Monday, September 13, 2021

திருச்சிலுவை மகிமை


இன்றைய (14 செப்டம்பர் 2021) திருநாள் 

திருச்சிலுவை மகிமை

'யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால், நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது' என்கிறார் புனித பவுல் (காண். 1 கொரி 1:23).

இன்று, 'திருச்சிலுவையின் மகிமை' திருவிழாவைக் கொண்டாடுகின்றோம். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பவுல், 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிடமும் இருப்பதாக!' என்று பிலிப்பியருக்கு அறிவுரை வழங்கும் பகுதியில், கிறிஸ்து இயேசுவின் மனநிலை எப்படிப்பட்டது என்பது ஓர் அழகான பாடல் வழியாக எடுத்துரைக்கின்றார். தொடக்கத் திருஅவையின் தொடக்கத்தில் வழக்கத்திலிருந்த இப்பாடல் இயேசுவைப் பற்றிய மூன்று விடயங்களை எடுத்துரைக்கின்றது:

ஒன்று, இயேசு அடிமையின் வடிவம் ஏற்றார். அதாவது, தலைவராக இருந்தவர் அடிமையாக மாறினார். பவுலின் காலத்தில் அடிமைகள் தங்களுக்கென்று எந்தவொரு பெயரோ, அடையாளமோ இல்லாதவர்கள். கடவுள் தன்மையைக் கொண்டிருந்த இயேசு அதை விடுத்துவிட்டு அடிமையின் வடிவம் ஏற்கின்றார். 

இரண்டு, மனிதரின் உருவம் என்பது இயேசுவின் மனுவுருவாதலைக் குறிக்கின்றது. இங்கே இயேசு வெறும் உருவமாக அல்ல, மாறாக, உண்மையாகவே முழு மனிதநிலையை ஏற்கின்றார். துன்பத்தை ஏற்கும் நிலையில் அவரின் மனிதத்தன்மை வெளிப்படுகின்றது.

மூன்று, சிலுவையின் மரணம். சிலுவை என்பது உரோமையர்கள் கண்டுபிடித்த ஒரு கொலைக் கருவி. சிலுவையில் அறைதல் என்பது பெரிய அவமானமாகக் கருதப்பட்டது. 

ஆனால், இந்த மூன்றும் தலைகீழாக மாறுகின்றன.

தாழ்த்தப்பட்ட ஒன்று உயர்த்தப்படுகிறது.

காயப்பட்ட ஒன்று குணப்படுத்துகிறது.

வீழ்ச்சியுற்ற ஒன்று எழுச்சியடைகிறது.

கடவுள் என்னும் பெயரை ஒதுக்கி வைத்தவர், அடிமை போலத் தன் பெயரை இழந்தவர், மனிதர்போல தன் பெயரின் தான்மை தெரியாத இயேசுவின் பெயர் உயர்ந்த பெயராக அவர்களுக்குத் தரப்படுகின்றது.

இன்றைய திருநாள் நமக்குச் சொல்வது என்ன?

(அ) முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் சொல்வது போல, இயேசுவை உற்று நோக்கும் அனைவரைம் நலம் பெறுவர்.

(ஆ) சிலுவை என்பது மாற்றம் நடக்கும் என்னும் எதிர்நோக்கைத் தருகின்றதே அன்றி, உத்தரவாதம் தருவதில்லை.

(இ) நம் வாழ்வில் சிலுவை என்பது பல வடிவங்களில் வருகின்றன. அவற்றை நோக்கு நம் கண்களை எழுப்பும்போதெல்லாம் இந்த நாளின் பொருளை நாம் உணர்கின்றோம்.


2 comments:

  1. Exaltation of the HOLY CROSS 🙏

    ReplyDelete
  2. ஒவ்வொரு புனித வெள்ளியன்றும் குருவானவர் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் ஆடைகளை ஒவ்வொன்றாக விலக்கி “ திருச்சிலுவை மரம் இதோ!” என்று உச்ச ஸ்தாயியில் பாடும் போதெல்லாம் நமக்கு மெய் சிலிர்க்கும். காரணம்…தந்தை சொல்வது போல தொடக்கத் திருஅவையின் பாடலின் கருத்து தலைகீழாக மாறியதுதான்! “தாழ்த்தப்பட்ட ஒன்று உயர்த்தப்பட்டதும்…. காயப்பட்ட ஒன்று குணப்படுத்தியதும்…..வீழ்ச்சியுற்ற ஒன்று எழுச்சி அடைந்ததுமே!”
    நம் வாழ்விலும் ‘சிலுவை’ எனும் விஷயம் பொருள் மாறிப் பேசப்படும் போதும்…. வாழ்வே சமயங்களில் வாழ்வே நமக்குத் தூக்க முடியா சிலுவையாகிப் போகும் போதும் அன்று பாலைவனத்தில் இஸ்ரேல் மக்கள் ஏறெடுத்துப் பார்த்த சிலுவையை நாமும் கண்முன் கொணர்வோம்! நம் சிலுவைகள் நமக்கு மாற்றத்தைக் கொணரும் என நம்புவோம்!

    இந்நாளில் நான் ஆசிரியையாகப் பணிபுரிந்த திருச்சிலுவைப் பள்ளிகளின் கன்னியர்களை மகிழ்ச்சியோடும்,நன்றியோடும் நினைத்துப் பார்க்கிறேன்! சிலுவையின் மகிமை உணர்த்திய தந்தைக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete