Monday, September 27, 2021

வானத்திலிருந்து தீ

இன்றைய (28 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 9:51-56)

வானத்திலிருந்து தீ

இயேசுவுடைய சீடர்கள் ரொம்ப கோபக்காரங்களா இருக்காங்க! அவர்களைச் சமாளிப்பதே இயேசுவுக்கு மிகப் பெரிய வேலையாக இருந்திருக்கும்!

தங்களைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுவதைக் கண்டு நிறுத்தப் பார்க்கின்றனர். இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரிய நகர்மேல் தீ விழுமாறு செய்யவா? எனக் கேட்கின்றனர். இருமுறையும் இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார்.

'விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே இயேசு எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்தார்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா. லூக்காவின் நற்செய்தி பயணத்தின் நற்செய்தி என அழைக்கப்படக் காரணம் இந்த வாக்கியமே. ஏனெனில், லூக்காவின் இயேசு பயணம் செய்துகொண்டே இருக்கின்றார். அவருடைய போதனைகள் மற்றும் வல்ல செயல்கள் அனைத்தும் அவருடைய பயணத்தின் நிகழ்வுகளாக அமைகின்றன.

சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். ஏனெனில், இயேசு தங்களைக் கடந்து செல்வதை அவர்கள் விரும்பவில்லை. ஒருவேளை, அவர் தங்களுடன் தங்கவில்லை என்று அவர்மேல் கோபித்திருக்கலாம். வழக்கமாக, கலிலேயாவிலிருந்து (வடக்கிலிருந்து) யூதேயாவுக்கு (தெற்கு நோக்கி) பயணம் செய்யும் யூதர்கள், சமாரியா நிலப்பகுதியைத் தவிர்த்து, யோர்தானை ஒட்டிய பகுதியில் நடந்துசெல்வார்கள். ஏனெனில், சமாரிய நிலப்பகுதி தீட்டானது என்பது அவர்களுடைய நம்பிக்கை. இயேசு அந்த நம்பிக்கையை உடைக்கின்றார். சமாரியப் பகுதி வழியாகப் பயணம் செய்ய விரும்புகின்றார்.

சமாரியர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதைக் கண்டு, தங்கள் போதகரிடம் 'வெரி குட்' வாங்குவதற்காக, 'சமாரியக் கிராமத்தின்மேல் வானத்திலிருந்து தீ விழுமாறு செய்யவா?' எனக் கேட்கின்றனர்.

இயேசு தன் ஆற்றலை ஒருபோதும் தனக்காகவோ, அல்லது யாரையும் பழிதீர்க்கவோ பயன்படுத்தவில்லை. சாத்தான் அவரைப் பாலைவனத்தில் சோதித்தபோது, முதல் சோதனை அதுதான். கற்களை அப்பமாக மாற்றி பசியாற்றிக்கொள்ளுமாறு சாத்தான் தூண்டியபோது இயேசு மறுக்கின்றார்.

இங்கே, சீடர்கள் மற்றவர்கள்மேல் பழிதீர்த்துக்கொள்ள தங்கள் ஆற்றலைப் பயன்படுத்த நினைப்பதை இயேசு விரும்பவில்லை.

அதற்கும் முன்னதாக, தீமைக்குப் பதில் தீமை செய்வதோ, அல்லது உணர்வுப் பெருக்கில் ஒருவர் வினையாற்றும்போது அதே உணர்வுப் பெருக்கில் எதிர்வினை ஆற்றுவதோ தவறு என்பது இயேசுவின் புரிதலாக இருக்கின்றது.

இயேசு எதிர்வினை ஆற்றுவதற்குப் பதிலாக, அடுத்த முயற்சி என்ன என்பதைப் பார்க்கின்றார். வேறு ஊர் வழியாகப் பயணம் செய்கின்றார். எதிர்வினை ஆற்றி தன் ஆற்றலை விரயம் செய்ய அவர் விரும்பவில்லை.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) தூய்மை-தீட்டு என்ற நிலையிலோ, அல்லது அடிமைப்படுத்தும் நிலையிலோ சமூகம் அல்லது நாம் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் மீறுவது. ஏனெனில், தூய்மை-தீட்டு, மேட்டிமை-தாழ்மை என்பது நம் உள்ளத்து உணர்வுகளே தவிர வெளியில் அப்படி எதுவும் இல்லை.

(ஆ) நம் வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்பதை உணர்வது. இந்தப் பயணத்தில் தடைகள் வரலாம். நம்முடன் பயணம் செய்பவர்கள் நமக்கு இடர்கள் தரலாம். ஆனால், பயணம் தடைபடக் கூடாது. ஒரு பாதை அடைக்கப்பட்டால் மறு பாதையைக் கண்டுபிடித்து நாம் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். விண்ணேற்றம் ஒன்றே – அதாவது, மேன்மை அல்லது வெற்றி ஒன்றே – நம் இலக்காக இருக்க வேண்டும்.

(இ) எதிர்வினை ஆற்றுதல் பெரிய ஆற்றல் விரயம் என்பதை உணர்வது. சமாரியர்கள் இயேசுவின்மேல் எதிர்வினை ஆற்ற, சீடர்கள் சமாரியர்கள்மேல் எதிர்வினை ஆற்றுகின்றனர். ஆனால், இயேசு இரு நிலைகளிலும் தன் ஆற்றலைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கின்றார். நாம் பல நேரங்களில் நம்மை அறியாமல் எதிர்வினை ஆற்றிக்கொண்டே, அல்லது தேவைற்றவற்றுக்குப் பதிலிறுப்பு செய்துகொண்டே நம் ஆற்றலை வீணாக்குகின்றோம். ஆற்றலைத் தற்காத்தல் மிகப் பெரிய அவசியம். ஏனெனில், ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஓர் ஆற்றலை இன்னொரு ஆற்றலாக மட்டுமே மாற்ற முடியும்.

1 comment:

  1. நற்செய்தியைத் தருவதை மட்டுமின்றி அதை வாசிப்பவர் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்களையும் சேர்த்தே தந்துள்ளார் தந்தை.நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் எப்படிப் பார்க்கிறோமோ..அதுவே சமயங்களில் உண்மையாகி விடுகிறது. பல சமயங்களில் நம் மனமே நம்மை தப்பான வழித்தடத்தை…கானல் நீரை உண்மையென நம்பச்செய்கிறது. அதிலிருந்து விடுபடத்தான் இன்றைய வாசகங்கள் யோசனை சொல்கின்றன.நம் வாழ்க்கை எனும் பயணத்தில் யாரும்..எதுவும் நம் பயணத்தைத் தடை செய்யாமல் பார்த்துக்கொள்வதும்,செல்லும் பாதையை விடுத்து, சென்று சேரும் இடத்தையே நம் பயணத்தின் இலக்காக வைத்துக்கொள்வதும் முக்கியம்.ஒரு வழி அடைபட்டால் மாற்று வழி காணல் நம் கையில்தான் உள்ளது என்ற புரிதல் அவசியம்.பல நேரங்களில் தவறான புரிதல்கள் நம்மை எதிர்வினைக்கு இட்டுச் செல்வதையும்,நம் ஆற்றல் விரயமாவதையும் தவிர்த்து வெற்றி ஒன்றே நம் குறிக்கோள் என்பதை உணர்ந்தோமானால் வாழ்வும் நமதே! விண் வீடும் நமதே! என்பதை உணர்ந்தவராவோம்! வாழ்வின் புரிதலை எடுத்து வைக்கும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள் !!!

    ReplyDelete