Wednesday, September 8, 2021

சிங்கத்தின் தேன் - 12

சிம்சோன் புதிரும் புதினமும்

பயம்

தான் செய்த தவற்றை இன்னொருவர் தன்னுடைய இருப்பாலேயே காட்டிவிட முடியும். எப்படி? தன் சகோதரன் ஏசாவை ஏமாற்றிவிட்டு, தந்தையின் ஆசீரைத் தட்டிப் பறித்து, தாய்மாமன் லாபானின் வீட்டுக்கு ஓடுகிறான் யாக்கோபு. அங்கே லாபானின் இளைய மகள் ராகேலைக் காதலிக்கிறான். ஆனால், லேயாவை அவனுக்கு மணமுடித்து வைக்கிறான் லாபான். 'என்ன இப்படிச் செய்துவிட்டீர்?' என லாபானிடம் யாக்கோபு கேட்க, 'மூத்தவள் இருக்க, இளையவளைத் தருவது எங்கள் வழக்கமல்ல! எனப் பதிலிறுக்கிறார். 'மூத்தவன் இருக்க இளையவன் ஆசீரைத் தட்டிப் பறிப்பது உங்கள் வழக்கமாக இருக்கலாம்! ஆனால், அது எங்கள் வழக்கமல்ல!' என்று லாபான் தன் தவற்றைச் சுட்டிக்காட்டித் தன்னை அவமதித்ததாக எண்ணிய யாக்கோபு, எப்போதெல்லாம் லேயாவைப் பார்க்கின்றானோ, அப்போதெல்லாம் அவள்மேல் எரிச்சல் கொள்கிறான். ஏனெனில், லேயா அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டுவதாக எண்ணினான் யாக்கோபு. மனோவாகிற்கும் இனி தன் மனைவியைக் காணும்போதெல்லாம் இந்த அவமதிப்பு நினைவிற்கு வர, அவன் அவள்மேல் எரிச்சல் கொள்வான். பிறக்கப் போகும் தன்னுடைய மகன் வளர்ந்து, புரிந்துகொள்வதற்கு அரிய, அசாதரணமான, வியத்தகு செயல்களைச் செய்யும்போதெல்லாம், செய்வதைக் கேள்விப்படும்போதெல்லாம், 'அது வியப்புக்குரியது' என்று சொல்லித் தன்னை வாயடைத்த இந்த அந்நியனின் வார்த்தைகள் மனோவாகின் நினைவிற்கு வரும்.

தன்னை வாயடைக்கச் செய்த வானதூதரின் வார்த்தைகளைச் செரிக்க முடியாத மனோவாகு, தயக்கத்தோடும் குழப்பத்தோடும், கடவுள் உண்டு செரிக்குமாறு, ஓர் ஆட்டுக்குட்டியையும் உணவுப்படையலையும் பாறைமேல் ஆண்டவருக்குப் படைக்கின்றார். வானதூதர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், மனோவாகு எப்போது ஆடு பிடிக்கச் சென்றார் என்பதும், உணவுப்படையலை எப்போது தயாரித்தார் என்பதும் தெரியவில்லை. வானதூதர் காத்திருந்தாரா? வானதூதர் காத்திருந்தபோது இல்லம் சென்று உணவு தயாரித்தது யார்? மனோவாகு மட்டுமா? அல்லது மனோவாகும் அவனுடைய மனைவியுமா? மனோவாகு நகர்ந்து, நகர்ந்து சென்று திரும்பும்வரை வானதூதர் காத்திருந்தாரா? அல்லது வயல்வெளியில் தன் மனைவி மேய்த்துக்கொண்டிருந்த ஆட்டுக்குட்டிகளில் ஒன்றைப் பிடித்து, அங்கிருந்த தானிய சேமிப்பு அறையிலிருந்த சமையலறையில் அவர்கள் உணவு சமைத்தனரா? தெரியவில்லை! மனோவாகு, பாறைமேல் உணவுப்படையலை வைத்த அந்த நிமிடமே, வானதூதர், ஓர் அற்புதம் செய்கின்றார். தன் பெயர் வியப்புக்குரியது என அவர் சொல்லியதுபோல, வியப்புக்குரிய ஒன்றை இப்போது செய்கின்றார். பாறையிலிருந்து நெருப்பை உண்டாக்குகிறார். 'பலிபீடத்திலிருந்து தீப்பிழம்பு வான் நோக்கி மேல் எழும்பியபோது அப்பிழம்பில் ஆண்டவரின் தூதரும் மேல் நோக்கிச் சென்றார்.' மனோவாகும் அவன் மனைவியும் அதைப் பார்த்து முகம் தரைப்பட விழுந்தனர். இப்போதுதான், வந்திருந்தவர் 'ஆண்டவரின் தூதர்' என மனோவாகு அறிந்துகொள்கிறான். அவன் தன்னுடைய பெயருக்கேற்றாற்போல மிகவும் தாமதமாகவே இருக்கிறான்

'ஆண்டவரின் தூதர் மனோவாகிற்கும் அவன் மனைவிக்கும் மீண்டும் தோன்றவில்லை' என்று பதிவு செய்கின்றார் ஆசிரியர். விவிலியத்தில், ஆண்டவர் அல்லது ஆண்டவரின் தூதர், தன்னை மற்றவர்கள் கண்டவுடனேயே மறைந்துவிடுவதும், பின் அவர்களுக்குத் தோன்றாமல் இருப்பதும் இயல்பு. லூக்கா நற்செய்தியில், எம்மாவு நிகழ்வில், அப்பம் பிடுகையில், உடன் வந்தவர் இயேசுதான் என அறிந்த அந்த நொடியில், இயேசு அவர்களிடமிருந்து மறைந்துவிடுகின்றார். பின் அவர்களுக்குத் தோன்றவே இல்லை. மீண்டும் தோன்றாதவர்தான் கடவுள். மீண்டும் மீண்டும் தோன்றுபவர்கள் சாதாரண மனிதர்களே

'நாம் செத்தோம். ஏனெனில், நாம் கடவுளைப் பார்த்துவிட்டோம்' என மனைவியிடம் பதறுகின்றான் மனோவாகு. இந்தப் பயம் கடவுளின் தூதரைப் பார்த்ததால் மட்டுமல்ல. மாறாக, வானதூதர் தங்களுக்குச் சொன்ன அனைத்தும் விரைவில் நிகழ்ந்தேறிவிடும் என்பதைக் குறித்தும் பயப்படுகிறான் மனோவாகு. பிறக்கப் போகும் குழந்தை, தங்களுடைய குழந்தை, இவ்வளவு ஆண்டுகளாகக் காத்திருந்து மன்றாடிப் பெற்ற அந்தக் குழந்தை பற்றியும் பயந்தான். தன் மனைவியின் வயிற்றின் தண்ணீர்க் குடத்திற்குள் நீந்தத் தொடங்கிய அந்தக் குழந்தையைச் சுற்றியிருந்த ஊடுருவ முடியாத புதிர் அல்லது மறைபொருள் என்னும் சவ்வு பற்றியும் பயந்தான் மனோவாகு.

(தொடரும்)


1 comment:

  1. நேற்றையப் பதிவு முழுவதும் “ பாவம்” எனும் வார்த்தையால் நிறைந்திருந்த தந்தையின் படையல் இன்று “ பயம் ” எனும் உணர்வைத் தூக்கிப்பிடிக்கிறது. லேயாவைக் காணும்போதெல்லாம் எரிச்சல் யாக்கோபிற்கு.கடவுளின் தூதரையும்…அவர் முன்னுரைத்த செய்திபற்றி நினைக்கும் போதெல்லாம் எரிச்சல் மனோவாகுவிற்கு. பயம் பெற்றெடுத்த பிள்ளை தானே எரிச்சல்!. இவர்களுக்கு ஏற்பட்ட பயத்திற்குக் காரணம் அவர்கள் மடியில் இருந்த கனம்! ‘இறைவன் பார்த்துக்கொள்வார்’ என்ற இலேசான மனமின்றி இவர்களுக்குத் தேவையானதும்…தேவையற்றதுக்குமான கனமே பயத்தின் காரணம்.
    தாங்கள் மன்றாடிப் பெற்ற குழந்தை குறித்தும்….இன்னும் கண்ணால் காணாத
    அக்குழந்தை குறித்த மறைபொருள் குறித்தும் பயம் மனோவாகுவிற்கும், அவன் மனைவிக்கும். படைத்தவன் வைத்த புள்ளிமேல் கோலம் போட்டால் அனைத்தும் சுபமே! அஃதில்லாமல் தான்தோன்றித்தனமாய் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கோடு இழுக்க முற்பட்டால் அத்தனையும் அலங்கோலமே!
    நச்சென்று ஒரு முறை நம் மனங்களில் தோன்றி அவர் பிரசன்னத்தை உணர்த்தி மறைபவரே கடவுள். அப்படியின்றி யாருக்கும் எந்த பலனின்றி மீண்டும் மீண்டும் தன்னை நிருபிக்க முற்படுபவனே மனிதன்!…அருமை!
    இறைவனை முன்னிறுத்தி வாழும் மனிதர்களுக்கு வாழ்வில் “ பயம்” தேவையில்லை என்ற உணர்வைத் தந்தை ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete