Wednesday, September 29, 2021

ஆண்டவரின் மகிழ்வு

இன்றைய (30 செப்டம்பர் 2021) முதல் வாசகம் (நெகே 8:1-12)

ஆண்டவரின் மகிழ்வு

இன்றைய முதல் வாசகத்தில் எஸ்ரா மற்றும் நெகேமியா தலைமையில் நடைபெறுகின்ற திருநூல் வாசிப்பு நிகழ்வு நம் கண்முன் கொண்டுவரப்படுகின்றது. பாபிலோனியாவில் அடிமைப்படுத்துக்கிடந்த மக்கள் மீண்டும் தங்கள் நகருக்குத் திரும்புகின்றனர். ஆலயம், மண், ஓய்வுநாள், தோரா என அனைத்தையும் இழந்து நின்றவர்கள் ஒவ்வொன்றாகத் திரும்பப் பெறுகின்றனர். தோராவின் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகள். ஆக, அவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் தங்களுடைய மூதாதையருடன் கடவுள் செய்த உடன்படிக்கையை நினைத்தும், அந்த உடன்படிக்கையை தாங்கள் மீறியதை நினைத்தும் அழுது புலம்புகின்றனர். ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் அழுகையும் அங்கே பெருக்கெடுத்து ஓடுகின்றது.

'நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்!' என்றும், 'வருந்த வேண்டாம்!' என்றும் சொல்லும் எஸ்ரா, தொடர்ந்து, 'ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என்கிறார்

'ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என்ற வாக்கியம் பல நிலைகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. 'ஆண்டவர் மக்கள் மேல் கொள்ளும் மகிழ்வு,' 'மக்கள் ஆண்டவர்மேல் கொள்ளும் மகிழ்வு,' 'ஆண்டவரில் மக்கள் மகிழ்தல்,' 'ஆண்டவர் தருகின்ற மகிழ்ச்சி' என்று பல நிலைகளில் புரிந்துகொள்ளப்பட்டாலும், மகிழ்ச்சி என்பது நமக்கு வலிமை தருகின்றது என்பது இங்கே முன்மொழியப்படுகின்றது.

நம் அழுகையும், கண்ணீரும், வருத்தமும் நம் ஆற்றலை நம்மிடமிருந்து உறிஞ்சுகின்றன. ஆனால், மகிழ்ச்சி நம் ஆற்றலைப் பெருக்குகிறது. ஏற்கெனவே தங்கள் வலிமையை இழந்து நிற்கும் மக்கள் புத்துணர்ச்சி பெறுமாறு தூண்டுகின்றார் எஸ்ரா.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தனக்கு முன்பாக எழுபத்திரண்டு பேரை இருவர் இருவராக அனுப்புகின்றார். செல்கின்ற அவர்கள் அனைவருக்கும் 'அமைதியை' வாழ்த்தாகக் கூறுகின்றனர். அமைதியை விரும்புபவரிடம்தான் அமைதி தங்கும் என்பது இயேசு தருகின்ற புதிய செய்தியாக இருக்கின்றது.

ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்ளும் உள்ளம் வலிமை பெறுகின்றது

அமைதியை விரும்பும் உள்ளம் அமைதியைப் பெற்றுக்கொள்கின்றது.

இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்வது என்ன?

(அ) இறைவார்த்தை வாசிக்கப்படுவதை நாம் கேட்கும்போது, அல்லது இறைவார்த்தையை நாம் வாசிக்கும்போது, நாம் கொடுக்கும் பதிலிறுப்பு எப்படி இருக்கிறது? குறிப்பாக, நற்செய்தி நூல்கள் வாசிக்கப்படும்போது நாம் வெறும் வார்த்தைகளைக் கேட்டு நிறுத்திக்கொள்கிறோமா? அல்லது அந்த வார்த்தையின் பின்னால் மறைந்திருக்கும் கிறிஸ்து நிகழ்வில் பங்கேற்கிறோமா?

(ஆ) வார்த்தையை வாசிக்கக் கேட்டவர்கள் விருந்துக்குச் செல்லுமாறு பணிக்குமாறு எஸ்ரா. இல்லாதவர்களுடன் பகிர்ந்து உண்ணுதலைக் கற்பிக்கின்றார். ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்ளும் ஒருவர் யாவரும் மகிழ்ந்திருக்கவே விரும்புகிறார்.

(இ) திருச்சட்டம் அமைதியைத் தருகின்றது. திருத்தூதர்கள் அமைதியை அறிவிக்கின்றனர். அமைதியை விரும்புபவரிடமே அமைதி தங்குகிறது எனில், நம் விருப்பம் என்ன?


2 comments:

  1. “ஆண்டவரின் மகிழ்வே நமது வலிமை” என்பதை நம்புவோரை அழுகையோ,புலம்பலோ, வியாதியோ, சாவோ…எதுவும் மேற்கொள்ள முடியாது என்பதை எடுத்துக் கூறும் ஒரு பதிவு. ‘ஆண்டவரின் மகிழ்வு’ நமக்குக் கிடைப்பது அவரது ‘வார்த்தைகளின்’ வாயிலாகவே என்பதால் அவற்றை வாசிக்கும்போதோ இல்லை வாசிக்கப்படுவதைக் கேட்கும் போதோ அவை நமக்கு வெறும் ஒலி எழுப்பும் ஓலங்களாய் இல்லாமல்,அவற்றிற்குப் பின்னால் மறைந்திருக்கும் அர்த்தம் நம் மனத்தில் கிறிஸ்துவைக் கொண்டுவர வேண்டும் என்பதும் உண்மை எனில், நாம் விருந்திற்குச் செல்லவும்….அந்த விருந்தில் மகிழ்ச்சி கொள்ளவும் உரிமை பெற்றவர்கள்.மகிழ்ச்சி தரும் மன அமைதியும் நம்மில் குடிகொள்கிறது எனில், இதற்கெல்லாம் அஸ்திவாரமான இறைவார்த்தைகளை மனமுவந்து கேட்க நம்மை உந்தி எழுப்பும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete