Wednesday, September 15, 2021

பாவியே பாடமாக

இன்றைய (16 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 7:36-50)

பாவியே பாடமாக

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பரிசேயர் ஒருவர் இயேசுவைத் தன் இல்லத்தில் ஏற்று விருந்தோம்பல் செய்கின்றார். விருந்துக்கு அழைக்காமல் உள்ளே வந்த பாவியான பெண் ஒருவர் அனைவருக்கும் பாடமாக மாறுகின்றார்.

இந்தப் பெண் நமக்கு மூன்று வாழ்வியல் பாடங்களைக் கற்பிக்கின்றார்:

(அ) அடுத்தவர் இடும் முத்திரை பற்றிக் கவலைப் படாதே!

'விருந்துக்குப் போனால் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன பேசுவார்கள்?' என்ற கவலை அந்தப் பெண்ணுக்குச் சிறிதும் இல்லை. ஏனெனில், வாழ்க்கை முழுவதும் மக்கள் தனக்கு இட்ட முத்திரை பற்றி அவள் ஒன்றும் கவலைப்படவில்லை. மற்றவர்கள் தனக்கு முத்திரை இட்டாலும் அவர்களின் முகத்திரையைக் கிழிக்க இந்தப் பெண் முயற்சிக்கவில்லை. எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு, அப்படியே தொடர்ந்து பயணம் செய்கின்றாள். இப்படிச் செய்வதற்கு நிறையத் துணிச்சல் தேவை.

(ஆ) தன்னை முற்றிலும் மன்னிக்கின்றார்

பல நேரங்களில் கடவுள் நம்மை மன்னிக்கின்றார். மற்றவர்கள் நம்மை மன்னிக்கின்றனர். ஆனால், நாம் தான் நம்மை மன்னிப்பது இல்லை. கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஒரு பெரிய மூட்டையாக, நத்தை தன் கூட்டைச் சுமப்பதுபோல, ஒட்டகம் தன் முதுகைச் சுமப்பது போலச் சுமந்துகொண்டே வருகின்றோம். குற்றவுணர்வினாலும் பயத்தினாலும் ஆட்கொள்ளப்படுகின்றோம். நற்செய்தியில் நாம் காணும் இந்தப் பெண் தன்னையும், தன் கடந்த காலத்தையும் மன்னிக்கின்றார்

(இ) தன் முதன்மைகளைச் சரி செய்கின்றார்

விருந்தினர் இல்லங்களில் மற்றவர்களை மகிழ்வித்துப் பழகிப் போன இந்தப் பெண், இப்போது தன் கண்களை இயேசுவின்மேல் மட்டுமே பதிய வைக்கின்றாள். தன் முதன்மைகளைச் சரி செய்துவிட்ட இவள் மீண்டும் தன் பழைய வாழ்க்கை நோக்கிச் செல்லவில்லை. இவளுடைய இந்தத் திடமான மனது நமக்கு ஆச்சர்யம் தருகின்றது

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 திமொ 4:12-16), நம்பிக்கையில் தான் பெற்றெடுத்த தன் அன்புப் பிள்ளை திமொத்தேயுவுக்கு எழுதுகின்ற பவுல், 'இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்;த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே!' என அறிவுறுத்துகின்றார்.

பாவியான அந்தப் பெண் தான் பெற்ற அருள்கொடை பற்றி மிகவும் அக்கறையுடன் இருந்தாள்

நாமும் ஆண்டவரின் அருள்கொடையைப் பெற்றிருக்கின்றோம். ஆனால், அக்கறையுடன் இருக்கின்றோமா? அக்கறையின்றி அக்கரைக்குச் செல்தல் சாத்தியம் இல்லை. பாவியான அந்தப் பெண் தன் கண்ணீராலும் நறுமணத் தைலத்தாலும் அக்கரைக்குச் செல்கின்றாள்.


2 comments:

  1. நாம் கடந்து வந்த காலங்களில் நம்மீது ஒட்டிக்கொண்ட கறைகள் பற்றிப் புலம்புவதை விட்டு நம் முதன்மைகள் எவை என ஆராய்ந்து அவற்றை சரி செய்யவும், நம்மேல் …நாம் கேட்டோ..கேட்காமலோ பொழியப்பட்ட அனைத்துக் கொடைகளுக்காக அக்கறை காட்டவும் நம்மை அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்! தன் கண்களை இயேசு மீது பதியவிட்ட நேரம் முதல் தன் பழைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்காத மரிய மகதலா போன்று கடந்து வந்த பாதையை மறந்து சேர வேண்டிய அக்கரையை நம் எதிர்நோக்காகக் கொள்ளவும், பாசமே உருவான தன் அன்புப்பிள்ளைத் திமோத்தேயுவுக்கு பாசத்தை மட்டுமல்ல….. தான் பெற்ற குருத்துவத்தைக் கட்டிக் காக்க வேண்டிய அக்கறையையும் சேர்த்தே ஊட்டிய பவுல் போல், அடுத்தவரின் நலனில் அக்கறை காட்டவும், நாமும் எதிர்பார்க்கப்படுகிறோம் என்பதை அழுத்தமாகக் கூறியுள்ள தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றியும்!!!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete