Tuesday, September 7, 2021

சிங்கத்தின் தேன் - 11

சிம்சோன் புதிரும் புதினமும்

அவமானம்

வானதூதர் அறிவுரைகளை எடுத்துச் சொல்லி முடித்தாலும், அவருக்கும் மனோவாகுக்கும் இடையே உள்ள அழுத்தம் தொடர்கிறது. அந்தச் சூழலைக் கையாள இயலாத நிலைக்கு மனோவாகு தள்ளப்படுகின்றான். மனைவியிடமிருந்து வந்த தகவல்களும், வானதூதரிடமிருந்து வந்த தகவல்களும் அவன் தலையைச் சுற்றவைக்கின்றன. ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணர்வுகளும், தன்னுடைய மனைவியும் இந்த அந்நியனும் ஒரே மாதிரி பேசி வைத்துத் தனக்கு எதிராக ஒரு சதிவலை பிண்ணுகிறார்கள் என்ற சந்தேகமும் வெள்ளம்போல அவனுடைய உள்ளத்தில் பாய்கிறது. அல்லது இந்தக் குழப்பங்களால் அவனுடைய உள்ளம் இறுகிப் போக, அல்லது மரத்துப் போகத் தொடங்குகிறது. தன்னுடைய துன்பத்திலும் சோர்விலும் அவன் மீண்டும் வானதூதரிடம் பேசுகிறான்: 'தயவு கூர்ந்து சற்று நேரம் காத்திரும். உமக்காக ஓர் ஆட்டுக் குட்டியைச் சமைக்கின்றோம்' என்கிறான். வானதூதர் தன் உள்ளத்தில் சிரித்திருப்பார். அல்லது கோபப்பட்டிருப்பார். 'இவன் என்ன முட்டாளா? நான் இவ்வளவு அறிவுரைகள் சொல்ல, அதற்கு எந்த ஓர் எதிர்வினையும் ஆற்றாமல், அல்லது ஏற்றோ மறுத்தோ பேசாமல், முற்றிலும் தொடர்பில்லாத ஒன்றைச் சொல்கிறானே!' என எண்ணியிருப்பார். அல்லது 'இவன் முட்டாள்தான்!' என அறிந்திருப்பார். அல்லது மனோவாகு கொடுக்க விரும்பும் இந்தக் கையூட்டிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருப்பார். 'வானதூதர் சொன்ன வார்த்தைகள் எதுவும் நடந்தேறக்கூடாது' என்று மனோவாகு எண்ணுவதுபோல வாசகருக்குத் தெரிகிறது. 'உனக்கு ஒரு நல்ல விருந்து வைக்கிறேன். நீ இருந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விடு! தயவு செய்து இனிமேல் இந்தப் பக்கம் வராதே! என் மனைவியையும் என்னையும் தொந்தரவு செய்யாதே!' என்று இறைஞ்சுவதுபோல இருக்கிறது மனோவாகு வானதூதரிடம் வைத்த விண்ணப்பம். 

விண்ணப்பத்தை வானதூதர் உடனடியாக, எந்தவொரு காரணமுமின்றி, நிராகரிக்கின்றார். அவருடைய வார்த்தைகளில் கோபமும் எரிச்சலும் தெரிகின்றன: 'நீ என்னைக் காத்திருக்க வைத்தாலும், நான் உனது உணவை உண்ண மாட்டேன்.' 'நாங்கள் சமைக்கிறோம்' என மனோவாகு சொல்கிறான். ஆனால், 'உன் உணவு' என்று வானதூதர் சொல்கின்றார். இங்கே வானதூதர் மீண்டும் மனோவாகை நிகழ்விலிருந்து அந்நியப்படுத்துகிறார். அல்லது மறைமுகமாக தன்னைப் பெண்ணின் பக்கம் இணைத்துக் கொள்கின்றார். அல்லது 'உனது' என்பது 'உமது' என்பதைக் குறிக்கும் என எடுத்துக்கொள்கின்றார். மனோவாகு, ஆட்டுக்குட்டியைக் கடவுளுக்கு எரிபலியாகச் செலுத்த வேண்டுமே தவிர, தனக்கு அல்ல, என்று பின்வாங்குகின்றார் வானதூதர். தான் யாரென்று அறிந்துகொள்வதற்காகவே தன்னைக் காத்திருக்குமாறு மனோவாகு சொல்கின்றான் என்று சந்தேகம் கொண்டிருக்கலாம் வானதூதர். ஏனெனில், 'மனோவாகு, அவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறியவில்லை' என உடனே சேர்க்கிறார் ஆசிரியர். இவ்வளவு நேரமாகியும், இவ்வளவு தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்ட பின்னும், வந்திருப்பவர் யாரென மனோவாகு அறிந்துகொள்ளவில்லை என்ற குறிப்பு அவனுடைய மந்த உள்ளத்தை வாசகருக்குக் காட்டுகிறது. வாசகருக்கு இந்த இடத்தில் மனோவாகு மேல் கொஞ்சம் கோபமும் வருகிறது. அப்படியே அவனைப் பிடித்து உலுக்கி, 'டேய்! உண்மையிலேயே உனக்கு இங்கு நடப்பது என்னவென்று தெரியலையா? அல்லது தெரியாததுபோல நடிக்கிறாயா?' என்று கேட்கத் தோன்றுகிறது.

தன் வழிக்கு வானதூதர் வரவில்லை என்பதை மனத்திற்குள் நொந்துகொண்டே, தன் மனைவியின்முன் அந்நியன் ஒருவன் தன் அழைப்பை நிராகரித்துவிட்டானே என்று கோபித்துக்கொண்டே – ஏனெனில், ஓர் ஆண்மகன் தான் தனிமையில் அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்வானே தவிர, இன்னொருவர் முன், குறிப்பாக, தனக்கு நெருக்கமான அல்லது அறிமுகமான இன்னொருவர்முன் அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவே மாட்டான். ஏனெனில், ஆண்களுக்கு மதிப்பு மிகவும் முக்கியமானது – 'உமது பெயர் என்ன? உம் வார்த்தைகள் நிறைவேறும்போது நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்துவோம்' என்று இன்னொரு கேள்வியையும், இன்னொரு கையூட்டையும் முன்வைக்கின்றான். முந்தைய கையூட்டு, வந்திருந்தவனின் வயிற்றுக்கு விருந்தளிப்பதாய் இருந்தது. இரண்டாவது கையூட்டு, வந்திருந்தவனின் மூளைக்கு விருந்தளிப்பதாய் இருக்கிறது. பெருமை மூளைக்கு விருந்தளிப்பதில்லையா? பெருமையை விரும்பாதவர் யார்? மனோவாகு மந்தமானவனா? அல்லது விவரமானவனா? என்ற கேள்வி இங்கே வாசகரிடம் எழுகின்றது. கையறுநிலையில் இருக்கின்ற இந்த ஆண்மகனின்மேல் வாசகருக்குக் கொஞ்சம் பரிதாபம் ஏற்படுகிறது. மனோவாகுடன் இணைந்து வாசகரும் வந்திருந்தவனின் பெயரை அறிந்துகொள்ள விரும்புகின்றார். 'பெயர்' என்பது எபிரேய சமூகத்தில் மிகவும் முக்கியமானது. ஒருவரின் பெயரை அறிந்துகொள்வது என்பது அவருடைய அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வது. அது போல, ஒருவரின் பெயரை உச்சரிப்பது என்பது அவர்மேல் உரிமை கொண்டாடுவது. இந்த இரண்டு காரணங்களுக்காகவே மனோவாகின் கேள்வியை நிராகரிக்கின்றார் வானதூதர். மனேவாகின் அறிமுகத்தையும் அவர் விரும்பவில்லை. அவன் தன்மேல் உரிமை கொண்டாடவும் அவர் விரும்பவில்லை. வானதூதரின் கோபம் அவருடைய வார்த்தைகளிலேயே தெரிகின்றது: 'எனது பெயரை நீ கேட்பதேன்? அது வியப்புக்கு உரியது!' 'இலையை எடுன்னா, தலையை ஏன் எண்ணுற?' என வானதூதர் மனோவாகிடம் கேட்பது போல இருக்கிறது. 'உன் வேலையை மட்டும் பார்!' என்று அவனைக் கடிந்துகொள்வதாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் பயன்படுத்தப்படும் 'பெலி' என்ற எபிரேய வார்த்தைக்கு, 'வியப்புக்குரியது,' 'அச்சத்திற்குரியது,' 'அறிந்துகொள்ள முடியாதது' என்பது பொருள். 'அது உனக்கெல்லாம் புரியாது!' என்று மனோவாகின் மந்தஉள்ளத்தைச் சுட்டிக்காட்டுவதாகவே இருக்கிறது வானதூதரின் மறுமொழி. மறுபடியும் மனைவியின் முன் அவமானம்! முந்தைய அவமானத்தைவிடக் கொடிய அவமானம்! தானே வருவித்துக் கொண்ட இந்த அவமானத்தை எண்ணி மனோவாகு தன் வாழ்க்கை முழுவதும் வருந்தியிருப்பான். முன்பின் தெரியாத அந்நியன் ஒருவன், தன் மனைவிமுன், தன் வயலில் நின்றுகொண்டு, தன்னை அவமதித்ததை, தன்னுடைய தன்மதிப்பின்மேல் விழுந்த ஆறாத அம்மைத் தளும்பாக அவன் எண்ணியிருப்பான். அவனுடைய மனைவியைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குள் இந்த அவமான உணர்வு துள்ளி எழும். கண்கள் கலங்கும். கையறு நிலையில் இருப்பான். தன் மனைவி அவளுடைய தோழிகளிடமும், உற்றார் உறவினர்களிடமும் சொல்லியிருப்பாளோ என்ற அவள்மேல் சந்தேகமும், கோபமும், பயமும், எரிச்சலும் வரும். பாவம் அவன்!

(தொடரும்)


2 comments:

  1. சிம்சோன் பாவம் .. Mrs Manoah பாவம்... Manoah பாவம்... நீங்க இன்னும் வானதூதர் பாவம் னு மட்டும் தான் சொல்லலை .. அடுத்த எபிசோடுல அதையும் சொல்லிருங்க சாமி ...

    ReplyDelete
  2. “ பாவம் அவன்!” என்றுதான் நமக்கும் தோன்றுகிறது இந்தப் பதிவை முழுவதும் வாசித்தபிறகு. ஏன்! மனோவாகு மீது கொஞ்சம் பரிதாபமும்,வானதூதர் மீது கோபமும் கூட வருகிறது.தனக்குப் பிள்ளை வரம் வேண்டி அவன் மனைவி தவித்த தவிப்பு கண்டிப்பாக மனோவாகுவிற்கும் இருந்திருக்கும். பின் ஏன் வானதூதர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறார் தெரியவில்லை.வானதூதருக்கு சமைக்க நினைத்த விருந்தை கையூட்டு என்ற நிலையில் மேலும்..மேலும் மனோபாகுவை அவனது மனைவி முன்பாகவே வானதூதர் அவமானத்துக்குள்ளாக்குவது என்ன நியாயம்? என நம்மைக் கேட்கத்தூண்டுகிறது.முதல் கையூட்டுக்கு மசியாத வானதூதரை இன்னொரு கையூட்டைச் சொல்லி அவரைத் தன் பக்கம் இழுக்கப்பார்த்தும் பெயரைச் சொல்வது உரிமை கொண்டாடுவதற்கு சமமென்பதால் தன் மனத்தைப்
    பாறாங்கல்லாய் இறுக்கி வைத்துக் கொள்வது போல் நடிக்கிறார் வானதூதர்! நடந்த நிகழ்வுகள் அத்தனையும்….அனைத்து அவமானங்களும் ஆறாக் காயங்களாய் அவனைக் கையறு நிலைக்குத் தள்ள என்ன செய்வான் அவன்? இத்தனை நிகழ்வுகளுக்கும் வானதூதருக்கு உடந்தையாய் இருந்த தன் மனைவிமேல் எரிச்சலும்…போபமும் படாமல்!? பாவம் தான் அவன்!!!

    சந்தடி சாக்கில் பெண்களைப் பின்னுக்குத் தள்ளி ஆண்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றுவதே தந்தைக்கு வாடிக்கையாகிவிட்டது. அதென்ன? “ஆண்களுக்கு மதிப்பு மிகவும் முக்கியமானது?” விடிந்தால் அன்னை மரியாளின் பிறந்த நாளைக் கொண்டாடக் காத்திருக்கும் பெண்கள் அனைவரும் தந்தையை சபிக்கப்போகிறார்கள்! தந்தை பாடும் பாவம் தான்!!! ஆனாலும் இத்தனை முயற்சியில் வந்த பதிவிற்காக நன்றிகள்!!!

    ReplyDelete