Tuesday, September 21, 2021

அவர்களை அனுப்பினார்

இன்றைய (22 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 9:1-6)

அவர்களை அனுப்பினார்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பன்னிருவரைப் பணிக்கு அனுப்புகின்றார். பணிக்கு அனுப்பும்போது சில அறிவுரைகளைக் கூறுகின்றார். இறுதியில், பன்னிருவரும் பணி செய்ததாக லூக்கா பதிவு செய்கின்றார். இந்த நிகழ்வு நமக்கு மூன்று விடயங்களைக் கற்பிக்கின்றது:

(அ) புதிய பயணம்

'தம்மோடு இருக்க பன்னிருவரைத் தேர்ந்துகொண்ட இயேசு அவர்களைப் பணிக்கு அனுப்புகின்றார்.' அழைக்கப்படுதலும் அனுப்பப்படுதலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல இருக்கின்றன. அழைக்கப்படுபவர் அனைவரும் அனுப்பப்பட வேண்டும். மேலும், அழைக்கப்படுவதும் அனுப்பப்படுவதும் அவரால் நிர்ணயிக்கப்படுகின்றன. தான் விரும்பியவர்களை விரும்பிய நேரம் அவர் அழைக்கின்றார். அதுபோல தான் விரும்புகிற நேரம் அவர்களை அனுப்புகின்றார். இப்போது திருத்தூதர்கள் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகின்றனர். இந்தப் பயணம் இனி அவர்கள் வாழ்வின் இறுதி வரை தொடரும். இடையில் அவர்கள் பாதை மாறினாலும், பாதை தவறினாலும் அவர்களின் பயணம் இறையாட்சிப் பயணமே. நாம் அனைவரும் திருமுழுக்கு பெற்றபோது இந்தப் பயணம் தொடங்குகிறது. இந்தப் பயணம் பற்றிய தெளிவு நம்மிடம் இருக்கின்றதா? என்னும் கேள்வியை நாம் இன்று கேட்கலாம். ஒவ்வொரு நாள் திருப்பலியிலும், 'சென்று வாருங்கள்! திருப்பலி முடிந்தது!' என்று அருள்பணியாளர் சொல்லும் வார்த்தைகளில் இந்தப் பயணம் நம்மில் புதுப்பிக்கபடுகின்றது. ஆக, நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம், அனுப்பப்படுகின்றோம்.

(ஆ) புதிய பிறப்பு

இயேசுவின் சமகாலத்தில் ரபிக்கள் தன் சீடர்களைப் பணிக்கு அனுப்புவது வழக்கம். அப்படி அனுப்பும்போது, 'இதை எடுத்துக்கொள்! அதை எடுத்துக்கொள்!' என்று சொல்வது இயல்பு. மேலும், தங்களுடைய பணிக்கும் பயன்படும் என்று நிறைய ஏட்டுச் சுருள்கள், பை, கைத்தடி, காலணிகள் என நிறையவே அவர்கள் எடுத்துச் செல்வர். ஆனால், இயேசு அதற்கு எதிர்மாறாக எதையும் எடுத்துச் செல்லாதீர்கள் என அறிவுறுத்துகின்றார். ஏறக்குறைய இது அவர்களுக்கு இரண்டாம் பிறப்பு போல இருக்கின்றது. ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, அந்தக் குழந்தை தன் கையில் கைத்தடியே, பையோ, உணவோ, பணமோ இன்றிதான் பிறக்கின்றது. நாமும் அவ்வப்போது இப்படி இரண்டாம் பிறப்பு எடுத்தல் நலம். பொருள்களைக் குறைக்கச் சொல்வதன் வழியாக, இயேசு பொருள்கள்மேல் உள்ள பிடிப்பைக் குறைத்துக் கடவுளின் பராமரிப்பின்மேல் உள்ள நம்பிக்கையை அதிகரிக்கின்றார்

(இ) புதிய செயல்

'பன்னிருவரும் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.' அதாவது, தாங்கள் இதுவரை செய்யாத ஒரு செயலை இப்போது செய்கிறார்கள். தங்களால் இதைச் செய்ய முடிகிறதே என்று வியக்கிறார்கள். மீன்பிடித்த கைகள் பேயை ஓட்டுகின்றன. வரி வசூலித்த கைகள் பார்வையற்றோருக்கு நலம் தருகின்றன. தீவிரவாதியின் உதடுகள் நற்செய்தி அறிவிக்கின்றன. இதுதான் இயேசுவால் வருகின்ற மாற்றம். இயேசுவால் அழைத்து அனுப்பப்படும் ஒருவர் மீண்டும் பழைய செயல்களையே செய்துகொண்டிருக்க முடியாது. பழைய செயல்கள் செய்வதற்கு எளிதாக இருப்பதால் நாம் அவற்றைச் செய்துகொண்டே இருந்துவிட்டு, ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் நம்மை அடைத்துக் கொள்கின்றோம். புதிய செயல்களைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு இருக்கும்போது செயல் தானாகவே நடந்தேறுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் இறைவன் முன் முழந்தாளிட்டுக் கிடக்கின்ற எஸ்ரா ஆண்டவராகிய கடவுள் தங்கள் வாழ்க்கையில் செய்த அனைத்து செயல்களையும் எண்ணிப் பார்த்து வியக்கின்றார். இறைவனின் தயை தங்களைக் காப்பாற்றியது என்று நன்றி கூறுகின்றார்.

இறைவனின் தயவு நம்மை அழைக்கின்றது. நம்மை அனுப்புகின்றது.


1 comment:

  1. “அவர்களை” அவர் அனுப்பினார். அழைக்கப்பட்டவர்கள் அனுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.அவர்கள் ஒரு முறை அழகைக்கப்பட்டுவிட்டால் அந்த அழைப்பு முத்திரை அவர்களில் ஒன்றி விடுகிறது…அவர்கள் பாதை மாறிடினும், தவறிடினும் கூட அவர்கள் செய்வது இறையாட்சிப்பயணமே! இது அருட்பணியாளர்களுக்கு மட்டுமல்ல…. திருப்பலியில் “ சென்று வாருங்கள் திருப்பலி முடிந்தது” என் நம் செவிகளில் விழும்போது நாமும் கூட அழைக்கப்பட்டவர் மற்றும் அனுப்பப்பட்டவராக மாறிவிடுகிறோம்.
    அனுப்பப்பட்டவர்கள் பிறந்த குழந்தையைப் போன்று பொருட்களின் மீது பற்றற்று இருக்கவும்,” அவர் பார்த்துக்கொள்வார்” என்ற நம்பிக்கையை அவர்கள் அதிகரிக்கவும் செய்கிறார்.
    இயேசுவால் அனுப்பப்படும் ஒவ்வொருவரும் தங்கள் செயல்களை மாற்றுகின்றனர்.மீன்பிடித்த கைகள் பேயை ஓட்டவும்…வரிவசூலித்த கைகள் பார்வையற்றோருக்கு பார்வை தரவும்…தீவிரவாதிகள் நற்செய்தி அறிவிக்கவும்….அவர்களின் செயல்கள் அவர்களையே வியக்கவைக்கின்றன.
    இறைவனின் தயவு நம்மை அழைக்கையிலும்…அனுப்பையிலும் ‘ எஸ்ரா’ போல அதைப்பற்றிப்பிடிக்கவும் நம்மைக்காக்கும் இறைவனின் தயவுக்கு நன்றி சொல்வதுமே நம்மால் முடிந்த செயலாக இருக்கவேண்டும்!
    வெறுமனே வாய் சவுடால் பேசுபவர்களை செய்கைகள் வசம் திருப்ப இறைவன் விடுக்கும் ஒரு அழைப்பு. செவி மடுப்போம்! தந்தைக்கு நன்றிகள,!!!

    ReplyDelete