Thursday, September 23, 2021

கேள்விகள்

இன்றைய (24 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக்கா 9:18-22)

கேள்விகள்

இயேசுவின் வாழ்வின் முக்கியமான தருணங்களில் எல்லாம் அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருப்பதாகப் பதிவு செய்கின்றார் லூக்கா. பேதுருவின் நம்பிக்கை அறிக்கை நிகழ்வு ஒத்தமைவு நற்செய்திகளின் முக்கியமான நிகழ்வாக இருக்கின்றது. ஏனெனில், 'யார் இவர்?' என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே நிகழ்வுகள் நகர, 'இவரே கடவுளின் மெசியா' என்ற விடை இங்கே தரப்படுகின்றது. தொடர்ந்து, 'இவர் எப்படிப்பட்ட மெசியா?' என்ற கேள்விக்கு விடையாக வருகின்றது இனி வரும் நற்செய்திப் பகுதிகள். மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இயேசு தன் பாடுகளை முதன்முதலாக அறிக்கையிடுவார். பேதுரு இயேசுவைக் கடிந்துகொள்வார். ஆனால், லூக்காவின் பதிவில் இயேசு பேதுருவைக் கடிந்துகொள்வதில்லை. 

ஆக, இயேசுவைப் பற்றிய அறிக்கை, இயேசு தன் பாடுகளை முன்னறிவித்தல், மற்றும் சீடர்களின் புரிதல் அனைத்தும் இறைவேண்டலின் துணையோடு நடக்கின்றது.

'இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர்' என்று பதிவு செய்கின்றார் லூக்கா.

ஆக, இறைவன் - இயேசு – சீடர்கள் என்று குழுவுக்குள் நடந்தேறுகிறது இந்நிகழ்வு. 

முதல் கேள்வி, 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' இந்தக் கேள்விக்கு விடையாகக் கூறப்படுகின்ற மூன்று விடைகளும், நேற்றைய நற்செய்தி வாசகத்தில், ஏரோது கேள்விப்பட்ட வார்த்தைகளாகவே உள்ளன: 'திருமுழுக்கு யோவான், எலியா, இறைவாக்கினருள் ஒருவர்.'

ஆக, சீடர்கள் மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாக இருக்கின்றனர். 

இரண்டாவது கேள்வி: 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' இந்தக் கேள்விக்கு பன்னிருவர் சார்பாக விடையளிக்கின்ற பேதுரு, 'நீர் கடவுளின் மெசியா' என்கிறார். இது பன்னிருவரின் தனிப்பட்ட அனுபவம்.

இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

(அ) 'உனக்கு நான் யார்?'

இறையனுபவம் மற்றும் இறையறிதலில் இந்தக் கேள்வி மிகவும் முக்கிமானது. பல நேரங்களில் நாம் எளிதாகக் கடந்து செல்ல விரும்பும் கேள்வியும் இதுவே. நம் உள்ளத்தில் கடவுள், 'உனக்கு நான் யார்?' என்ற கேள்வியைக் கேட்கின்றார். அதற்கான பதிலிறுப்பை நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக அளிக்க வேண்டும். அதனால்தான், 'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' என இயேசு கட்டளையிடுகின்றார். 

(ஆ) இறைவேண்டல்

பல நேரங்களில் இறைவேண்டல் என்பதை நாம் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்தல் என்று தவறாகப் புரிந்துகொள்கின்றோம். ஆனால், இறைவேண்டல் என்பது ஒரு வாழ்வியல் நிலை. நம் வாழ்வின் இருத்தல் மற்றும் இயக்கத்தில் இறைவனின் துணையை அறிதலே இறைவேண்டல். லூக்காவின் நற்செய்தியின்படி பன்னிருவரும் இறைவேண்டல் என்ற தளத்தில் இருந்ததால்தான் இயேசுவைப் பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்கின்றனர்.

(இ) இறையனுபவமே தொடக்கப் புள்ளி

'கடவுளின் மெசியா' என்ற இறையனுபவம், அவர் துன்புறுவார் என்று இயேசு முன்மொழியக் காரணமாக இருக்கின்றது. நாம் பெறுகின்ற இறையனுபவமே அவர் நம் வாழ்வில் செயலாற்றப் போவதற்கான தொடக்கப் புள்ளியாகவும் இருக்கிறது. 

இன்றைய முதல் வாசகத்தில் (ஆகாய் 2:1-9), ஆண்டவராகிய கடவுளின் கோவில் எருசலேமில் மீண்டும் கட்டப்படுகின்றது. 'இந்த இடத்தில் நலம் நல்குவேன்' என்று ஆண்டவராகிய கடவுள் மொழிகின்றார். அவர் இருக்கும் இடத்தில் நலம் (அமைதி) உருவாகிறது. அவர் இருக்கும் இடத்தில் வாழ்வின் முக்கியமான மறைபொருள்கள் நமக்கு புரியத் தொடங்குகின்றன.


2 comments:

  1. “தான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?” என்ற இயேசுவின் கேள்விக்கு சீடர்களின் பதிலாக வந்தது, அவர்களின் கேள்வி ஞானமெனில்,” நீங்கள் நான் யாரென்று சொல்கிறீர்கள்?” எனும் இயேசுவின் கேள்விக்கு சீடர்களின் பதில்..அவருடனான அவர்களின் அனுபவம்….ஆம்! இறை அனுபவம்!” கோவிலுக்குச் சென்றே கூட்டு செபத்திற்குப் பழக்கப்பட்ட நாம், இந்த கொரோனா காலங்களில் தனிமையில் இறைவனைச் சந்திக்க நமக்கு நேரம் கிடைத்திருப்பது ஒரு ‘ வரம்’ என்றே நினைக்கிறேன்! நான் என்னை யாரென்று உணர்வதற்கும் மேலாக “இறைவன்- நான்” இடையே உள்ள உறவைப் புரிந்து கொள்ள….அவரிடம் இன்னும் நெருங்க கிடைத்த நாட்கள் இவை என்றெண்ணுகிறேன். இதைத் தான் “ இறையனுபவம்” என்கிறார் தந்தை! இந்த அனுபவம், வார்த்தைகளைப் புறந்தள்ளி மௌனத்தையே மொழியாக்குகிறது.இந்த அனுபவம் அவர் என்னில் செயலாற்ற தொடக்கப் புள்ளி என்பது மகிழ்ச்சி தரும் வார்த்தை.ஏனெனில் புள்ளி வைத்த இறைவன் முழுக் கோலத்தையும் கண்டிப்பாக வரைந்து முடிப்பார்.என் வாழ்வின் ‘நலம்’ அவரே என்பதையும் அவரே எனக்குப் புரிய வைப்பார்.

    எந்தக் கலப்புமின்றி முழுக்க,முழுக்க “ இறையனுபவத்தையே” மையப்படுத்திய ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete