Sunday, September 5, 2021

சிங்கத்தின் தேன் - 9

சிம்சோன் புதினமும் புதிரும்

கேள்வி

இன்னொன்றையும் இங்கே கவனிக்க வேண்டும். 'அன்று என்னிடம் வந்த மனிதர்' என்று மனைவி, மனோவாகிடம் சொல்கிறாள். ஆனால், அவனோ, 'ஆண் பெண்ணிடம் வருதல்' என்றால் 'ஆண் பெண்ணுடன் உடலுறவு கொள்தல்' என்ற பொருளை மனத்தில் இருத்தியவனாய், அதைத் தவறியும் தான் ஆமோதிக்கவில்லை என்று காட்டுவதற்காக, 'இப்பெண்ணிடம் பேசிய மனிதர் நீர்தாமா?' எனக் கேட்கின்றான். இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணை வைத்துப் பேசும் அந்த உரையாடலில், அப்படிப் பேசுவதுதான் சரி என்று அவன் நினைத்தான். ஏனெனில், 'இப்பெண்ணிடம் வந்தவர்' என்று மனோவாகு அந்த அந்நியனிடம் சொல்லியிருந்தால், மூன்று பேருமே ஒருவர் மற்றவரைப் பார்க்கத் துணியா வண்ணம் முகங்களை வௌ;வேறு திசைகளில் திருப்பியிருப்பார்கள். 'என் மனைவியுடன் நீ உடலுறவு கொண்டாயா?' என்று மனோவாகு அந்நியனிடம் கேட்டால், அவன் அங்கே தன் இயலாமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அந்நியன் தன் செயலுக்காக வெட்கப்பட வேண்டும். மனைவி அவமானம் அடைய வேண்டும். மூன்று பேருக்கும் வலிக்காத வண்ணம், புத்திசாலித்தனமாக, 'இப்பெண்ணிடம் பேசியவர் நீர்தாமா?' எனக் கேட்கின்றான் மனோவாகு. இப்படி அவன் கேட்டதில், 'இந்த அந்நியன் பேசியிருப்பானே தவிர, உடலுறவு கொண்டிருக்க மாட்டான்' என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொள்ளும் நிலையை நாம் காண முடிகிறது. 'ச்சே...ச்சே... அப்படி எல்லாம் நடந்திருக்காது!' என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லியிருப்பான் அவன். அல்லது, கடவுளின் மனிதர் என்பதால், கடவுளைப் போலவே, தன்னுடைய வார்த்தையாலேயே அனைத்தையும் - குழந்தையையும் சேர்த்து – உருவாக்கிவிட அவரால் இயலும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தானா?

மேலும், மனோவாகு, வயலில் நின்ற அந்நியனை, 'மனிதன்' என அழைக்கின்றானே தவிர, 'கடவுளின் மனிதன்' அல்லது 'கடவுளின் மனிதர்' என்று அழைக்கவில்லை. இந்த 'மனுஷியிடம்' வந்த 'மனுஷன்' நீதானோ? அல்லது இந்தப் பெண்ணிடம் வந்த ஆண் நீதானோ? என்று கேட்டு, தன் மனைவியையும், அந்த அந்நியனையும் ஒரே தளத்தில், நேருக்கு நேர் நிறுத்துகிறான் மனோவாகு. அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்திவிட்டு, தான் அவர்களுக்கு வெளியே, ஒரு நடுவன்போல், அந்த நிகழ்வில் தொடர்பில்லாதவன்போல் நின்று, தன் சந்தேகத்தையும், பொறாமையையும் அந்த ஒற்றைக் கேள்வியில் திணித்துவிடுகிறான்.

'நான் தான்' என மிகவும் சுருக்கமாகப் பதிலிறுக்கிறார் வானதூதர்.

'உம் வார்த்தைகள் நிறைவேறுவனவாக!' என்று வாழ்த்துகின்ற மனோவாகு, 'பையனின் நெறிமுறையும் செயலும் எப்படியிருக்கும்?' எனக் கேட்கின்றான். இந்தக் கேள்வியிலும் மனோவாகின் உள்ளத்திலிருக்கும் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் வெளிப்படுகிறது. அவன் வந்த தூதரையும் நம்பவில்லை. வாக்களிக்கப்பட்ட மகனையும் நம்பவில்லை. மேலும், தான் கடவுளின் மனிதரோடுதான் உரையாடிக்கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இல்லை. அப்படி ஒருவேளை இருந்திருந்தால், வானதூதரைக் கண்ட உடனேயே, அவன் தரையில் விழுந்து வணங்கியிருப்பான். இப்படி மரியாதைக் குறைவாக அவரிடம் பேசியிருக்க மாட்டான்.

இங்கே, நமக்கு இன்னொரு ஐயமும் எழுகிறது. தன் முதலாவது காட்சிக்கும், இரண்டாவது காட்சிக்கும் இடையே 'வானதூதர்' தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டாரோ? ஏனெனில், மனைவி சொன்னது போல, 'வந்த மனிதரின் தோற்றம் கடவுளின் தோற்றம் போலவோ, அச்சத்திற்குரியது போலவோ இல்லை'. அல்லது மனோவாகுக்கு வந்த மனிதரின் தோற்றம் அச்சத்தைத் தரவில்லையா? அல்லது மனைவி அவனிடம் அவரைப் பற்றி மிகைப்படுத்திப் பேசினாளா? அல்லது, வானதூதரின் தோற்றம் மாறவில்லை, மாறாக, மனைவியும் கணவனும் தங்களுடைய நிலையில் நின்று கொண்டு, வந்த அந்நியரின் தான்மையைக் கண்டறிய விரும்புகின்றனர். மனைவிக்கு, தனக்குக் குழந்தைப்பேற்றை வாக்களித்த கடவுளாக அந்நியன் தெரிகிறான். கணவனுக்கோ, தன் இயலாமையையும், தன் இல்லாமையையும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட சக ஆண்மகனாக அந்நியன் தெரிகிறான். 

(தொடரும்)


1 comment:

  1. ஒரு பெண்ணும் ஒரு அந்நியனும் சந்நித்தால் அது உடலுறவில் தான் முடியவேண்டும் என்ற நியதியிலிருந்து கொஞ்சம் பின்வாங்கிய மனோபாகு, அந்த எண்ணத்தைக் கைவிட்டவனாய்..ஆனாலும் அவர்களைத் தன்னிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறான்.சந்தேகத்தில் கேள்வி எழுப்பிய மனோபாகுவிற்கு “ நான் தான்” என்று ஒற்றைவார்த்தை பதிலாக வருகிறது.வானதூதரின் தோற்றம் தந்த சந்தேகத்தில் கணவன்- மனைவி இருவருக்கும் தலைதூக்கியது இருவேறு சந்தேகங்கள்.மனைவிக்கு குழந்தை பேற்றைத் தந்த கடவுளாகத் தெரிந்த அதே அந்நியன், கணவனுக்குத் தன் இயலாமையையும்,இல்லாமையையும் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆண்மகனாகத் தெரிகிறான். உள்ளத்தைக் காட்டும் “கண்ணாடி.” இங்கே மனோவாகுவும்..அவன் மனைவியும் தங்களது எண்ணம் அந்த அந்நியனில் நிறைவேறியதை சரியாகவோ…தவறாகவோ அவரவரின் தேவைக்கேற்ப உண்மையாக்கிப் பார்க்கின்றனர்….. விருவிருப்புக் குறையாமல் நடைபோடும் தந்தையின் எண்ணங்கள்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete