Tuesday, September 28, 2021

அதிதூதர்கள்

இன்றைய (29 செப்டம்பர் 2021) திருநாள்

அதிதூதர்கள்

இன்று அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உலகத்தில், இரு தளங்களிலும் செயல்படக் கூடியவர்கள் இவர்கள். எந்நேரமும் கடவுளின் முகத்தைத் தியானித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்களே. மனிதர்களை, 'சகோதரர்கள்' என்று அழைப்பவர்களும், நம்மைத் தீங்கனைத்திலிருந்தும் காப்பவர்களும், நம்மைக் கரம் பிடித்து வழிநடத்துபவர்களும் இவர்களே. மீட்பின் வரலாற்றில் மிக முக்கியமான இடம் இத்தூதர்களுக்கு உண்டு.

மிக்கேல் அதிதூதரை நாம் தானியேல் நூலிலும் திருவெளிப்பாடு நூலிலும் காண்கின்றோம். 'கடவுளுக்கு நிகரானவர் யார்?' என்பது இவருடைய பெயரின் பொருள். தீமைக்கு எதிராகப் போரிடுபவர் இவரே (காண். திவெ 12:7-12). அன்று நம் தாய் ஏவாளுக்குக் காட்டியது போல நமக்கும் ஆசை காட்டி நம்மைத் தனக்குரியவராக்கிக்கொள்ள விழைகிறான் சாத்தான். சாத்தானின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவரும், தீமைக்கு எதிரான நம் போராட்டத்தில் நமக்குத் துணை நிற்பவரும் இவரே.

மரியா, சக்கரியா, மற்றும் யோசேப்புக்கு நற்செய்தி கொண்டு வந்தவர் கபிரியேல். 'கடவுளின் வல்லமை' அல்லது 'கடவுள் வல்லவர்' என்பது இவருடைய பெயரின் பொருள். நம்மைச் சுற்றி இன்று எண்ணற்ற கெட்ட செய்திகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவற்றின் நடுவில், கடவுள் நம் நடுவில் இருக்கிறார் என்ற நற்செய்தி நமக்கு அன்றாடம் வழங்கிக் கொண்டிருப்பவர் கபிரியேல்.

'கடவுளே நலம்' அல்லது 'கடவுள் நலம் நல்குபவர்' என்னும் பெயரைத் தாங்கிய இரபேல் அதிதூதரை நாம் தோபித்து நூலில் காண்கின்றோம். அங்கே, தன் பெயர் 'அசரியா' ('கடவுள் உதவுகிறார்') என்று குறிப்பிடுகின்றார் இவர். தோபித்தின் கடன் பணத்தைத் திரும்பப் பெற்றவரும், தோபியாவுக்குத் திருமணம் நிறைவேற உதவியவரும், சாராவின் பேயைப் போக்கியவரும், தோபித்துக்குக் கண் பார்வை அளித்தவரும் இவரே. தோபித்தின் இறைவேண்டல் வானதூதரையே உதவிக்கு வரவழைக்கிறது.

இன்றைய திருநாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

(அ) அதிதூதர்கள் நம் நடுவில் இருக்கிறார்கள். இன்றும் செயலாற்றுகிறார்கள். தீமையைப் போக்கவும், நற்செய்தி வழங்கவும், நம் கரம் பிடித்து நம்மை வழிநடத்தவும் நம்மோடு இருக்கின்றனர். நாம் அவர்களின் இருப்பை உணர்ந்துகொள்தல் அவசியம். மிக்கேல் அதிதூதரை நாம் அதிகமாக நினைக்கின்றோம். பெரும்பாலான நம் இல்லங்களைப் பாதுகாப்பவராக அவரின் திருவுருவம் இருக்கின்றது. ஆனால், கெட்ட செய்தி நம்மை வந்தடையும்போது கொஞ்சம் கபிரியேலையும், மருத்துவருக்கு ஃபோன் செய்யுமுன் கொஞ்சம் இரபேலையும் நினைத்தல் நலம்.

(ஆ) நாமும் அதிதூதர்களே. தீமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும்போது நாம் மிக்கேலாகவும், நற்செய்தியைத் தாங்கிச் செல்லும்போது கபிரியேலாகவும், நலமற்றவர்களுக்குத் துணை நிற்கும்போது இரபேலாகவும் நாமும் இருக்க முடியும், இருக்கின்றோம், இருத்தல் நலம்.

(இ) இறைவனின் உடனிருப்பைக் குறிக்கும் அடையாளங்கள் இவர்கள். இறைவனின் திருமுன்னிலையில் தீமைக்கும், தீயவற்றுக்கும், நோய்க்கும் இடமில்லை. இறைவனை அல்லும் பகலும் தியானிக்கும் இவர்கள், நம்மையும் அதே தியான நிலைக்கு அழைக்கின்றனர். நம்மிடமிருந்து மறைந்த நம் முன்னோர்களை இவர்கள் நன்கறிவர். ஏனெனில், அவர்களோடு இணைந்து இவர்கள் இறைவனின் திருமுகத்தைக் காண்கின்றனர். ஆக, நம் தாத்தா, பாட்டி, பெற்றோர், உடன்பிறந்தோர் என நமக்கு முன் சென்ற அனைவரையும் இவர்கள் நமக்கு இன்று நினைவூட்டுகின்றனர்.

1 comment:

  1. அதிதூதர்கள்… மிக்கேல்,கபிரியேல்,இரஃபேல் ….விண்ணகத்தில் இறைவனை வழிபடும் இத்தூதர்கள் மண்ணகத்தில் நம்மைத் தம் சகோதரராக, நம்மைக் கரம் பிடித்து வழி நடத்துபவரும் இவரே!
    விண்ணகத்தில் உறையும் இவர்களை மண்ணகத்துக்கு அழைப்பது எப்படி எனும் வழி சொல்கிறார் தந்தை.தீமைக்கு எதிராகக் குரல் கொடுக்கையில் மிக்கேலாகவும்,நற்செய்தியைத் தாங்கிச்செல்லும் போது கபிரியேலாகவும்,நலமற்றவர்களுக்குத் துணை நிற்கையில் இரஃபேலாகவும் நம்மாலும் நிற்ற முடியும் எனும் தந்தையின் கூற்று நம்மையும் இந்த அதிதூதர்களின் உயரத்திற்குக் கொண்டு செல்கிறது.
    நமக்கு முன் இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்த நம் உறவுகளை இவர்கள் அறிந்து வைத்திருப்பதால் இத்தூதர்கள் வழியே நம் பாசமிக்க உறவுகளையும் அணுகலாம் என்பது நமக்கு ஆறுதல் தரும் செய்தி! நாமும் இயன்ற அளவு நமக்கு வலமும்,புறமும் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியும்..அவர்களின் துன்ப நேரத்தில் நற்செய்திகளைப் பங்கிட்டும்…அவர்களின் உடல் பலவீனத்தில் மருந்தாய் மாறியும்
    இந்த அதிதூதர்களின் பணியைப் பங்கு போடலாம் எனச்சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!! அனைவருக்கும் திருவிழா வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete