசுவின்மேல் கொள்ளும் நம்பிக்கையின் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கிறது இக்கேள்வி.

இறுதியில், இயேசுவைக் காண வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார் ஏரோது. 'தொலைத்த ஒன்றைத் தேடுவதற்கான' கிரேக்கச் சொல்லே ('ஸ்ஷேடேயோ') இங்கு பயன்படுத்தப்படுகின்றது. ஏரோது தொலைத்த பொருள் பிலாத்துவிடமிருந்து அனுப்பப்படுகின்றது. ஆனால், அந்தப் பொருளைத் தன்னகத்தே வைத்துக்கொண்டால் பிலாத்துவின் நட்பு பாதிக்கப்படும் என்பதால் அதைப் பிலாத்துவிடமே அனுப்புகிறார் ஏரோது. இறுதியில், இருவரும் இணைந்து மீண்டும் தொலைத்துவிடுகின்றனர். 

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடங்கள் மூன்று:

(அ) கிறிஸ்தவர்கள் என்ற நிலையில் நாம் பேசும் சொற்கள், செய்யும் செயல்கள் அனைத்தும் மற்றவர்களின் காதுகளிலும் கண்களிலும் விழுந்துகொண்டே இருக்கும். நம் பிரசன்னத்தை நாம் மூடி வைக்க இயலாது. நம் எதிரிகளும் நம்மைப் பற்றிக் கேள்விப்படுவார்கள் எனில் நம் பேச்சும் நடத்தையும் எவ்வளவு மேம்பட்டதாக இருக்க வேண்டும்! இன்னொரு பக்கம், இயேசு மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எந்தவொரு பதற்றமும் இன்றி, நன்மையானவற்றைச் செய்துகொண்டே செய்கின்றார். அவருடைய வார்த்தைகளும் செயல்களும் அவருக்காக மற்றவர்களிடம் பேசுகின்றன. ஆக, நம் சொற்களும் நம் செயல்களும் மற்றவர்கள்முன் சான்றுகளாக இருப்பதால் அவை எப்போதும் நலமானவையாக இருத்தல் நலம்.

(ஆ) 'யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே!' என்று உண்மையை எதிர்கொள்கின்றார் ஏரோது. நம் வாழ்வின் ஒரு கட்டத்தில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் பொய்களை எல்லாம் விடுத்து, 'நான் யார்? நான் ஏன் இப்படி இருக்கிறேன்? நான் இரட்டை வாழ்க்கை வாழ்வது ஏன்?' என்ற கேள்வியை எழுப்பியே ஆக வேண்டும். கேள்விகளுக்கு விடை கண்டவர்கள் உண்மையைத் தழுவிக்கொள்கின்றனர். கேள்வியைக் கேட்டுவிட்டு மட்டும் நகர்ந்தவர்கள் பொய்யிலேயே நகர்கிறார்கள் ஏரோது போல.

(இ) இயேசு கிறிஸ்து இன்னும் நமக்கு ஒரு மறைபொருளாகவே இருக்கின்றார். அவரைப் பற்றிய நினைவு நமக்கும் குழப்பத்தை உருவாக்குகிறது. இன்றைய உலகுசார் அறிவியல் கண்கொண்டு அவரைப் பார்க்கத் துடிக்கும் நாம் அவரைக் காண இயலாததால், 'அவர் இல்லை! கடவுள் என்பது பொய்!' என்று சொல்லிக்கொள்கின்றோம். அல்லது, உண்மையான அவரின் இருத்தல் நமக்கு இடறலாக இருப்பதால், ஏரோது போல அவரை அழித்துவிட நினைக்கின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில், பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து வீடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரைப் பற்றிய அக்கறையை விடுத்து, தங்களைக் குறித்தே அக்கறை கொள்வதை இறைவாக்கினர் ஆகாய் கடிந்துகொள்கின்றார். இறைவனைப் பற்றிய தூண்டுதல் சில நேரங்களில் நமக்கு உள்ளிருந்து வருகின்றது. சில நேரங்களில் வெளியிலிருந்து வருகின்றது.

'இவர் யாரோ?' என்ற கேள்வி மனித வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் பரவிக் கிடக்கின்றது.


2 comments:

  1. தன் நற்செய்தியில் இயேசுவின் இரத்தக்கறை தவிர வேறு கறையை விரும்பாத லூக்கா, தன் தவற்றின் குமுறலை, யோவானைக் கொலை செய்தவரின் உள்ளத்திலிருந்து பீறிடும் உள்ளக்கிடக்கையாகப் பதிவு செய்கிறார் என்பது, ஏரோது போன்ற கொலையாளிகளுக்கும் மனசாட்சி இருக்கிறது என்பதைத் தெளிவு படுத்துகிறது. ஏரோது தன் வாழ்வில் இயேசுவை வைத்தே சூதாட்டம் ஆடியிருக்கிறார்….. அவரைத் தேடிக்கண்டடைவதும்,பின் தொலைப்பதுமாக! என்னதான் வருந்திடினும்..புலம்பிடினும் இரண்டு ஏரோதுகளுக்கும் ‘கொலைக்காரர்கள்’ எனும் பட்டியலில் தானே சரித்திரத்தில் இடம் கிடைக்கும்! இன்றைய வாசகத்தின் பின்னனியில் நாம் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் தந்தை. கிறிஸ்துவை நம் வழிகாட்டியாக க் கொண்டுள்ள நாம், நம் சொற்களில்…செயல்களில் அல்லதை விட்டு,நல்லதையே பின்பற்றவும், சில சமயங்களில் பிறருக்காக நாம் வாழும் இரட்டை வேடத்தைக்களையவும், ஊனக்கண்களால் இயேசுவைத் தேடுவதை விட்டு,ஞானக்கண்களால் அவரைக் கண்டறியவும் நாம் அறிவுறுத்தப்படுகிறோம்! இறைவனைப்பற்றிய தூண்டுதல் எங்கிருந்து வருகிறது? எனும் கேள்வியைத் தவிர்த்து…எங்கேயிருந்து வந்திடினும் அதற்கு பதிலளிக்கவும் அழைக்கப்படுகிறோம்!
    தவறு செய்துவிட்டுப் புலம்புவதைவிட…தவறுசெய்யத் தூண்டுதல் வருகையில் ஒருமுறைக்கு இருமுறை நம் சிந்தனையை சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம். தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete