Sunday, September 12, 2021

சிங்கத்தின் தேன் - 14

சிம்சோன் புதிரும் புதினமும்

குட்டி சூரியன்

சோரா ஒரு உயர்ந்த மலைப்பகுதி. எதிரிகள் தங்களுடைய பாளையத்தை அங்கே அமைக்க விரும்பினர். இஸ்ரயேல் மக்களோ அதைக் காத்துக்கொள்வதிலேயே கவனமாக இருந்தனர். ஒலிவத் தோட்டங்களும், கேதுரு மரங்களும் விளைந்து கிடந்த அந்தப் பகுதியில், ஒருநாள் மதிய நேரத்தில், ஒரு பெண்ணும் அவளுடைய மகளும், அங்கிருந்த ஒலிவ மரங்களை உலுக்கியும், நீண்ட குச்சியால் அடித்தும், ஒலிவக் காய்களைப் பறித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற சில நிமிடங்களில், அங்கே வந்து சேர்ந்தாள் சிம்சோனின் தாய். வயலில் நின்று வேலை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு பேறுகால வலி வரவே, சீக்கிரம் வீடு திரும்பலாம் என நினைத்து, வியர்த்து வியர்த்து வந்தவள், பாதி வழி வந்துவிட்டாள். மீதி வழி போக முடியாமல், வந்த வழி திரும்ப முடியாமல், தன் வயலுக்கும் வீட்டிற்கும் இடையே இருந்த ஓர் ஒலிவ மரத்தடியில் அமர்கிறாள். அமர்ந்த இடத்தில் சில ஒலிவக் காய்கள் சிதறிக்கிடக்கின்றன. ஒரு கையால் அவற்றை ஒதுக்கிவிட்டு, மறு கையை மெதுவாக ஊன்றி அமர்ந்து, மெதுவாக மரத்தில் சாய்கிறாள். உடலெல்லாம் வியர்க்கிறது. தூரத்தில் ஆதவன் மறையத் தொடங்குகிறான். ஒலிவ மரங்களிடையே அவனது கதிர்கள் மறைந்து வந்து, இவளது வயிற்றில் விழுகின்றன. யாருமற்ற தனிமையில், ஆதவனும் அங்கிருந்த சில பறவைகளும் பார்த்துக்கொண்டிருக்க, ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்கின்றாள் அவள். அந்தக் குழந்தையை ஒரு கையால் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு, இடுப்பில் செருகியிருந்த கருக்கரிவாளால், தொப்புள் கொடியை அறுத்து ஒரு முடிச்சிடுகிறாள். ஆதவனின் கதிர்கள் குழந்தையின் கண்களில் பட, அவன் மெதுவாக அழத் தொடங்குகிறான். 'அச்சச்சோ! கண் கூசுதுடா!' என்றவள், குழந்தையை மறுபக்கம் திருப்பிக்கொண்டே, 'உன் பெயர் ஷிம்ஷோன்' என்று அவனுடைய காதுகளில் சொல்கிறாள். அசாதாரண குழந்தை என்றதால், குழந்தை பிறப்பும் அசாதாரணமாக நிகழ்ந்து எண்ணி அவள் தன் குழந்தையைப் பார்த்து மௌனமாகப் புன்னகைக்கிறாள்.

'ஷிம்ஷோன்' என்றால் 'குட்டி சூரியன்' என்றும், 'ஷேமேஷ்' மற்றும் 'ஓன்' என்று வார்த்தையை இரண்டாகப் பிரித்தால், 'சூரியனும்' 'ஆற்றலும், வீரியமும், திடமும்' என்றும் மொழிபெயர்க்கலாம். புராணங்களில் வந்து சென்ற 'ஆதவ கதைமாந்தர்களான' ஹெர்குலெஸ், பெர்ஸெயுஸ், ப்ரோமேதேயுஸ், மோப்ஸூஸ் போன்றவர்களுக்கும், சிம்சோனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும், யூத இலக்கியங்கள், சிம்சோனை அவர்களைவிட மேன்மையானவராக முன்வைக்கின்றன. 'கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்ற நம் கடவுளாகிய ஆண்டவர்' (காண். திபா 84:11) என்னும் தூயவரால் அழைக்கப்பட்டவர் சிம்சோன் எனவும், 'கடவுள் ஒட்டுமொத்த உலகைக் காப்பது போல,  இஸ்ரயேல் முழுவதையும் சிம்சோன் காத்து வழிநடத்தினார்' எனவும் அவை சொல்கின்றன

'பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார்' என்று பதிவு செய்கின்றார் ஆசிரியர். இதற்கு, தால்முத் பின்வருமாறு விளக்கம் தருகின்றது: 'சிம்சோன் ஆசி பெற்றவனாய் இருந்தான். 'அமா' என்றால் 'அடிக்கம்பு' என்று பொருள். 'அடிக்கம்பு' என்பது 'ஆண்குறியின்' மங்களச் சொல்.' 'அவனுடைய அடிக்கம்பு மற்ற ஆண்களுடையது போல இருந்தது. ஆனால், அதிலிருந்து புறப்படும் விதை வேகமாக ஓடும் காட்டாறு போல இருந்தது' என்று தால்முத் தொடர்கிறது. தால்முத்தின் இந்த விளக்கவுரைக்குப் பின், சிம்சோனின் பிந்தைய வாழ்வு நிகழ்வுகள் இருந்தன என்பது இன்னும் சில பக்கங்களில் நமக்குத் தெளிவாகும்

(தொடரும்)

 

2 comments:

  1. தந்தையின் எழுத்து நடை புருவங்களைத் தூக்க வைக்கிறது. அந்த அசாதாரணக் குழந்தையைப் பெற அந்தத் தாய் மேற்கொண்ட பேறுகால வேதனைகளையும், அவளை வேடிக்கைப் பார்த்த ஆதவன்..மரம்….செடி…கொடி இவை அவளின் வேதனைகளுக்கு சாட்சியாக நின்றதையும்…அவற்றுக்கு மத்தியில் அந்த “விநோதத்தின் மொத்த உருவத்தை” எவரின் உதவியுமின்றி பெற்றெடுத்ததையும் தந்தை இயம்பியுள்ள விதம் ஏதோ அத்தனைக்கும் சாட்சியாக இவரும் நின்றது போல் தெரிகிறது.

    புராணங்களில் வரும் அத்தனை கதை மாந்தர்களையும் மிஞ்சியவனாக இருக்கிறான் அந்த “ குட்டி சூரியன்!” “கடவுள் ஒட்டுமொத்த உலகைக் காப்பது போல, இஸ்ரேல் முழுவதையும் சிம்சோன் வழிநடத்தினார்” எனும் வரிகள் “ கேடயமும்,கவசமுமாய் இருக்கும் நம் கடவுளாகிய ஆண்டவரின் வழித்தோன்றலாய் இவன் தெரிகின்றான்” என்பதைப் பேசுகின்றன.

    அவன் தனிமனிதனாய் மட்டுமல்ல…அவன் சந்ததிகளும் வீரியமுள்ளவர்களாயிருக்க ஆண்டவர் அவனை ஆசீர்வதித்தார்! என்கிறார் தந்தை! ஆசீர்வாதத்தின் கனி ஒன்றின் கதையை இத்தனை அழகாக எடுத்துரைக்க எத்தனை பேரால் இயலும்? தந்தைக்கு என் வியப்பு கலந்த வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete