Sunday, September 26, 2021

அன்புவெறி

இன்றைய (27 செப்டம்பர் 2021) முதல் வாசகம் (செக் 8:1-8)

அன்புவெறி

'சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்றுகொண்டிருக்கிறேன். அதன்மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கிறேன்.'

உங்களுக்கு யார்மேலாவது அன்பு இருக்கிறதா? எனக் கேட்டால், நீங்கள் வேகமாக யார் பெயரையாவது சொல்வீர்கள்.

உங்களுக்கு யார்மேலாவது அன்புவெறி இருக்கிறதா? எனக் கேட்டால், நீங்கள் என்ன பதிலிறுப்பீர்கள்?

'தன் காதலி இன்னொருவருடன் பேசியதால் காதலியைக் கொலை செய்த காதலன்' அல்லது, 'தன் மனைவியின் தவறான தொடர்பால் தன் நண்பனைக் கொல்லத் துணிந்த கணவன்' என்றெல்லாம் நாம் செய்தித்தாள்களில் வாசிக்கும்போது நம் உள்ளத்தில் எழும் உணர்வு என்ன? 'உணர்ச்சிவேகத்தில்' அவர்கள் செயல்பட்டார்கள் என்று நாம் எளிதாகச் சொல்லிவிடுகிறோம். 'பாதுகாப்பின்மையின் வெளிப்பாடு' என்று சிலர் சொல்வர்.

ஆனால், 'அன்புவெறி' என்ற புதிய சொல்லை இன்றைய முதல் வாசகம் நமக்கு அறிமுகம் செய்கிறது. ஆண்டவராகிய கடவுள் சீயோன்மீது, அதாவது எருசலேம் மீது, அன்புவெறி கொண்டு கனன்றுகொண்டிருப்பதாக – எரிந்துகொண்டிருப்பதாக – எழுதுகின்றார். மேலும், 'அன்புவெறியால் சினமுற்றிருக்கிறேன்' என்கிறார்.

அன்புவெறி இருந்தால் ஏன் சினம் வருகிறது? என்ற கேள்வியை நாம் கேட்கலாம்.

இந்தச் சினம் இருநிலைகளில் வருகின்றது: ஒன்று, தன் அன்புக்குரியவர்மேல் அதீத அன்பால் அவருக்கு தீங்கிழைக்க நினைக்கின்ற அனைவர்மேலும் சினம் வருகின்றது. இரண்டு, தன் அன்புக்குரியவர் தன்மீது அன்பு காட்டாமல் அன்பை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொடுப்பதால் அவர்மேலேயே சினம் உண்டாகிறது. இந்த இரண்டு நிலைகளிலும் நோக்கம் ஒன்றுதான்: தன் அன்புக்குரியவரைப் பாதுகாத்துக்கொள்வது.

பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது எருசலேம் நகரம் கேட்பாரற்றுக் கிடந்தது. யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த கண்டுகொள்ளாத்தன்மைக்கு மாற்றாக அன்பு இப்போது பற்றியெரிகிறது. ஆண்டவராகிய கடவுள் தன் அன்பின் மிகுதியால் எருசலேமை மீண்டும் அதன் முந்தைய நன்னிலைக்குக் கொண்டுவருகின்றார். 

'எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள் ... சிறுவரும் சிறுமியரும் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்' என்று நகரில் நிலவுகின்ற அமைதியையும் மகிழ்ச்சியையும் ஆண்டவராகிய கடவுள் எடுத்துரைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், சீடர்கள் தங்களுக்குள் பெரியவர் யார் என்று விவாதம் செய்கின்றனர். அன்பு என்ற ஆழமான உறவில் வருகின்ற முதன்மையான பிரச்சினையே, 'யார் பெரியவர்?' என்ற கேள்விதான். அன்பு இந்தக் கேள்விக்கு இடம் தரக் கூடாது.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் செய்தி என்ன?

(அ) கடவுள் நம்மேல் அன்புவெறி கொண்டிருக்கின்றார். ஆக, நம்மை எல்லாத் தீங்கிலிருந்தும் அவர் காப்பாற்றுவார். சில வேளைகளில் நாம் தவறும்போது அவரின் சினம் நம்மேலும் விழுகிறது.

(ஆ) கடவுள் எப்போதும் நம் வாழ்க்கை என்னும் நகரை அமைதியாலும் மகிழ்ச்சியாலும் நிரப்புகிறார். நமக்குத் தேவையானதெல்லாம் கொஞ்சம் பொறுமையே.

(இ) 'பெரியவராக அவர் இருந்தால் போதும்' என்று நாம் இறைவனையும் அடுத்தவரையும் நினைத்தால் போதும். அன்பு அனைத்திலும் மேலோங்கி இருக்கும்.


1 comment:

  1. “ அன்பு வெறி” பெற்றெடுக்கும் விஷயமே “சினம்.” தான் நேசிப்பவரைப் பாதுகாக்க இயலாமையின் விளைவு. இறைவனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒருகாலத்தில் தன்னால் புறக்கணிக்கப்பட்ட எருசலேமை தற்போது தன் அன்பு எனும் கட்டுக்குள் கொண்டு வருகிறார்.” எருசலேமின் நகர்களில் கிழவரும்,கிழவியரும் அமர்ந்திருக்க, சிறுவரும்,சிறுமியரும் மீண்டும் தெருக்களில் விளையாடும்” முந்தைய நிலமை. இதே நிலமை நம் வாழ்விலும் ஏற்படுகிறது.நாம் நன்னெறியில் நடக்கையில் நம்மீது அன்பு கொண்டிருப்பவர்,நெறி பிறழ்கையில் நம்மீது சினம் கொள்வதும் நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகள்.
    “ அவரை”ப் பெரியவராக்கும் பொறுமை மட்டும் நமக்கிருந்தால் போதும்…நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாலும், அமைதியாலும் நிரப்புவார்.இத்தனைக்கும் முன்முதற்காரணமான “ அன்பு” நம் மனம் எனும் குடங்களை நிரப்பட்டும்! நம் வாழ்வு சிறக்க, நாம் நமதாக்கிக்கொள்ள வேண்டிய சில பண்புகளை பட்டியலிட்ட தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete