Thursday, September 9, 2021

சிங்கத்தின் தேன் - 13

சிம்சோன் புதிரும் புதினமும்

அறிவு

'நாம் கண்டிப்பாக இறந்துவிடுவோம்!' என முணுமுணுக்கிறான் மனோவாகு. ஆனால், அவனுடைய மனைவியோ, வந்திருந்தவரைப் பற்றி முழுமையாய் அறிந்திருந்தவள் போல, மிகவும் கோர்வையாக, அறிவுப்பூர்வமாக, அதே வேளையில் கணவனின் மந்தபுத்தியை நொந்தவளாய்ப் பதிலிறுக்கிறாள்: 'ஆண்டவர் நம்மைக் கொல்வதாயிருந்தால் நம் கையிலிருந்து எரிபலியையும் உணவுப் படையலையும் ஏற்றிருக்க மாட்டார். இவற்றை எல்லாம் காட்டியிருக்க மாட்டார். இதை நமக்கு அறிவித்திருக்கவும் மாட்டார்.' அவள் இந்த நிகழ்வை மிகவும் பரந்த பார்வையில் புரிந்துகொண்டாள். 

இதுவரை இவளை, வெறும் 'மலடி' என மட்டுமே அறிந்திருந்த வாசகரும், இவளுடைய இறைநம்பிக்கையையும், நம்பிக்கைப் பார்வையையும், நேர்முகமான எண்ணத்தையும் கண்டு, இவளைப் பற்றிய புதிய, பரந்த புரிதலை இப்போது பெறுகிறார். ஒருவேளை, தான் பெற்ற குழந்தைப்பேறு என்ற கொடை அவளுடைய தன்மதிப்பை உயர்த்தியதோ? தன்னாலும் இந்த ஊருக்குப் பயனுண்டு என்ற எண்ணம் அவளுடைய தன்நம்பிக்கையை உயர்த்தியதோ? அல்லது குழப்பங்களுக்கும், கலக்கங்களுக்கும் நடுவில், தன் அசாதாரணமான குழந்தையைப் பற்றிய எண்ணம் அவளுடைய எண்ணத்தை உயர்த்தியதோ? இவ்வனைத்தையும் புரிந்துகொண்ட, அறிவுப்பூர்வமான அந்தப் பெண், வானதூதர், தான் தனியாக இருக்கும்போது மட்டுமே 'தோன்றியதை' அல்லது 'வந்ததை' புரிந்துகொள்ளத் தவறிவிட்டாள். இவளின் அறிவுக்கூர்மை மற்றும் திடம், ஆற்றல் மற்றும் துணிச்சலை அறிந்ததால்தான் வானதூதர் இவளுக்குத் தனிமையில் தோன்றினாரோ? 

சிம்சோன் தன் வாழ்வில் சந்திக்கும் பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள். ஒரே நேரத்தில் தன்நம்பிக்கை உடையவர்களாகவும், சிறிய விடயங்களையும் தவற விடுபவர்களாகவும் இருப்பார்கள். தன் வாழ்வில் தான் சந்திக்கும் எல்லாப் பெண்களின் நிழலாக சிம்சோனுக்குத் தெரிகின்றாள் அவனுடைய அந்தப் பெயரில்லாத் தாய்.

மந்தமான உள்ளமும், குறைவான நுண்ணறிவும் கொண்ட மனோவாகு, உருளைக்கிழங்குச் சாக்கு போல ஓரமாய் விழுந்து கிடக்க, அவனுடைய மனைவி, தன்நம்பிக்கையாலும், தன்மதிப்பாலும், துணிவாலும் நிமிர்ந்து அமர்கிறாள். இவளுடைய மாண்பு, நம்பிக்கை, உறுதி, மற்றும் மனத்திடம், கணவனுக்கு இல்லை. இவ்வளவு துணிச்சலான பெண், வானதூதரின் நல்லெண்ணத்தைப் பெறும் அளவிற்கு அவர்மேல் தாக்கத்தை ஏற்படுத்தும் பெண் பேசிய வார்த்தைகள் கண்டிப்பாக அவளுடைய 'பிறக்கப் போகும் குழந்தை' மேலும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அவளை அறியாமலேயே அவள் உதிர்த்த வார்த்தைகள் விரைவில் உண்மையாகும் - 'சிம்சோன் கருவில் உருவாகும் நாள் முதல் இறக்கும் நாள் வரையில்!'

(தொடரும்)


3 comments:

  1. பல்வேறு விஷயங்களுக்காகத் தன் மீதே நம்பிக்கை கொண்ட மனோவாகுவின் மனைவிக்குக், கடவுளின் தூதரின் வரவு இன்னும் அதைக் கூட்டியதாகத் தெரிந்திடினும், கடவுளின் தூதர் ஏன் தன்னைத் தனிமையில் சந்தித்தார் என்பதற்கு விடைகாண முடியவில்லை.ஒரே நேரத்தில் அவளிடமிருந்த நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களே சிம்சோன் தன் வாழ்நாளில் சந்திக்கவிருக்கும் அனைத்துப் பெண்களும் பெற்றிருப்பார்கள் என்கிறது தந்தையின் ஆரூடம்! குறைவான நுண்ணறிவு கொண்ட மனோவாகு உருளைக்கிழங்கு மூட்டைக்கிணையாகப் பேசப்பட, அவன் மனைவி கடவுளின் தூதரின் நல்லெண்ணத்தைப் பெற உதவியது அவளின் ‘தன்னம்பிக்கையே’ என்பது, வெற்று வாய்ச்சாலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் சில ஆண்களின் மனைவிமார்களைக் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கும் வார்த்தைகள்.

    தாயின் எண்ணங்கள் அனைத்துமே அவளின் மரபணுக்கள் வழியாகப் பிறக்கப்போகும் அவளின் குழந்தையைச் சென்றடையும் என்பதும், அவள் மனம் ஒப்பாமலேயே வாய்வழி வந்த “ சிம்சோன் கருவில் உருவாகும் நாள்முதல் இறக்கும் நாள் வரையில்!” எனும்
    வார்த்தைகள் உண்மையாகும் என்பதும் கொஞ்சம் சஞ்சலத்தோடு தந்தை நம் மனங்களில் ஏற்றும் விஷயங்கள்! முழுக்க முழுக்க சோகமே தழும்பி நிற்கும் இந்தப் புதினம் என்றாவது மகிழ்ச்சியைத் தருமா? என்று வாசகர்களின் மனத்துக்குள் கேள்வி எழுந்தால் தப்பில்லை. அத்தனை சோகரசத்தைப் பிழிந்து கொடுக்கிறார் தந்தை. மற்றவர்களுக்கு எப்படியோ…சோகமும் உள்ளத்திலிருந்து பீறிடும் ஒரு உணர்வுதானே! என்று நினைக்கும் என் போன்றவர்களுக்கு இப்புதினம் நிறைய விஷயங்களைக் கற்றுத்தரும் என்பதில் வியப்பில்லை. தந்தையின் வித்தியாசமான இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete